சாக்பீஸ் தூசிகள் தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும் … ஒரு வாத்தியாரின் வரலாறு !
நான் பெற்ற கல்வியும், நான் ஈட்டிய அறிவும் மட்டுமே என் செல்வங்கள்.
என் ஆரம்பக் கல்வி சுப்பிரமணியபுரத்தில் தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுப்பிரமணியபுரத்தில் படித்ததில் ஒரு சிலரை தவிர, வேறு ஆசிரியர்கள் அவ்வளவாக நினைவில் இல்லை. வீ.டி. சார் என்று அழைக்கப்பட்ட வி.திருஞானம், எம்.கே. சார் என்று அழைக்கப்பட்ட எம்.கிருஷ்ணன், முபாரக் சார், கண்ணாடி டீச்சர், தமிழய்யா இப்படியான சிலரைத் தவிர வேறு ஆசிரியர்கள் என் நினைவில் இல்லை. இதில் வீ. டி சார் என் குடும்பத்தில் ஆறு பேருக்கும் ஆசிரியராக இருந்தார். எம்.கே. சார் ரொம்ப கண்டிப்பானவர். குச்சி வைத்து அடி பின்னி எடுத்து விடுவார். முபாரக் சார் ஃப்ரெண்ட்லியாக இருப்பார். அறந்தாங்கி வாஹீது அன் கோ மாப்பிள்ளை அவர்.
அன்றைக்கு சுப்பிரமணியபுரத்தில் மேல்நிலை வகுப்புகள் இல்லை என்பதால் தினமும் அறந்தாங்கி வந்து படிக்க வேண்டும். அறந்தாங்கி மேல்நிலைப்பள்ளியில் எல். மாணிக்கவாசகம், ஆர். வேணுகோபால் இரண்டு ஆசிரியர்களையும் மறக்க இயலாது. இதில் எல்.எம். சாரிடம் நான் டியூஷன் படித்தேன். அந்த டியூஷனில் தான் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொண்டேன்.
பி. ஏ. படிப்பதற்கு புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக்கு வந்தேன். பேராசிரியர் அமரர் வைத்தியநாதன் என் கையைப் பிடித்து பேராசிரியர் நவநீதன் அவர்களிடம் ஒப்படைத்து இவனை ஆங்கில இலக்கியத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். பேராசிரியர் நவநீதன் அப்பழுக்கில்லாத ஆங்கில ஆசான்.
பேராசிரியர் ஹரிராம் ஜோதி, பேராசிரியர் அரங்குளவன், பேராசிரியர் ஹென்றி செல்லப்பா இவர்களோடு பேராசிரியர் பாலா என்ற பாலச்சந்திரன் போன்றோர் என் ஆசிரியர்கள். இதில் பேராசிரியர் பாலா அவர்கள் என் இலக்கிய குருநாதராய் மாறி பல புதிய கதவுகளைத் திறந்து வைத்தார்.
மாமன்னர் கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்திறமையும், அபாரமான ஆற்றலும் இருந்ததை உணர்ந்தேன். ஆனால், 12 வருடங்கள் தமிழிலேயே படித்ததால் ஆங்கிலம் படிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. என்னைச் சுற்றி இருந்த வகுப்புத் தோழர்களும் என்னைவிட மக்காக இருந்தார்கள். கல்லூரி என்பது ஜாலியாக பொழுது போக்குவதற்கான இடம் என்ற சிந்தனை மேலோங்கியிருந்தது.
ஒரு வழியாக பி.ஏ. முடித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். கல்லூரிப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் அன்பின் உளி கொண்டு என்னைச் செதுக்கினார்கள். நானும் அதற்கு வாகாக வளைந்து கொடுத்தேன்.
ஆங்கிலம் என்றால் என்னவென்ற அறிவையும், ஆங்கில இலக்கியத்தின் ஆழத்தையும் அக்கல்லூரி எனக்கு அறிமுகப்படுத்தியது.
துறைத் தலைவர் பேராசிரியர் நஞ்சுண்ட மூர்த்தி, பேராசிரியர் பஞ்சநாதன், பேராசிரியர் சந்தானம், பேராசிரியர் ஆல்பர்ட், பேராசிரியர் முகமது யூசுப் என ஒவ்வொரு பேராசிரியரும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு இணையான ஞானத்தைப் பெற்றவர்கள். அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருந்ததை நான் உணர்ந்தேன்.
