டெல்டா ஆளுமையின் குடைச்சல் ; அடைக்கலம் கொடுக்கும் அறிவாலயம் – அதிமுகவின் சரிவு !
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடிக்கு நெருக்கமானவராகவும் மாநில நிர்வாகிகளில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். என்னதான் வைத்தியலிங்கம் மாநில அரசியலில் வளர்ந்து கொண்டிருந்தாலும் மாவட்ட அரசியலில் அவருக்கான எதிர்ப்பு ஒவ்வொரு சீசனிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அமைச்சராக துரைக்கண்ணு பொறுப்பேற்றது முதல் வைத்தியலிங்கத்திற்கும், துரைக்கண்ணுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது. இப்படி டெல்டா பகுதிகளில் வைத்தியலிங்கத்தை முந்தி அரசியல் செய்ய நினைத்தால், நினைத்தவர்களை ஓரங்கட்டி விடுவார் அமைச்சர் வைத்தியலிங்கம் என்ற சொல் தஞ்சை பகுதியில் அதிமுகவினர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாகும்.
அதேசமயம் தனக்கு ஆதரவானவர்களுக்கு வைத்தியலிங்கம் செய்யத் தவறியதில்லை என்றும் சொல்வார்கள். இப்படித்தான் நீலகிரியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பரசுராமன், வைத்தியலிங்கத்தின் தொடர்புக்கு பிறகு உச்சத்தை எட்டினார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் பரசுராமனுக்கு சீட்டு வாங்கி தந்தார், வெற்றி பெற்ற பிறகு பரசுராமன் தஞ்சைப் பகுதியில் தன்னை வளர்க்கும் வேலைகளில் ஈடுபட இது பிடிக்காத வைத்தியலிங்கம் பரசுராமனை ஒதுக்கிவிட்டார். தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரை சீட்டு பெற முயற்சித்தும் பரசுராமனுக்கு அதிமுக தலைமை சீட்டு வழங்க வில்லை.
இப்படி பரசுராமனின் வளர்ச்சிக்கு வைத்தியலிங்கம் தொடர்ந்து குடைச்சல் கொடுக்க, பரசுராமன் தனது ஆதரவாளர்கள் 3000 பேருடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டிருக்கிறாராம்.
இதற்கான பணி குறித்து தஞ்சை அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் பரசுராமன். இந்த தகவல் சென்னை அதிமுகவின் தலைமை காதுகளுக்கு போக, பரசுராமனுக்கு நெருக்கமானவர்களை வைத்து அவருடன் பேச முயற்சி செய்திருக்கிறார் எடப்பாடியார்.
அதற்கு பரசுராமன், வைத்தியலிங்கம் இருக்கும்வரை சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வைத்தியலிங்கத்தால் நான் வருமான வரி சோதனை வரை சந்தித்து 10 கோடி வரை இழந்திருக்கிறேன். இதனால் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தூதுவந்தவருக்கு டாட்டா காட்டி விட்டாராம் பரசுராமன்.
இதை எடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் இணைந்து பரசுராமனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
அதற்கு பரசுராமனோ, நீங்கள் அறிவித்தாலும் சரி, அறிவிக்காவிட்டாலும் சரி உங்களுக்கு ஒரு கும்பிடு உங்க கட்சிக்கு ஒரு கும்பிடு என்று சொல்லி கிளம்பி விட்டாராம்.