பித்தளை சொம்பை காட்டி 9.5 இலட்சம் ஆட்டையப் போட்ட இரிடியம் கும்பல் !
ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மோசடி கும்பலிடமிருந்து 4.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார்(56). இவரிடம் தேனியை சேர்ந்த குமார் மற்றும் மற்றொரு நபரான ராஜேஷ் என்பவர் விலை மதிக்க முடியாத இரிடியம் உள்ளதாகவும் அதனை வாங்கி வெளியே விற்றால் ரூ.5 கோடி வரை வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர்.
இதனை நம்பிய ஜெயக்குமாரை, குடும்பத்துடன் தேனிக்கு வரவழைத்து அவரிடம் இருந்து ரூ.9.50 லட்சத்தை வாங்கி கொண்டு ஒரு பெட்டியில் பித்தளை செம்பை கையில் கொடுத்து அனுப்பியிருக்கிறது, மோசடிக் கும்பல்.
வெறும் பித்தளை சொம்பை கொடுத்து தான் ஏமாற்றப்பட்டதையடுத்து, ஜஸ்டின் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் முகவரி தெரியாத குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் பதுங்கியிருந்த குமார் என்ற ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் ஏமாற்றிய பணத்தை குமார் என்கிற ராஜ்குமாரும் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறான்.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரிடம் இருந்து ரூ.4.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.