வெளியூர் காளைகள் எல்லாம் ஒய்யாரமாக வருது … உள்ளூர் காளைகள் எல்லாம் பட்டியில பூட்டிக்கிடக்குது …
பாரம்பரிய விளையாட்டு உரிமைக்காக, உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் பெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டது தமிழகம். அதனை தொடர்ந்து, ஆண்டுதோறும் அரசின் மேற்பார்வையில் அதன் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கத்திலும், அவ்விளையாட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், மாடுகளுக்கும்கூட எந்தவிதத்திலும் உயிரிழப்புகள் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படாத வண்ணம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுள் ஒன்றான ஆன்லைன் டோக்கன் நடைமுறை, ஜல்லிக்கட்டு போட்டியின் நோக்கத்தையே சிதைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார், ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்குழுவை சேர்ந்தவரும் சமூக நீதிப்பேரவையின் தலைவருமான ரவிக்குமார்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே, ஆன்லைன் போர்ட்டல் திறக்கப்படுவதாகவும் சுமார் 700 காளைகளை களம் இறக்கப்படும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துவிடுவதாகவும்; இவற்றிலிருந்து எப்படி அந்த தகுதியான 700 காளைகளை மட்டும் அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பதுதான் பெருத்த சந்தேகமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
இதன் காரணமாக, உள்ளூரை சேர்ந்த தகுதியான காளைகள் போட்டியில் பங்கேற்க முடியாமல் போவதாகவும்; அக்காளைகளை வளர்க்கும் விவசாயிகள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாகவும்; இது பாரம்பரிய விளையாட்டின் நோக்கத்தை சிதைப்பதோடு மட்டுமின்றி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் அபிவிருத்தியை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்.
அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சாதிய தலைவர்கள், பெரும் மனிதர்களின் செல்வாக்கில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஒய்யாரமாக காளைகள் பங்கேற்கும் நிலையில், உள்ளூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் மாட்டு கொட்டகையில் வைத்து பூட்டப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்.
உள்ளூர் காளைகளின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், ஆன்லைன் டோக்கன் நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் அல்லது பழைய நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாக கோரிக்கை விடுக்கிறார்.
முழுமையான வீடியோவை காண
வெளியூர் காளைகள் எல்லாம் ஒய்யாரமாக வருது … உள்ளூர் காளைகள் எல்லாம் பட்டியில பூட்டிக்கிடக்குது …
நேர்காணல் : வே.தினகரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.