அளந்து அத்துக் காட்டாத தாசில்தார் மற்றும் சர்வேயருக்கு 35 ஆயிரம் அபராதம் !
அளந்து அத்துக் காட்டாத தாசில்தார் மற்றும் சர்வேயருக்கு 35 ஆயிரம் அபராதம் !
இடத்தை அளந்து அத்துக்காட்டுமாறு வருவாய்த்துறைக்கு பணம் செலுத்திய ரசீதோடு மூன்றாண்டு காத்திருந்த விவசாயி தொடுத்த வழக்கில், தருமபுரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் சர்வேயருக்கு 35,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம், கோம்பூரைச் சேர்ந்த விவசாயி க.பழனியப்பன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து நான் கெல்லை காட்டுமாறு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர்-2021 இல் விண்ணப்பித்திருக்கிறார். ஆறு மாத காலத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருக்கிறார். பதிவு மூப்பின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதாக பதில் வந்திருக்கிறது. நடையாய் நடந்து, ஒரு வருடம் முடிந்த நிலையில், டிசம்பர்-2022 இல் ஆர்.டி.ஓ.வுக்கு புகாராக தெரிவித்திருக்கிறார்.
”அதுக்கு அப்புறம்தான் இடத்தை அளக்குறேனு வந்தாங்க. சரியா இடத்தை அவங்களால காட்ட முடியல. பத்தடி தள்ளி இருக்கு. இருபது அடி இங்க சேர்த்து வரும்னு ரெண்டு இடத்த காட்டினாங்க. பக்கத்து காட்டு காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க. அப்புறம், கரும்பு போட்ருக்க. எங்களால வயல்ல இறங்கி அளக்க முடியாது. அப்புறம் வாரோம்னுட்டு போயிட்டாக. பொறவு வரவே இல்லை. ஜமாபந்தி நடந்துச்சு. அப்பவும் மனு போட்டேன். அப்போ ஒரு வாட்டி வந்தாங்க. பாதி அளந்து முடிக்கிறதுகாட்டியும் ஆர்டிஓ மீட்டிங்னு ஓடிட்டாங்க. இப்படியே வருசம் மூனு ஆச்சேனுதான் வழக்கு போட்டேன்.
அதுக்கு பொறவுதான். இடத்த அளந்து கொடுத்தாச்சுனு கோர்ட்ல சொன்னாங்க. அளக்க வந்தது உண்மை. ஆனா, முழுசா அளந்து அத்துலாம் காட்டலை. பக்கத்து காட்டு கார்கள் எடத்துல இருபது அடி இருக்குனு இவங்க வாய்ல சொல்லிட்டு போயிட்டா, நான் அவர் கூட மல்லுக்கு போறதா? முறைப்படி செஞ்சிருந்தா, என்கிட்ட, பக்கத்து காட்டுகார்கள் கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கனும். அளந்து அத்து காட்டினதுக்கு ஆதாரமா சர்டிபிகேட் கொடுத்திருக்கனும்ல. அது எதுவும் இல்லைனு வாதிட்டோம்.
முக்கியமா, நான் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இப்போ தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். என்கிட்ட லஞ்சம் கேட்கவும் முடியாது. கேட்டாலும் கொடுக்கவும் மாட்டேன். அதனாலதான் இவ்வளவு லேட் பன்னிட்டாங்க.
இழப்பீடா 25 ஆயிரமும், வழக்கு செலவா 10 ஆயிரமும் ரெண்டு பேரும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ ஒரு மாசத்துக்குள்ள கொடுக்கனும்னு தீர்ப்பு கொடுத்திருக்காங்க. இந்த வழக்கை வழக்கறிஞர் தருண் விஜய்தான் நடத்திக்கொடுத்தாரு.” என்கிறார், விவசாயி பழனியப்பன்.
– அங்குசம் செய்திப் பிரிவு.
Hats off Mr. Pazhaniyapppan.