தாய்மொழியிலேயே தோல்வியா?
ஆசிரியர் தேர்வில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி. இது இப்போது பலராலும் ஏளனமாக விமர்சிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தாய்மொழியிலேயே தோல்வியா? இதுதான் ஆசிரியர்களின் யோக்கியதை. இதுதான் நம் கல்வியின் தரம் என்றெல்லாம் விமர்சனங்கள். இந்தச் செய்திகளில் மெல்லிய குழப்பம் உள்ளது. முதலில் தெளிவு படுத்திக்கொள்வோம்.
- இந்தத் தேர்வு எழுதிய எவரும் ஆசிரியர்கள் அல்ல. ஆசிரியர் ஆக விரும்பித் தேர்வு எழுதியவர்கள். போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்து அடிப்படைத்தகுதி இல்லாமல் பலர் வெளியேறுவதைப்போலத்தான் இதுவும்.
- தாய்மொழியிலேயே தோல்வியா? இதுவும் தவறான வாதம். யாரும் அடிப்படைத் தமிழ் பேசத் தெரியாமலோ, எழுதத் தெரியாமலோ இதில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ்த் தேர்வு என்பது, தாய்மொழி என்பதாலேயே எளிதானது அல்ல. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே 100 மார்க் எடுக்கலாம் என பாமரத்தனமாக எண்ணலாகாது. மற்றத் தேர்வுகளை விட தமிழ்த் தேர்வு கடினம். ஏன் என்று பார்ப்போம்.
ஐ ஏ எஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழ் மாணவர்கள் கூட ஆப்ஷ்னலில் தமிழ்த் தாளை தவிர்த்து விடுவதைப் பார்த்திருப்போம். ஏனென்றால் சமூக அறிவியலை விட , பொலிட்டிக்கல் சயின்ஸை விட தமிழ் பேப்பர் கடினம். ஏன் கடினம்?
தமிழ் வரலாறில் மூத்த மொழி. தொல்காப்பியத்தில் ஆரம்பித்து, புராணம், இதிகாசம் , சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நவீன இலக்கியம், கடுமையான இலக்கண விதிகள் என கேள்வியில் நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள்.
உதாரணமாகத் தற்போது தமிழறிஞர்கள் எனச் சொல்லப்படும் அனைவரும் இந்தத் தமிழ் தேர்வு எழுதினால் 50 % பாஸ் செய்தாலே ஆச்சரியம்.
தற்போதிருக்கும் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் இந்தத் தேர்வு எழுதினால் 100 % ஃபெயில் ஆவார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும். இவர்களில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்த ஓரிரு எழுத்தாளர்கள் மட்டும் பாஸ் ஆகலாம். ( புலவர் வேறு எழுத்தாளர் வேறு. ஒரு புரிதலுக்காக இதை எழுதுகிறேனே தவிர எழுத்தாளர்களை அசிங்கப்படுத்த அல்ல. இதனால் அவர்களுக்கு எந்தத் தரக்குறைவும் இல்லை)
தமிழ் தாய்மொழி என்பதாலேயே சுலபமாக பாஸ் செய்து விட முடியும் என்ற பொதுவான எண்ணம் தவறானது. மற்ற பேப்பர்களை விட தமிழில் பாஸ் செய்வதுதான் கடினம். சிலபஸ் அதிகம், கேள்விகளின் நுட்பமும் அதிகம். ஒரு மொழித்தாள்தானே என சுலபமாகத் தமிழை எடுத்துக்கொள்ள முடியாது.
இத்தனை பேர் ஃபெயில் என்பதை வைத்து தேர்வு கடினமாக வைத்திருக்கிறார்கள். ஆசிரியர்களை நன்கு வடிகட்டியே எடுக்கிறார்கள் என பாசிடிவாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மொத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்கள் : – 1996. 2.36 லட்சம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை? இதில் என்ன அரசியல் ?
கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் 40 % மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று இருக்கையில், 85,000 பேர் தோல்வியடைவது மிக மிக இயல்பானதுதான். கடினமானத் தமிழ்த் தேர்வில் இது சகஜம் தான்.
வெகு சுலபமாகத் தேர்வு வினாக்களைத் தயாரித்து, பலரையும் தமிழில் பாஸ் போட்டால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தானே?
1996 இடங்களுக்கு 2.36 லட்சத்தில் பல ஃபில்டர்கள் போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் தமிழ் ஒரு முக்கிய ஃபில்டராக செயல்பட்டிருக்கிறது.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் சில லட்சம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்திருக்கிறது. மாநில அரசுக்கு அசிங்கம் அது. அது போல ஏதேனும் நடந்தால் விமர்சிக்கலாமே அன்றி, வெட்டியாக இதைப்போன்ற பிரச்சனைகளை எல்லாம் அரசியல் ஆக்கக் கூடாது. அப்படி ஆக்கினால்….அரசியல் அழுத்தத்தால், அடுத்தடுத்தத் தேர்வுகளில் தமிழ்த்தாள் மிக மிக எளிமையாக்கப்பட்டு, தமிழே தெரியாதவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு , 94 % தமிழில் தேர்ச்சி என அறிவிக்கப்படும். இதுதான் தேவையா?
— அராத்து








Comments are closed, but trackbacks and pingbacks are open.