”நாளை நமதே … நாற்பதும் நமதே …” பைசா நஹி … பையைப் பிதுக்கிக் காட்டிய மாஜி !
”நாளை நமதே … நாற்பதும் நமதே …” பைசா நஹி … பையைப் பிதுக்கிக் காட்டிய மாஜி ! நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கேசி வீரமணிக்கு சொந்தமான RS திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தொண்டர்களின் உற்சாகத்திற்காக, ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையே பாடினர். இந்தக்கூட்டத்திற்கு மாஜி கே.சி.வீரமணி உள்ளே நுழையும்போது, “நாளை நமதே! நாடும் நமதே!” என்ற பாடல் ஒலிக்க, உற்சாகமானவர் மேடைக்கே ஓடி சென்று மைக்கை பிடித்தவர்தான். ”நாளை நமதே ! நாற்பதும் நமதே!” என இசைக்கேற்ப உற்சாகத்தில் பாட்டுப்பாடி நடனமும் ஆட ஆரம்பித்துவிட்டார்.
நிறைவாக, தொண்டர்களிடையே பேசத் தொடங்கிய வீரமணி, “எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தற்போது பண பலத்தில் பின்தங்கியுள்ளது. இருப்பினும் எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் உழைக்க வேண்டும்” என ஒரே போடாக போட்டார். கூடவே, “நாடாளுமன்ற தேர்தலில் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைக்கவும் அவர் தவறவில்லை.
”குடும்ப உறுப்பினர்களை கூட வேட்பாளராக நிற்க வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், தேர்தல் செலவுகளை அந்தந்த மாவட்ட முன்னாள் அமைச்சர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.” கறார் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கே.சி.வீரமணி தன் அண்ணனுக்கு சீட் கேட்டிருக்கும் நிலையில் ”தன்னிடம் பணம் இல்லை ” என்பதைத்தான் அதிமுக பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளது என எடப்பாடிக்கு சூசகமாக “மெசேஜ்” கொடுத்திருக்கிறார் என சத்தமே வராமல் நமட்டு சிரிப்பை உதிர்க்கிறார்கள் உடனிருந்த ரத்தத்தின் ரத்தங்கள்.
– மணிகண்டன்.