பெருமை எதற்கு???
என் தாய் என்னிடம் பேசிய முதல் மொழி தமிழ்
ஆதலால் நான் தமிழ் பேசுகிறேன்..எழுதுகிறேன்..
நான் தமிழில் பேசுவதும் எழுதுவதும்
நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று
மிக மிக இயற்கையானது.
இதில் என்ன வியப்பு இருக்கிறது?
பெருமை இருக்கிறது?
என் தாயிடம் பால் பருகியதைப் பெருமையாகப் பேச முடியுமா?
நான் தமிழில் எழுதுவதும் பேசுவதும் அப்படித்தான்
எனது சிந்தனை எனது தாய்மொழியில் தான் இருக்கும்.
அவரவர் தாய்மொழியில் அவரவர் சிந்தனை இருக்கும்.
என் தாய் எனக்குச் சிறந்தவள்
அவள் ஏழையாக இருந்தாலும் சரி
செல்வச்சீமாட்டியாக இருந்தாலும் சரியே..
கந்தல் சேலை கட்டினாலும் சரி
கூந்தலுக்கு கூட ஆபரணம் பூட்டுபவளாக இருந்தாலும் சரியே..
எனக்கு கூழ் கஞ்சி புகட்டினாலும் சரி
தங்க முலாம் பூசிய கிண்ணத்தில் தேனமுது புகட்டினாலும் சரியே..
அவள் எனக்குச் சிறந்தவள் தான்…
என் தாய் தான் உலகிலேயே சிறந்தவள் என்று யாரும் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.
காரணம் ஒருவனுக்கு ஒரு தாய் தான்.
அந்தத் தாய் தான் அவனுக்கு உலகம். ஆகவே உலகத்திலேயே சிறந்த தாய் என்னவள் தான் என்று கூறலாம்
ஆனால் அடுத்தவன் தாயை இழிவானவள் என்று கூறுவது தகுமா?
என் தாய் எனக்கு எப்படியோ ?
அப்படியே அவனுக்கு அவன் தாய்.
என் மொழி எனக்கு எப்படியோ ?
அப்படியே அவனுக்கு அவன் மொழி
என் மதம் எனக்கு எப்படியோ ?
அப்படியே அவனுக்கு அவன் மதம்.
தமிழுக்கு இத்தனை சிறந்த தொன்மை இல்லாவிடினும் சரியே.
இத்தனை சிறந்த காவியங்கள் தமிழில் இல்லாதிருந்தாலும் சரியே..
தமிழ் எனக்குச் சிறந்த மொழியாகத்தான் அப்போதும் இருந்திருக்கும்..
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சன்றோ..
அடுத்தவனின் உடமையை மதிப்பவனே
அடுத்தவனின் இருப்பை மதிப்பவனே
உண்மையில் மேன்மையானவன்.
ஏன்
நான் தமிழனாக பிறக்காமல்
மலையாளியாகப் பிறந்திருந்தால்
அதனால் என்ன சிறுமை எனக்கு வந்து விடப்போகிறது?
தமிழனை விட சிங்களம் பேசுபவனோ
மலையாளியோ தெலுங்கனோ ஹிந்தி பேசுபவனோ
தாழ்ந்தவனும் இல்லை.
உயர்ந்தவனும் இல்லை..
ஏன் சில ஆயிரம் பேர் மட்டும் பேசும் படுகர் மொழி பேசுவோர் யாருக்கு இளைத்தோர் இங்கு?
பேசும் மொழியால் மேன்மை கிடையாது.
செய்யும் நன்மையால் மேன்மை இருக்கிறது
பிறந்த மதத்தால் மேன்மை கிடையாது
பழகும் விதத்தால் மேன்மை இருக்கிறது.
பிறந்த ஊரால் சாதியால் மேன்மை கிடையாது.
இறக்கும் போது எத்தனை பேர் நமக்காக உண்மையாக கண்ணீர் விடுகிறார்கள்? என்பதில் இருக்கிறது மேன்மை
சாதியால் மேன்மை கீழ்மை கற்பிப்பது
நம் மனநிலையில் உள்ள கோளாறு
சிந்தித்தலில் உள்ள சீர்கேடு.
இதை அகற்ற வல்ல கருவி ” சிந்தனையைத் தூண்டும் கல்வியும்”
அதனால் ஏற்படும்
சமூக நீதி சிந்தனையுமே ஆகும்.
வள்ளுவர் கல்வியால் மட்டுமே ஒரு அவையில் முன்னும் பின்னும் உண்டே அன்றி , ஒருவனின் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
அதாவது
பிறப்பால் அனைவருமே சமம்
அவர் கற்ற கல்வியிலும்
அவர் தொழிலில் செயல்படும் திறமையாலும் உழைப்பாலும் வேறுபாடு இருக்கலாம் என்கிறார்.
மொழியால்
சாதியால்
மதத்தால்
இனத்தால் நாம் எல்லாம் வேறுபட்டாலும்
உதிரத்தின் நிறத்தால்
வலி உணரும் தோலால்
சுவை உணரும் நாவால்
புணரும் போது கிடைக்கும் இன்பத்தால்
சுவாசிக்கும் காற்றால்
பருகும் நீரால்
நாம் அனைவரும் சமமானவர்களே..
முஸ்லிமாக நான் பிறந்தேன்
ஹிந்துவாக நீ பிறந்தாய்
கிறிஸ்தவனாக அவன் பிறந்தான்
அனைவருக்கும்
பசி
பிணி
காதல்
காமம்
கண்ணீர்
பிரிவு
வலி அனைத்தையும் சமமாகத்தானே வாழ்க்கை வழங்குகிறது
வேறுபடுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு இங்கு.
ஒற்றுமையாக ஒரு காரணம் கூடவா இல்லை?
என்னை விடவும் இங்கு யாரும் தாழ்ந்தோரும் இல்லை. மேன்மையானவரும் இல்லை.

சிலர் பதவியைக் கொண்டு
அதிகாரத்தைக் கொண்டு
பிறரை அடக்கிட தன்னை மேன்மையானவர் போல் காட்ட முயலலாம்
அது செயற்கையே
இன்னும் சிலர்
தங்கள் சுயநலத்துக்காக
தங்களின் தேவைக்காக
குனிந்து கால்தொட்டு பொய்யாக வணங்கலாம்
அஞ்சுவதைப் போல நடிக்கலாம்
அதுவும் செயற்கையே
இது எதுவும் நிலைக்காது.
கால ஓட்டத்தில்
எத்தனை பெரிய ரோமாபுரியும் வீழும்.
அனைவரும் சமம்.
என் ஊர் சிறந்தது
என் மொழி சிறந்தது.
என் இனம் சிறந்தது
என் மதம் சிறந்தது
என்று கூறும்/நினைக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
ஆனால் என்னுடயைதை விட இன்னொன்று மோசமானது மட்டமானது என்று கூறும் உரிமை யாருக்கும் இங்கு இல்லை.
நம் வேற்றுமையை வைத்து பெருமை அடிப்பதை விட்டு விட்டு
ஒற்றுமையின் அருமை உணர்வோம்
ஒற்றுமை எனும் கயிறை இறுகப்பற்றிக்கொள்வோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா….”
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.