செல்வ வளங்களுக்கு அதிபதியான மகா லெட்சுமியானவள், வரலெட்சுமி விரத நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. சகல செல்வங்களுக்கும் அதிபதியான மகாலெட் சுமியின் மற்றொரு அம்சமே வரலெட்சுமி. வெள்ளூர் கிராமத்தில் அவளே, ஐஸ்வர்ய மகாலெட்சுமியாக எழுந்தருளியிருக்கிறாள். அதுவும் சாதாரணமாக அல்ல. ஐஸ்வர்ய மகுடம் சூட்டி வீற்றிருக்கிறாள். அந்த மகுடமும் அவளாகச் சூட்டிக் கொண்டதல்ல. பரமேஸ் வரனே சூட்டிக் கொடுத்த மகுடம் அது. அதன் விபரங்களை அடுத்து பார்ப்போம். இந்தத் திருத்தலத்தில் பகவானால் ஐஸ்வர்ய மகுடம் சூட்டப்பட்ட தால், ஐஸ்வர்ய மகாலெட்சுமி என்றே அழைக்கப்படுகிறாள்.
திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் முசிறிக்கு முன்பாகச் சற்று உள்ளடங்கிய கிராமம் வெள்ளூர். திருச்சியில் இருந்து முப்பத்தைந்து கி.மீ. தூரம். முசிறியில் இருந்து பத்து கி.மீ. தூரம். வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாய ஸ்ரீ திருக்கா மேஸ்வரர் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாலெட்சுமி திருக்கோயில். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக ஆலயக் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சிறப்புகள் நிறைந்த திருத்தலம். அழகின் அழகன் ஆன மன்மதன் தான் இழந்த உடலை, இத்திருத்தலத்து சிவபெருமானை வழிபாட்டுத் தான் மீண்டும் தன் அழகிய உடலைத் திரும்பப் பெறுகிறான். அதுபோல ஒருமுறை இராவணனும் தன் உடல் வலிமை முழுவதையும் இழந்து விடுகிறான். திகைத்துப் போகிறான். தனக்கு உடல் வலிமையற்றுப் போனால், எல்லோரும் தன்னை ஒரு புழுவினைப் போல் அல்லவா பார்ப்பார்கள் என்று கவலைப் படுகிறான். அச்சம் கொள்கிறான். இங்கே வந்திருந்து திருக்காமேஸ்வரப் பெருமானை மனமுருகி வேண்டுகிறான். தொடர்ந்து வழிபடு கிறான். எல்லை இல்லாப் பெருங்கடவுள் இல்லையா பரமேஸ்வரன்??
மனம் கசிந்து நேரில் தோன்றி, இராவ ணன் இழந்த உடல் வலிமையைப் பெற்றுத் தந்து அவனுக்கு ஈஸ்வரப் பட்டம் சூட்டி மகிழ்கிறான். சுக்கிரன், குபேரன் வழிபட்ட திருத்தலம். சுக்கிரன் போகத்துக்கு அதிபதி. குபேரன் பணம் காசு பொருளாதாரத்துக்கு அதிபதி. குபேரன் தனாதிபதி. ஒருவரது ஜாதக பலாபலனில் சுக்கிர மகாதெசையில், அவருக்கு சகலவித போகங்களும் சௌகர்யங்களும் இயல்பாகவே கிடைக்கும். கிராமங்களில் “அவனுக்கு என்னய்யா… சுக்கிர தெசை ஓடிட்டு இருக்கு.” எனச் சொல்வார்கள். குபேரன் கொட்டிக் கொடுக்க நினைத்து விட்டால் அவன், பணம் காசினை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருப்பான். இந்த இடத்தில் தான் ஐஸ்வர்ய மகாலெட்சுமியின் அருளும் இணைந்து சிறக்கச் செய்கிறது.
இத்திருக்கோயிலின் குபேர பாகத்தில் வில்வ மர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் தவம் செய்யும் திருக்கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மகாலெட்சுமி அமைந்துள்ளாள். விசயத்துக்கு வந்து விடுவோம். இந்தத் திருக்கோயிலில் மட்டும் ஏன், மகாலெட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடம்? இங்கு மாகாலெட்சுமியே வில்வ மரமாகத் தோன்றி, சிவலிங்கத் திருமேனி மீது வில்வ மழை பொழிந்து வழிபடுகிறாள். அதனைப் பரமேஸ்வரன் பார்த்துக் கொண்டிருப்பாரா என்ன? மகாலெட்சுமிக்கு அந்தப் பரமேஸ்வரனே ஐஸ்வர்ய மகுடம் சூட்டுகிறார். இத்திருத்தலத்தின் மகத்துவம் இது மட்டுமல்ல.
மகாவிஷ்ணுவுக்கும் மகாலெட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைத் தீர்த்து, மகாலெட்சுமியை ஸ்ரீவத்ச முத்திரையுடன் கூடிய சாளக்கிரமமாகச் செய்து மகாவிஷ்ணுவின் மார்பினில் மகாலெட்சுமியை ஸ்தாபனம் செய்த திருத்தலம். மகாலெட்சுமி சகல ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதியான தலம். சுக்கிரன், குபேரன் ஆகியோர் நித்தமும் இத்தலத்தில் சிவனையும் ஐஸ்வர்ய மகாலெட்சுமியையும் பூஜைகள் செய்து வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாலெட்சுமி வீற்றிருக்கும் திருத்தலங்களில் வழிபடுவது, சுக்கிரதோஷ நிவர்த்தியினைத் தருவதாகும். வெள்ளூரில் மகாலெட்சுமியானவள் தன்னுடைய மனச் சங்கடங்கள் நீங்கி மகாவிஷ்ணுவுடன் இணைந்து ஐஸ்வர்ய மகுடத்துடன் சந்தோசமாக வில்வ மர நிழலில் தவம் செய்யும் திருக்கோலத்தில் அற்புதக் காட்சியருளுகிறாள்.
“பெரும்பாலும் பச்சைப் பட்டுடுத்தி பாங்குடனே வீற்றிருப்பாள் ஐஸ்வர்ய மகாலெட்சுமி. அவளது ஐஸ்வர்ய மகுடம், அனைத்து செல்வங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ள பரிபூரணம். அந்தப் பரிபூரணமே பக்தர்களுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. எந்த வில்வமரமாகத் தானே உருவெடுத்துப் பரமேஸ்வரன் மீது வில்வ மலர்களை அன்புடன் சொரிந்து வழிபட்டாளோ, அதே வில்வ மர நிழலில் எழுந்தருளியுள்ளாள் ஐஸ்வர்ய மகாலெட்சுமி. மேலும் இது சுக்கிரதோஷ நிவர்த்தி தலமும் கூட. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் சுக்கிரதோஷமும் விலகும். நீங்கள் விரும்பும் சகல செல்வங்களும் குறைவின்றி உங்களை வந்தடையும். வேறென்ன வேண்டும்? ஐஸ்வர்ய மகாலெட்சுமியை சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை நேரமான விடியற்காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் வணங்கி வழிபடுவது அனைத்து தோஷங்களையும் நிவர்த்திக்கச் செய்வதாகும். அந்த நேரம் மிகச் சிறப்பானது. அந்த நேரத்தில் வந்து போக, வாய்ப்பு அல்லது சூழல் கிட்டாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் ஐஸ்வர்ய மகாலெட்சுமியினை வழிபட்டாலே போதும். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையான சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பாள் வெள்ளூர் ஐஸ்வர்ய மகாலெட்சுமி.” எனக் கூறுகிறார் திருக்கோயிலின் அர்ச்சகர் பா. மதுசூதன குருக்கள்.