விருதுநகர் : உடல் உறுப்பு தானம் செய்த பட்டாசு கூலி தொழிலாளி குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய முதலமைச்சர் !
விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தை திறந்துவைத்ததோடு, பட்டம்புத்தூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது உள்ளிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கும் பணிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
கடந்த செப்.- 30 ஆம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளி ராமரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு உடல் அவர் சொந்த ஊரான சாத்தூர் தாலுகா, மேட்டமலை கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும், உயிரிழந்த ராமரின் மனைவி துளசிமணிக்கு 15 வயதுடைய காளீஸ்வரி, என்ற மகளும், முகில்பாண்டி என்ற 5 வயதுடைய ஆண் குழந்தையும் இருப்பதாகவும் எனவே அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், நவ.-10 ஆம் தேதி பட்டாம்பத்தூரில் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானம் செய்த ராமரின் மனைவி துளசிமணிக்கு முதல்வரின் கரங்களால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி சிறப்பித்தார்.
— மாரீஸ்வரன்.