சமயபுரம் கோயிலில் நடந்த கொடுந்துயர் – சம்பவ இடத்திலேயே பலியான சோகம் !
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்தி தலங்களில் முதன்மையானதும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். அதன்படி சமயபுரம் வந்து தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த பக்தர்கள் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நதியா மற்றும் அவரது உறவினர்கள் படுத்து உறங்கி உள்ளனர். உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக, மண்டப சீலிங் மேற்கூரை காங்கிரட் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார்.
மேலும், இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சமயபுரம் போலீசார் பேரிக்காடுகளை கொண்டு சன்னதி வீதியை முற்றிலும் அடைத்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகளே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அருண்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.