தமிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனம் மரத்திருகை !
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஏர் கலப்பை, குத்துரல்,ஆட்டுரல், அம்மி, உரல், உலக்கை,கல்வம், கல் திருகை, மண் திருகை, மரத் திருகை உட்பட பல்வேறு பாரம்பர்ய பொருட்கள் வைத்து கொண்டாடினர்.
தமிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனமான மரத்திருகை குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதி சகிதமாக பேசுகையில், பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது. சூரியனாக கருதப்படும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அவகையில் பாரம்பரிய பொருட்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம்.
தமிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனங் களில் திருகையும் ஒன்று. அம்மியைப்போல கருங்கல்லினால் செய்யப்பட்ட திருகையில் தான் அரிசியை மாவாகத் திரிப்பார்கள். பருப்பு வகைகளை உடைப்பார்கள். நெல்லில் இருந்து அரிசியை கைக்குத்தல் அரிசியாக மாற்ற, உரலில் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். ஆனால், முன்பெல்லாம் மரத்தாலான திருகை மூலம் அரிசி எடுத்து வந்திருக்கிறார்கள்.
வீட்டுத் தேவைக்கு உரல்ல நெல்லைக் குத்தி கைக்குத்தல் அரிசியா எடுத்து பயன்படுத்துவர். ‘எங்க வீட்டுல மரத்திருகை கிடக்குது. இப்போ அதைப் பயன்படுத்துற தெல்லாம் இல்லை. அந்தத் திருகையின் அடிப்பகுதி, மேல் பகுதி, சுற்றுக் கைப்பிடி எல்லாமே மரம்தான். நெல்லைப் போட்டு சுற்றினால் பல் சக்கரம் தேய்ஞ்ச நிலையில இருந்ததால சிவ சுத்துக்குப் பிறகு தான் நெல்லுல இருந்து தோல் நீங்குகிறது.
மர திருகையின் அடிப்பகுதி நிலையா இருக்கும். மேல் பகுதி கழற்றி மாட்டும் வகையில இருக்கும். திருகையை அடுக்குபோல தூக்கி வைக்கணும். மேல் பகுதி திருகையின் நடுவுல இருக்குற துளைக்குள்ள நெல் மணிகளைப் போட்டு கைப்பிடியைப் பிடிச்சு சுத்தணும். சுழற்சி வேகத்துல நெல் மணிகள் அடிப்பகுதி திருகைக்குச் சென்று செதுக்கப் பட்டுள்ள ‘V’ வடிவ பல் வரிசையில் விழுந்து நெல்லின் தோல் தனியே நீங்கும். தொடர்ந்து சுத்திக்கிட்டே இருந்தா, அரிசி கிடைச்சுடும். பயன் பாட்டைப் பொறுத்து பல் வரிசைகள் தேய ஆரம்பிக்கும்; அதைத் தீட்டிக்கலாம். மரச்செக்கைப்போல, மரத்திருகை அமைப்பதற்கும் வாகைமரம்தான் ஏற்றது. அதுலதான் தேய்மானம் குறைவா ஏற்படும்.
அதன் பிறகு மூங்கில் முறத்தால (சுளகு) புடைச்சு உமியைப் பிரிக்கணும். திருகையில நெல்லின் தோல் மட்டுமே நீங்குறதால இரு முனைகளும் உடையாத அரிசி கிடைக்கும். மரத்திருகையைப் பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
-வெற்றிச்செல்வன்