திருவெண்காடு ஆதி சிதம்பரம் ஆலயம் – ஆன்மீக பயணம் – 30
திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ பெருமான் சிதம்பரத்துக்கு முன்பே இங்கே நடனமாடியதால் அந்த பெயர் பெற்றுள்ளது. இதனால் இக்கோவிலில் தில்லைச் சிதம்பரம் போன்றே நடராச சபை அமைந்துள்ளது. ஸ்படிலிங்கமும் ரகசியமும் இங்கு உள்ளன. அன்றாடம் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும், பஞ்ச கிருத்திய பூஜைகளும் நடைபெறுகின்றன.
ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது. பிரணவம் முதல் இறுதியாகவுள்ள 81 பதமந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் அமைந்த அரைஞாண் இடுப்பில் திகழ்கின்றது.
முடிந்துவிட்ட 28 யுகங்களை குறிக்கும் 28 எலும்பு மணிகள் கோத்து கட்டிய ஆரத்தையும் இவர் அணிந்துள்ளார். தலையில் மயில்பீலியும் மீன்வடிவில் கங்கையும், இளம்பிறையும் ஊமத்தம்பூவும், வெள்ளேருக்கும் சூடியுள்ளார்.
சோடச கலைகளை உணர்த்தும் 16 சடைகளும் நடராசரிடம் இருப்பதை காணலாம். 15 சடைகள் தொடங்குகின்றன ஒன்று கட்டியுள்ளது. தோளில் ஒரு சிறு துண்டும், இடையில் புலித்தோல் அணிந்தும், இருகைகளில் உடுக்கை தீப்பிழம்பும் ஏந்தியுள்ளார். காலின் கீழ் முயலகனுடன் காட்சியளிக்கின்றார்.
இந்த தனி சன்னதி சற்று இருட்டாகத்தான் உள்ளது. பக்தர்கள் நடராஜ பெருமானை உற்று நன்கு பார்த்தால் மேற்கண்ட அணிகலன்களை கண்டு ரசிக்கலாம்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.