துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை உற்சவ விழா !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் மலையில் உள்ள அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு உற்சவ விழா நடைபெற்றது. முதல் வார சனிக்கிழமை என்பதால் மலை மீது உள்ள மூலவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு அதிகாலை திருமஞ்சனத்துடன் கூடிய சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்திற்கு எதிரில் வண்ண வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவரான பிரசன்ன வெங்கடாஜலபதி தம்பதி சமேதராக திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் துறையூர் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க படிகளிலும் சாலை வழியாக கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

மலை மீது ஏறும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் கீழிருந்து மலை மீது செல்லும் வேன்களில் இருக்கையில் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் மற்றும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.புரட்டாசி மாத சனிக்கிழமை உற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும்கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் முத்தையன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக பெருமாள்மலைக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாக இருந்த நுழைவுவாயில் ஆர்ச் இதுவரை கட்டப்படாமல் உள்ள காரணத்தால்,வெளியூர் பக்தர்கள் மலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் புதிய நுழைவுவாயில் அமைக்கும் பணியை விரைவில் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.