இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி ! – கி.வீரமணி
மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர். சுவாமிநாதன் யார்?
குற்றவாளியைக் காப்பாற்ற சட்டத்தை வளைப்பதுதான் வேதம் சொல்லும் வழியா?
வேதம் படித்தால், வேதம் நம்மைக் காக்கும் என்பது இதுதானா?
நாட்டை ஆள்வது அரசியலமைப்புச் சட்டமா? மனுதர்மமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்.

சென்னையில் இருக்கும் ஓம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அமைப்பு 2025 ஜூலை 19, 20 ஆகிய நாள்களில் நடத்திய ‘‘17 ஆம் நேஷனல் வேதிக் டேலண்ட் விஸ்டா 2025’’ (National Vedic Talent Vista 2025) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் உரையாற்றியிருக்கிறார். அதில் அவர் “நாம் வேதத்தைக் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்ற கருத்தை அழுத்திச் சொல்வதற்காக ஓர் உண்மை நிகழ்வை (அவரே சொல்கிறார்) பதிவு செய்திருக்கிறார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்ன ஒரு சம்பவம்!
“ஒரு சம்பவத்தை நான் சொல்ல விரும்புகிறேன். சின்ன கதை போல சொல்றேன். என்னுடைய பார்வையையே மாற்றிய சம்பவம் அது. வேதத்தில் ஒரு பாடசாலையில் அத்யாயணம் செய்துவிட்டு, சிகை வைச்சுண்டு ஸநாதன தர்மப்படி எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவர். எனக்கு அவரை பல வருஷங்களா பழக்கம். திடீரென்று ஒரு நாள் கண்ணீரும், கம்பலையுமாக எங்க ஆத்து வாசலில், அவரும் இன்னொரு டிவிஎஸ்ஸில் வேலை பார்க்கும் நண்பரும் நிற்கிறார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை! ஒரு மாதிரியாக நிலை குலைந்து போயிருக்கிறாரே என்று எனக்கு எதுவும் புரியவில்லை. உள்ளே வாங்கோ, என்ன ஆச்சு? என்று சொன்னதும், அவரால் பேசவே முடியவில்லை. ‘எதுவாக இருந்தாலும் என்னிடம் ஃப்ரீயாக பேசுங்கள். சங்கோஜம் இல்லாமல் பேசுங்கள். டாக்டரிடமும், வக்கீலிடமும் எதையும் மறைக்கக் கூடாது தானே’ என்று சொன்னேன். கூட இருந்த நண்பர் தான் சொன்னார். ‘இவருக்கு ஒரு கேஸ்ல 18 மாதங்கள் கன்விக்சன் ஆயிடுச்சு. தண்டனை கொடுத்துட்டா’ என்று சொன்னார்.
எனக்கு புரியவே இல்லை. ஸநாதன தர்ம நெறிப்படி, எனக்கு தெரிந்து வாழக்கூடிய ஒரு மனுசன் எந்தத் தப்பும் பண்ணி இருக்க முடியாதே! இவருக்கு போய் எப்படி இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று என்னால புரிஞ்சுக்கவே முடியல. என்ன ஆச்சு அப்படின்னா…
கார் விபத்து, ஒருவர் பலி; காரோட்டிய குற்றவாளியைத் தப்பிக்கவிட்ட மோசடி!
அவருடைய சகோதரி அமெரிக்காவில இருக்குறாங்க. அவங்க கோவிலுக்கு எல்லாம் போகணும்னு ஆசைப்படுறாங்க. அதனால கார்ல சகோதரிய கூட்டிண்டு, சகோதரியின் குழந்தைகளையும் கூட்டிண்டு இவர் கோயிலுக்கெல்லாம் போயிருக்கார். சகோதரி அமெரிக்காவில இருக்கறதுனால, அவங்க நல்லா கார் ஓட்டுவாங்க. வந்துட்டு இருக்கும்போது, சடனா ஓர் இடத்துல கண்ட்ரோல் போச்சா என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு ஆள் மேல மோதிர்றது. மோதி அந்த டீக்கடை வாசலில் அவர் இறந்து போயிட்டாரு. பாவம் அந்த நபர்.
உடனே என்ன ஆச்சு? சகோதரிக்கு அடுத்த வாரம் திரும்ப அமெரிக்காவுக்கு போய் ஆகணும். So, என்னுடைய நண்பர், அந்த வேதப்படி இருக்கிறவர், அவர் என்ன பண்றார், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரா போய்டுறார். இவருக்கும் கார் ஓட்டத் தெரியும். இவருக்கும் லைசன்ஸ் இருக்கு. ‘நான் தான் அஜாக்கிரதையாக கார் ஓட்டிட்டேன். இந்த ஆக்சிடென்ட் ஏற்படுத்திட்டேன்’ அப்படின்னு அந்த பழிய தான்மேல சுமந்துண்டு போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆகிறாரு.
