டாஸ்மாக் எதிர்த்து மக்கள் போராட்டம் – செய்தி வெளியிட்ட சத்யம் தொலைக்காட்சி செய்தியாளருக்கு மிரட்டல் !
டாஸ்மாக் எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட சத்யம் தொலைக்காட்சி செய்தியாளருக்கு மிரட்டல் ! தேனி பூதப்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடை மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரம் டாஸ்மாக் பார் இயங்கிவருவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இந்த போராட்ட செய்தியை ஒளிபரப்பு செய்த சத்யம் தொலைக்காட்சியின் தேனி மாவட்ட செய்தியாளர் ப.ஜெயபால் என்பவரை, மேற்படி டாஸ்மாக் பாரை நடத்திவரும் திமுகவைச் சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் மொக்கைசாமி மற்றும் அவருடன் வந்திருந்த சில நபர்கள் செய்தியாளர் ப.ஜெயபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
அவரது கைப்பேசியைத் தட்டி பறித்ததோடு, வண்டியில் இருந்த பணம், பத்திரம் ,கையில் வைத்திருந்த சத்யம் தொலைக்காட்சியின் லோகோவையும் பறித்துச் சென்றிருக்கின்றனர்.
தேனி பூதப்புரத்தில் இயங்கிவரும் மேற்படி டாஸ்மாக் கடையோடு இணைந்து செயல்படும் டாஸ்மாக் பார் 24 மணிநேரமும் செயல்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றனர்.
குறிப்பாக, மேற்படி டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் அதே தெருவில்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருப்பதாகவும்; குறிப்பாக கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் இந்த டாஸ்மாக் கடையை தாண்டி செல்வதற்கே அச்சப்படுவதாகவும்; இதன் காரணமாக இரண்டு தெருக்களை சுற்றிக்கொண்டுதான் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே சென்றுவருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இரவு நேரங்களில் தெருவிலேயே வாகனங்களை நிறுத்திவிடுவது; குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது; ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என்பது தொடர்கதையாக இருந்து வருவதாகவும் நெருக்கமான குடியிருப்பு பகுதிக்குள் இவ்வாறு குடிகாரர்களின் அழிச்சாட்டியம் காரணமாக பெண்கள் தெருவில் நடமாடவே முடியாத நிலை நிலவிவருவதாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை, செய்தியாளர் என்ற முறையில் செய்தி வெளியிட்டதற்காக சட்டவிரோதமாக பார் நடத்திவரும் திமுகவைச் சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் மொக்கைசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
அங்குசம் செய்திப்பிரிவு.