அரசு நிலத்தை தாரை வார்த்தார் ? விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கினார் ? – சர்ச்சையில் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் சரவணன் !
அரசு நிலத்தை தாரை வார்த்தார் ? விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கினார் ? – சர்ச்சையில் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் சரவணன் ! தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் இப்பகுதிகளிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களை முறைகேடான முறையில், தனியார் பெயர்களில் பத்திரப்பதிவு செய்வதாகவும்; இவ்வாறு பி.பள்ளிப்பட்டு பகுதியை ஓட்டி ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு போலி பத்திரம் செய்து கொடுத்ததாகவும்; அதேபோல, மோலையனூர் அடுத்த தேவராஜ்புரம் போதைக்காடு பகுதியில் வெற்றிலை பாக்கு மற்றும் தென்னந்தோப்பு விவசாய விளைநிலங்களை அந்த பகுதி வட்டார அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன், சார்பதிவாளர் சரவணன் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு மனைகளாக மாற்ற அப்ரூவல் வழங்கி உள்ளதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்த மோசடி பத்திரப்பதிவு குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் இவருக்கும் , சம்மந்தப்பட்ட துறைக்கும், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மேலும், அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பான்கார்டு இணைக்காமலே பத்திரப்பதிவு செய்து பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வருமான வரித்துறைக்குத் தகவல் பறந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகளையடுத்து, சர்ச்சைக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும் சோதனை நடத்தலாம் என கூறுகின்றனர் .
சமூக ஊடகங்களில் வட்டமடித்து வரும் இக்குற்றச்சாட்டுகள் குறித்து சார் பதிவாளர் சரவணனிடம் பேசினோம். நமது கேள்விகளுக்கு மழுப்பலாக பேசியவர், “நீங்கள் சொல்வது போல, நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு பெட்டிசன் உங்களிடம் இருந்தா எடுத்துட்டு நேரில் வாங்க” எனக்கூறி அழைப்பை துண்டித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் சாய்கீதா லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கி சிறைக்கு சென்றார். இந்நிலையில் தற்போது பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் சரவணன் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது தர்மபுரி மாவட்டத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கா. மணிகண்டன்