உச்சரிப்பால் என்னை கவர்ந்த தேசபக்தன்!
அப்பொழுது நான் சிறுவன்…
ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பகுதியில், மிக துள்ளிய தமிழ் உச்சரிப்போடு ஒரு குரல் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த குரலை கேட்ட நான், எங்கே இந்த குரல் ஒலிக்கிறது என்று தேடிக் கொண்டு, சைக்கிளில் பயணித்தேன்.
ஒரு சிறிய மேடையில், பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கு முன்னால் இவர் சிரித்த முகத்தோடு, தமிழ் உச்சரிப்பு என்றால் அதுதான் உச்சரிப்பு… அத்தகைய உச்சரித்த குரல் நான் எங்கும் கேட்டதே கிடையாது.
அந்த சிறந்த உச்சரித்த தமிழை கேட்டுக் கொண்டே முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் பேசுவது முழுக்க முழுக்க அரசியல்… என்ன பேசுகிறார் என்றே எனக்கு விளங்கவில்லை. இருந்த போதிலும், அந்த தமிழ் உச்சரிப்பு அவரின் மேல் என்னைக் கவர்ந்து இழுத்தது.
நான் கவனிப்பதைக் கண்டவர், இரண்டு மூன்று முறை என்னை பார்த்தே சில விஷயத்தை கூறிக் கொண்டிருந்தார். நானும் அதற்கு தலையசைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு அரசியல் தெரியாது. (இப்போதும்கூட)
ஏதோ பேசுகிறார்… ஆனால் அவரின் பேச்சு நன்றாக இருக்கிறது அவ்வளவுதான்.
பேச்சு முடிந்து மேடையை விட்டு கீழே இறங்கினார். அவருக்கு கைகளை கொடுத்தபடியே…
“மிக அருமையாக இருந்தது உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அதற்கு நான் இன்று அடிமையாகி விட்டேன்” என்று காலில் விழுந்து வணங்கினேன்.
சிரித்துக் கொண்டே என் தலையில் கை வைத்தவர்,

“என் பேச்சால் கட்சி வளருதோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் வளரும்” என்று சிரித்தபடியே காரில் அமர்ந்துச் சென்றார். கூடியிருந்தவர்களும் வாய்விட்டுச் சிரித்தாா்கள். அதை என்னால் இன்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.
அன்று முதல் அவரை நான் பின் தொடர ஆரம்பித்தேன். இல.கணேசன் அவர்கள் எங்கு சென்றாலும் நானும் அங்கு இருப்பேன். அவரின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பேன்.
நாகாலாந்து கவர்னராக பொறுப்பேற்ற பிறகு, பெரியதாக அவரின் பேட்டிகளோ, அவரது கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசுவதையோ நான் பார்க்கவில்லை. அது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அவரது உச்சரிப்பு பேச்சைக் கேட்க ஏங்கினேன்.
இதற்கெல்லாம் மிகப்பெரிய பேரிடியாய் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது, அவரின் மரணம்.
அவரின் மரணச் செய்தி கேட்டு இன்னும் நான் ஏமாற்றமடைந்தேன், சரியாக சுதந்திர தினத்தன்று இல. கணேசன் அவர்கள் மறைந்தார் என்பதனை எண்ணி பூரிப்படைவதா அல்லது வருத்தம் அடைவதா என்பதே எனக்கு தெரியவில்லை.
மரணம் என்பது இயற்கை தான் என்ற போதிலும், மிகச் சிறந்த தேச பக்தனை நாடு இழந்து விட்டதே!
தேசத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டின் மீது அலாதி அன்பு வைத்திருந்த ஒரு நாட்டுப்பற்றாளரை இழந்து விட்டோமே… என்கின்ற வருத்தம் ஏற்பட்டது.
இறைவனிடத்தில் கேட்பதெல்லாம் ஒன்றுதான். “மீண்டும் இந்த நாட்டிற்கு இல. கணேசன் தேவை. எங்களுக்கு மீண்டும் இல.கணேசனை கொடுத்து அனுப்பிவிடு இறைவா…” என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
— உங்கள் ஜோல்னா ரெங்கா