புதுக்கோட்டையில் பாலா சார் மாதிரி, திருச்சியில் ஆல்பர்ட் சார். நல்ல இலக்கியத்தையும், நல்ல சினிமாவையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
நான் பேசவும் எழுதவும் கவிதை படைக்கவும் என்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் அதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினார்கள்.
ஜமால் முகமது கல்லூரி உவமைக் கவிஞர் சுரதாவோடு என்னைக் கவிதை பாட வைத்து எனக்கு கவிஞன் என்ற ஐஎஸ்ஐ முத்திரையைக் குத்தியது. பிறகு மீண்டும் புதுக்கோட்டைக்கு பி.எட் படிக்கவும், எம். எட் படிக்கவும் வந்தேன். பேராசிரியர் ஜம்புநாதன் அவர்கள், தேர்ந்த ஆசிரியருக்கான அத்தனை திறமைகளையும், வித்தைகளையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
என்னை வகுப்பெடுக்க வைத்து அழகு பார்ப்பார். என் வகுப்பை மற்ற மாணவர்களுக்கு உதாரணமாகச் சொல்வார். பேராசிரியர் செந்தூர்பாண்டியன் போன்ற ஜாம்பவான்களின் வகுப்பில் இருக்கும் வாய்ப்பு அன்று கிடைத்தது. இத்தனை ஆசிரியர்களையும் கடந்து வந்து, அவர்களிடமிருந்த அறிவைக் கடத்தி வந்து நானும் ஓர் ஆசிரியராக என் பணியைத் தொடங்கினேன்.
பாரத் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஆகி, ஆங்கில ஆசிரியர் ஆகி பணியில் அமர்ந்தேன். பிறகு காலை மாலை என்று தொடர்ந்து டியூஷன் வகுப்புகள் எடுத்தேன். தலை முதல் கால் வரை சாக்பீஸ் தூசிகள் எனக்கு தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும். என் கரும்பலகைக்கு நானே பெயின்ட் அடித்துக்கொள்வேன்.
அதன்பின் கூட்டாக பள்ளி தொடங்கி, அதில் கசப்புகளையும், ஏமாற்றங்களையும், அவமானங்களையும் அனுபவக் கொள்முதலாகப் பெற்று இனி எப்போதும் கூட்டுத் தொழில் இல்லை என உறுதி கொண்டு சொந்தமாக பள்ளி தொடங்கினேன். காலை 8 மணிக்கு தொடங்கும் என் உழைப்பு இரவு 8 மணி வரை தொடரும். உணவைத் துறந்து உழைப்பையே தின்று வளர்ந்தேன்.
1989 ல் தொடங்கிய இப்படியான வாழ்க்கை முறையில் இன்று வரை ஓய்வே இல்லாமல் என் கல்விப் பயணம் தொடர்கிறது. சோதனைகளை, அவதூறுகளை, பொறாமைகளை என் நம்பிக்கைகளால் தகர்த்தேன். என் வியர்வையை, ரத்தத்தை அஸ்திவாரம் ஆக்கி என் பள்ளியை எழுப்பி அதனை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருக்கிறேன்.
2008 ஆம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் கரங்களால் பெற்றேன். 2013 ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதினை புதுடெல்லியில் மேதகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கரங்களால் பெற்றேன். புதுடெல்லி, சண்டிகர்,பெங்களூர் என்று பல கல்வி மாநாடுகளில் பங்கேற்று உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
இந்தியாவின் மிகப் பெரிய இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி தேர்வுக் குழுவில் அங்கம் வகித்தேன். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு, பேரவைக் குழுவில் பங்காற்றினேன். தேசிய அளவில் சிறந்த கல்வியாளர்கள் பட்டியலில் என்னை இணைத்திருக்கிறார்கள். மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பில் நானும் ஈடுபட்டிருக்கிறேன்.
ஓரளவு நிமிர்ந்து சுடர் விடும் இந்தப் பெருமைப்படத்தக்க உயரத்திற்கு என்னை இட்டுச் செல்ல பல ஆசிரியர்கள் உழைத்திருக்கிறார்கள்.
நான் பெற்ற கல்வியும், நான் ஈட்டிய அறிவும் மட்டுமே என் செல்வங்கள். யான் பெற்ற செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதும், அதனை வளரும் தலைமுறைக்கு தாயின் பரிவோடு சிந்தாமல் ஊட்டிவிடுவதுமே என் தலையாய பணி.
— தங்கம் மூர்த்தி
Comments are closed, but trackbacks and pingbacks are open.