வீட்டு வசதி வாரிய வீடுகள் விலை எகிறும் அபாயம்!
தமிழகத்தில் தனியாரிடம் இருந்து மொத்தமாக நிலம் பெற்று, குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் வீட்டு வசதி வாரியம், வருவாய் துறை உதவியுடன் மாவட்ட வாரியாக சில பகுதிகளை தேர்வு செய்தது. அந்த நிலத்தில், குறிப்பிடட அளவு நிலத்தை மட்டுமே கையகப்படுத்தி, வீடு, மனை திட்டங்களை செயல்படுத்தி வந்தது.
இவ்வாறு அறிவிக்கை வெளியிட்டு கையகப்படுத்தாமல் இருந்த நிலங்களை தனியார் தொடர்ந்து பயன்படுத்துவதால், அதை, குடியிருப்பு திட்டத்திற்காக தற்போது எடுக்க முடியாத நிலை உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலம் பல்வேறு அரசு துறைகளிடம் இருந்து, காலி நிலங்களை பெறும் வாரியத்தின் முயற்சிக்க போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தத்தால் , உரிமையாளா்களுக்கு அதிக விலையும் கொடுக்க நேரிடுகிறது, அத்துடன், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
இதனால், எற்படும் செலவுகளை கணக்கு பார்த்தால், குடியிருப்புகளின் விலையை வெகுவாக உயா்த்த வேண்டி வரும். எனவே, தனித்தனியாக உரிமையாளா்களிடம் இருந்து நிலத்தை இழப்பீடு கொடுத்து கையகப்படுத்துவதற்கு பதிலாக, புதிய நடைமுறையை வாரியம் கையில் எடுத்துள்ளது.
அதன்படி, 10 முதல் 100 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலம் பெற்ற, குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல், வாரிய அதிகாரிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி, வாரியம் விரும்பும் பகுதிகளில், உரிமையாளா்களிடம் இருந்து புரோக்கர்கள் வாயிலாக குறைந்த விலைக்கு விற்கும் முயற்சியில் சில நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இது, வீடுகளின் விலை மேலும் உயர வழிவகுக்கும் என, ஒதுக்கீட்டாளா்கள் வேதனை தெரிவித்து உள்ளனா்.
இதுபற்றி தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளா்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜெயச்சந்திரன் கூறியது.
வீட்டு வசதி வாரிய திட்டங்களுக்கு, வழக்கமான முறையில் நிலம் பெறுவதில் பிரச்னைகள் உருவாக அதிகாரிகளே காரணம் இது தொடர்பான வழக்குகளில், கோர்ட்டுகள் பிறப்பித்த உத்தரவுகளை கூட அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கின்றனா். தனியார் வாயிலாக நிலம் பெறுவது ஒதுக்கீட்டாளா்களுக்கும், ஆபத்தை ஏற்படுத்தும், சட்ட நடைமுறைகளுக்கு புறம்பான செயலாக அமையும்.
ரியல் எஸ்டேட் தரகா்கள், மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கிய நிலத்தை, வாரியத்துக்கு அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. மோசடியாக அபகரிக்கப்பட்ட நிலங்களையும், வாரியத்திற்கு தள்ளிவிட வாய்ப்புள்ளது. இது போன்ற முயற்சிகளை வாரியம் கைவிட வேண்டும் என்று தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளா்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜெயச்சந்திரன் அவர்கள் கூறினார்.