அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !
குடிநீர் பிரச்சனையை தீர்க்காததால், பேரூராட்சி அலுவலகத்தை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் குற்றச்சாட்டினர். மேலும், அலுவலகத்தை அடைத்த பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில், பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினரும் பேரூராட்சி மன்ற தலைவருமான தமிழ்ச்செல்வி மற்றும் 2, 3, 5, 9, 15 ஆகிய வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கெங்குவார்பட்டி பேரூராட்சி அலுவலக வாயில் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வார்டு உறுப்பினர்கள் குடிநீர் பிரச்சினை குறித்து செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அலுவலகத்திற்கும் முறையாக வருவதில்லை எனக்கூறி அலுவலகத்தை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனிடையே தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற பின்பு அடைக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தை கடந்த ஒரு மணி நேரத்திற்கு பின் திறந்தனர்.
மேலும், பேரூராட்சி அலுவலகம் அடைக்கப்பட்டது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி உதவி இயக்குனரின் உத்தரவின் அடிப்படையில் கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆறு பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் புகார் கொடுத்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.