குடுமி வைத்திருந்த காரணத்தால்…
இவர் மேலே எப்.அய்.ஆர். பதிவாகிறது. சார்ஜ் சீட் போடுறாங்க. கேஸ் நடக்கிறது. அந்த கேஸ்ல இருந்த நீதிபதி… நானே ஒரு நீதிபதியாக இருந்துட்டு, நானே அதைச் சொல்லக்கூடாது… இவர் கோர்ட்டுக்கு போகும்போது குடுமி, வேஷ்டியாடை… இதோட போறத பார்த்த உடனே, அதுவே தண்டனைக்குக் காரணமாறது. சாதாரணமா இந்த மாதிரி வழக்குகள்ல ஆறு மாசம் தண்டனை கொடுப்பா… இந்த வழக்குல 18 மாசம் தண்டனை கொடுத்துட்டா. குடுமியை வைத்திருக்கிறா என்கிற காரணத்துக்காகவே கொடுக்கப்பட்டதாக சொன்னார் அவர்.
இதுதான் நடந்து போச்சு. ஆனால், மூன்று வருடத்திற்கு கம்மியா தண்டனை இருந்தால், ஜெயிலுக்கு போக வேண்டாம். அப்பீல் பண்ணிட்டு, அப்பீல் கோர்ட்லயும் பாதகமானாத் தான் ஜெயிலுக்குப் போகணும்.
நான் கேட்டேன். ‘ஏன் சாமி. இது எங்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமே, நான் வக்கீல் தானே! தண்டனை வாங்கிட்டு வந்ததுக்குப் பிறகு சொல்றேளே… இந்த ஸ்டேஜ்ல வர்ரேளே…’
‘இல்ல கூச்சமா இருந்தது’ அப்படின்னாரு.
‘கூச்சமே வேண்டாம். நான் உங்களை ஒரு வீரனா பார்க்கிறேன். தன் சகோதரிக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக அந்தப் பழியை ஒரு தப்பும் பண்ணாமல் தம் மேல ஏத்துக்கிறாரே நீர்தானே உண்மையான ஆண்மகன். இதுல போய் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கு. நான் உங்களை பெருசா நினைத்திருப்பேன்’ அப்படின்னு சொன்னேன். ‘சரி வாங்க அப்பீல்ல போய் பாத்துக்கலாம். பேப்பர்ஸ்லாம் கொடுத்துடுங்கோ’ அப்படின்னு சொன்னேன்.
அந்த பேப்பர் முழுக்க நான் வாங்கிப் படிக்கிறேன். மொத்தம் ஆறு சாட்சிகள் இருக்கு. ஒவ்வொன்னா நான் படிக்கிறேன். நானும் 26 வருஷமா வக்கீலா இருந்திருக்கிறேன். எட்டு வருஷமா ஹை கோர்ட் நீதிபதியாக இருக்கிறேன்.
இது மாதிரி சாட்சியை நான் பார்த்ததே கிடையாது. ஒரு சாட்சி கூட நான் சொன்ன இந்த நபரோ, அவருடைய சகோதரியோ தான் வண்டி ஓட்டினார்கள் என்று சொல்லவே இல்ல. ‘நாங்கள் டீக்கடை வாசலில் நின்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஒரு மாருதி கார் வந்தது. தாறுமாறாக ஓடியது. இவர் மீது முட்டியது. அவர் இறந்து விட்டார்’ என்று தான் இருக்கிறது. தவிர ஒரு சாட்சி கூட, இந்த சாஸ்திரிகள்… அவர்தான் ஓட்டுனாரு… அவரது சகோதரி தான் ஓட்டினார்கள்… என்று யாரும் சொல்லவே இல்லை. கோர்ட்லயும் யாரும் இவர்தான் பண்ணார்ன்னு சொல்லல. அதனாலதான் சாட்சியமே இல்லை. அந்த ஒரே ஒரு பாயிண்ட்ட மட்டும் எடுத்துக் கோர்ட்டில் ஆர்க்யூ பண்ணுனோம்.
அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நண்பர் இருந்ததால்…
சாஸ்திரிகளுடைய நல்ல நேரம். என்ன ஆச்சுன்னா… அந்த அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் யாருன்னா என்னோட கூட படிச்சு ஒரு கிளாஸ் மேட்; சாட்சியமே இல்லை base (அடிப்படையே) இல்ல. இதுக்கு போய் எப்படி கன்விட் பண்ணாருன்னு சொல்லிட்டு, அந்த நீதிபதி என்னுடைய நண்பரை விடுதலை பண்ணிட்டாங்க. அன்னைக்குத் தான் நான் உணர்ந்தேன். ‘வேதத்தை நம்ம காப்பாற்றினால் வேதம் நம்மளை காப்பாத்தும்.’ அப்படிங்கற அந்த வார்த்தையை சத்தியமாக நான் உணர்ந்தேன்.” இதில் நாம் கருத்தூன்றிக் கவனிக்கவேண்டியவை எவை?

