கடைவீதியில் நடந்த கத்திச்சண்டை … உயிரை பணயம் வைத்த பெண் போலீசு எஸ்.ஐ. !
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த போது, துரிதமாக செயல்பட்டு தன் உயிரை பணயம் வைத்து அசம்பாவிதத்தை தடுத்து சபாஷ் வாங்கியிருக்கிறார், பெண் சார்பு ஆய்வாளர் தரணியா.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் தரணியா, ஆக-11 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு மஹால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அப்போது, அங்குள்ள ஒரு டீக்கடை முன்பாக இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனைக் கண்ட மேற்படி சார்பு ஆய்வாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தும், மேலும் காயம்பட்ட இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்டார்.
மேலும், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியும், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் தரணியாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
— மணிபாரதி