திருப்பதிக்குச் சென்று வந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்கும் முதல் கேள்வி……
திருப்பதிக்குச் சென்று வந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்கும் முதல் கேள்வி, திருப்பதி லட்டு வாங்கி வந்தீர்களா என்பதுதான். உலகப்புகழ் கொண்ட திருப்பதி லட்டு பிரசாதம் பல நூற்றாண்டுகளைக் கடந்துவந்த வரலாறு சுவாரசியமானது.
அந்தக் காலத்தில் திருப்பதியில் உணவகங்கள் எதுவுமில்லை. கட்டுசோறு கட்டிக் கொண்டே பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டுப் போவார்கள்.
திருமலையில் வாழ்ந்த அர்ச்சகர்களும் ஆதிகாலம் தொட்டே ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்த தயிர் அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வந்தார்கள். பின்னர் விஜயநகர மன்னர்களின் காலத்தில் திருப்பதி கோயில் அழகாகப் புனரமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டன. அதில் பலவிதமான பிரசாதங்களும் அடங்கும்.
309 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் பிரசாதமாக லட்டு ஏற்கப்பட்டாலும்… 81 ஆண்டுகளாகத்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோயிலைக் கட்டிய தொண்டைமான் காலத்திலேயே திருப்பதியில் தயிர் சாதமே பிரசாதமாக வழங்கப்பட்டது என்றும், பல்லவர் கால ஆட்சியில் முழு நேர உணவும் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பிறகு திருப்பொங்கம் என்ற பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமானது, இது 1450-ம் ஆண்டு முதல் அப்பமானது. 1460-ம் ஆண்டில் அது முழு கறுப்பு உளுந்து வடையானது. இன்றும் இது வழங்கப்படுகிறது. 1468-ம் ஆண்டு முதல் அதிரசம் திருப்பதி பிரசாதமானது. 1547-ம் ஆண்டு மனோகரம் என்ற இனிப்பு முறுக்கு பிரசாதமானது.
1546-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் நடைபெற்ற ஐந்து நாள்கள் ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவத்தில், பக்தர்களுக்கு அவல், பொரி, வடை, மனோகரம் அளித்ததை தெரிவிக்கிறது. வெங்கமாம்பாள் காலத்தில் பக்தர்களுக்கு அவரே உணவு தயாரித்து அளித்ததையும் திருமலை வரலாறு கூறுகின்றது. அன்னமாச்சார்யா திருப்பதிக்கு வந்தபோது, அவர் பசியால் வாட, தாயார் பத்மாவதி அவருக்கு லட்டு ஒன்றையே அளித்து பசியாற்றினார் என்றும் புராணம் கூறுகின்றது.
1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்பட்டது. ஆனால் அது பக்தர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. 1803-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பூந்தியாக வழங்கப்பட்டு வந்தது. ஜமீன்தார்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் காலத்தில் மதராஸ் அரசால் 1932-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி அதன் கீழ் கோயிலும் விழாக்களும் நடைபெற்றன.
அப்போது திருப்பதி மடப்பள்ளியில் பிரசாதங்கள் செய்யும் உரிமை மிராசிகள் என்ற பரம்பரை குடும்பத்தினரிடம் இருந்தது என்று தேவஸ்தான குறிப்புகள் கூறுகின்றன.1940-ம் ஆண்டு, திருப்பதி பெருமாளுக்கு நித்ய கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கல்யாண உற்சவத்தில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன் ருசியில் மயங்கிய பக்தர்கள், எப்போதும் அந்த பிரசாதத்தை வழங்குமாறு தேவஸ்தானத்திடம் கோரிக்கை வைத்தனர். 1943-ம் ஆண்டு முதல் சனிக்கிழமைதோறும் சிறிய அளவு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு தினமும் வழங்கும் முறை உருவானது. இன்றும் சிறிய அளவு லட்டு இலவசம பிரசாதமாகவும், பெரிய அளவு லட்டு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
2008-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பிரசாதமான திருப்பதி லட்டு புவிசார் குறியீடு பெற்றது. 1999-ம் இந்த லட்டின் தயாரிப்பு முறைகள் பதிவு செய்யப்பட்டதால், இதைப்போல எவரும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்ற காப்புரிமையும் பெற்றது.
309 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் பிரசாதமாக லட்டு ஏற்கப்பட்டாலும் 81 ஆண்டுகளாகத்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லட்டு எட்டு அணா என்று விற்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை அதன் சுவையும் மணமும் மாறாமல் வருவதே இதன் சிறப்பு. திருப்பதியில் திருமலையானைப்போலவே லட்டும் பக்தர்களை இன்றும் கவர்ந்து வருகிறது என்பதே உண்மை.
1996-ம் ஆண்டு வரை இந்த லட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்தவர்கள் திருமலை கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர் என்கிறது கோயில் தகவல்கள். பிறகு தேவஸ்தானமே லட்டுகளை தயாரிக்கத் தொடங்கியது. இன்று நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுகளைக்கூட தயாரிக்கும் அளவு நவீன கூடம் திருப்பதியில் உருவாகிவிட்டது.
நவீன முறையால் தயாரிக்கும் பணிகள் மாறிவிட்டன. ஆனால் திருப்பதியின் மடப்பள்ளி தாயார் என்று வணங்கப்படும் ஏழுமலையானின் வளர்ப்பு அன்னை வகுளா தேவியின் திருப்பார்வை மட்டும் மாறவில்லை. அந்த தேவியின் கருணையாலே திருப்பதி பிரசாதங்கள் எல்லாம் சுவையும் மணமும் கொண்டதாக இருக்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காலங்கள் மாறலாம். திருப்பதியில் கூட்டமோ, ஏழுமலையானின் மகிமையோ, திருப்பதி லட்டின்மீது கொண்ட ஆசையோ மாறவே மாறாது என்பதே உண்மை!
திருப்பதி தேவஸ்தான லட்டுகள் மீது இப்போ… ஏற்பட்டுள்ள ஐயங்களை சந்திரபாபு நாயுடு அரசு தான் தீர்த்து வைக்க வேண்டும்..அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தேவையில்லாத சந்தேகங்களை கிளப்பி பக்தர்களை பீதியடைய வைக்க வேண்டாம் என்பதே ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கை.. இருப்பினும் உண்மை எனும் பட்சத்தில் தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்கி மீண்டும் இது போன்ற தவறு நடைபெறாத வகையில் பக்தர்களுக்கு நம்பிக்கையூட்டுவது சந்திரபாபு நாயுடுவின் கடமையாகும்.
-Manohar Ranjith – முகநூல் பதிவில்