அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது !

0

அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது  !

சுயநலம், சூழ்ச்சி, சூதுவாது தெரியாத மனிதர்களை சமதளப் பரப்பில் காண்பது மிகவும் அரிது. ஆனால் மலைவாழ் மக்கள் மத்தியில் எங்கும் நிறைந்திருப்பார்கள். சில வருஷத்துக்கு முன்னாடி திருவண்ணாமலை ஜவ்வாது மலைக்கு ரிப்போர்ட் வேலையாக போயிருந்தேன். அங்கிருந்த மக்களை சந்தித்து விட்டு வீடு திரும்புவதற்குள் இருட்டி விட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த வீடுகளில் எங்காவது தங்கி விடலாம் என்று நினைத்து ஒரு வீட்டில் கேட்டேன். அவர்கள் சிறிதும் யோசிக்காமல் தங்குவதற்கு இடமும் கொடுத்து இரவு, காலை இரண்டு வேலை சோறும் போட்டார்கள். அதேபோல கேரளாவிற்கு ரிப்போர்ட் வேலையாக நானும் தோழர் ராஜனும் சென்றிருந்த போது, இரவு தங்குவதற்கு யாரென்றே தெரியாத, ஆனால் தமிழ் தெரிந்த ஒருவரிடம் பேசி அவர் வீட்டில் தங்கினோம். உண்மையில் சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அதை என் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாது.

இப்படி மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் நற்பண்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளிமலைக்கு சென்றபோது இருட்டி விட்டது. லேசாக குளிர் எடுத்துக்கொண்டது. இருட்டில், அதுவும் குளிரில் எப்படி கீழே இறங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த கடை கண்ணில் பட்டது. வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்றோம்.

- Advertisement -

- Advertisement -

சிரித்த முகத்துடன்…… “வாங்க, என்ன வேணும் என்றார்” கடைக்காரர். கடையில் ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேப்பை காமித்து, “இந்த உல்லன் கேப் எவ்ளோ.?” என்றேன். “50 ரூபா பா..” என்று சொல்லிவிட்டு ரேக்கில் இருந்த கேப்களை எடுத்து மேஜையின் மீது கொட்டினார்.

ஒவ்வொரு கேப்பாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். எதை எடுத்தாலும் அதன் சிறப்பினை விவரித்துக்கொண்டே இருந்தார் கடைக்காரர். வேற ஒரு கேப் கண்ணில் பட அத எடுங்க என்றோம். எடுத்தவுடன் சொன்னார்…. “இதிலெல்லாம் கொஞ்சம் டேமேஜ் இருக்கு” என்றார். எவ்வளவு நேர்மையான மனிதர்.

4 bismi svs

அது பிரச்சனை இல்லை. இதன் விலை எவ்ளோ.? “இதுவும் 50 ரூபா தான் பா..” “முன்னாடி பார்த்தத விட இது சூப்பரா இருக்குல..” “ஆமாம்பா.. நானே கல்கத்தாக்கு போய்ட்டு வாங்கிட்டு வருவேன். குளிருக்கு நல்லா இதமா இருக்கும்” என்றார். அவர் சொன்னது உண்மைதான். சமதளப் பிரதேசத்தில் இதன் விலை 100 ரூபாய் இருக்கும். ஆனால் வெறும் 50 க்கு விற்கிறார். இரண்டு கேப்களை வாங்கி ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொண்டோம்.

வெங்கட்ராமன்
வெங்கட்ராமன்

பணம் செலுத்துவதற்கு அங்கிருந்த கியு .ஆரை ஸ்கேன் செய்ய முயற்சித்த போது தான் டவர் இல்லை என்று தெரிந்தது.  “டவரே இல்லணா…..” என்று இழுத்தேன்… ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் கீழே சென்று அனுப்பி விடுங்கள் என்றார். இந்த பதிலை நாங்கள் எதிர் பார்க்கவே இல்லை.

என்னணா சொல்றிங்க… “ஆமாம் பா…ஒருமுறை சென்னையில் இருந்து வந்தவர்கள் 7000 ரூபாய்க்கு துணி வாங்கினார்கள். அப்போதும் இதே பிரச்சினை இருந்தது. நீங்கள் கீழே சென்று அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டேன். நீங்கள் எடுத்து செல்லுங்கள்” என்றார் சிரித்த முகத்துடன்…

நம்பிக்கை தானே எல்லாம் என்ற கிரிஞ்ச் வார்த்தை எல்லாம் அவர் உபயோகிக்கவே இல்லை. சரிங்கணா….. என்று சொல்லி விட்டு தொடர்பு எண் வாங்கி கொண்டு கிளம்பினோம். இறுதியாக “உங்க பேர் என்ன..” என்றேன். “வெங்கட்ராமன்.” என்றார்.

“உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கவா? ” “சிரித்தார்..” அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

முகநூலில் : ரஞ்சித்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.