வேதப்படி வாழக் கூடியவர் கடல் தாண்டிச் செல்லலாமா?
வேதப்படி வாழக் கூடிய ஒருவர் அமெரிக்கவுக்குக் கடல் தாண்டிச் செல்லலாமா?
வேதம் அதை அனுமதிக்கிறதா? வேத விற்பன்ன சிரோண்மணி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் தான் விடையளிக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் எதற்கு வேண்டுமானாலும் விதிவிலக்கு உண்டு. விதியும் அவர்களே, விலக்கும் அவர்களே!
வேதம் படித்தவர் தாராளமாகப் பொய் சொல்லலாமா?
வேதம் படித்தவர் யாரைச் சரண்டர் செய்திருக்க வேண்டும்?
உண்மையான குற்றவாளியான அவருடைய தங்கையைச் ‘சரண்டர்’ செய்திருந்தால் பாராட்டலாம்.
அவர் சொன்ன கூற்றுப்படி, விபத்து ஏற்படுத்திய ஒருவரைக் காப்பாற்றுவதற்காக, விபத்துக்கு சம்பந்த மில்லாத ஒருவரை (தன்னைக்) குற்றவாளியாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். இது தான் வேதக் கலாச்சாரமோ? யார் சொல்கிறார்? இப்படி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்கிறார்!
நமது அரசமைப்புச் சட்டப்படி, நடைமுறையில் இருப்பது இந்தியக் குற்றவியல் சட்டமா? மனுதர்மச் சட்டமா?
ஸநாதனப்படி வாழ்ந்தால் அவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்து, தப்பித்து விடலாமா? குற்றத்துக்குச் சம்பந்தமில்லாத ஒருவரைக் கோர்ட்டில் ஆஜராக வைத்து, வழக்கில் வெற்றி பெறலாமா?
பிராமணர்களுக்குத் கொலை தண்டனை கிடையாது – மனுதர்மப்படி.
‘பிராமணர்களுக்குக்’ கொலைத் தண்டனை கிடையாது என்கிறது மநுதர்ம சாஸ்திரம். மற்றவர்கள் கொலைசெய்தால் சிரச் சேதம். பிராமணர்கள்’ என்றால் சிகைச் சேதம் போதும் என்கிறது.
“பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டமுண்டு.”
(மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 379)
“பிராமணன் எல்லாப் பாவஞ்செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்தவேண்டியது.” (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 380)
மநுதர்மம் நீதிப்போக்கில் எப்படி ஜாதிய உணர்ச்சி யைக் காட்டியிருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.
இது தானே மேலே மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்ன வழக்கில் நடந்துள்ளது.
விபத்து நடத்தியது அந்தப் பெண்தான் என்பதை இவரே ஒப்புக் கொள்கிறார்.
அமெரிக்காவில் வாகனம் ஓட்டியவர்களுக்கு, இந்தியாவில் கார் ஓட்டுவது பெரும் சிரமம். இந்தியாவில் இருப்பது இடப்பக்கப் போக்குவரத்து – Left Hand Traffic (அதாவது, வாகனத்தின் வலப் பக்கம் ஓட்டுநர் இருக்கை அமைந்திருக்கும் – Right Hand Drive). அமெரிக்காவில் அப்படியே மாறும். ஓட்டுநர் இருக்கை வாகனத்தின் இடப்பக்கம் இருக்கும் (LHD). சாலையில் வாகனங்கள் வலப்பக்கம் செல்லும். (RHT). அதன் காரணமாகவே, அமெரிக்காவில் நன்கு வாகனம் ஓட்டும் பலர் இந்தியாவில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பார்கள்.
ஆனால், நம் நீதிபதியோ, வாகனம் ஓட்டிய அம்மையார் அமெரிக்காவில் நன்கு வாகனம் ஓட்டுவார்; அதனால், இங்கேயும் நன்கு ஓட்டியிருப்பார் என்று பொருள்பட, அவரைக் காப்பாற்றும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
சாட்சியங்களின் அடிப்படையில் முதலில் 18 மாதத் தண்டனை வழங்கிய நீதிபதி, இவரது குடுமியையும், ஆளையும் பார்த்துத் தண்டனை வழங்கினார் என்று சொல்வதன்மூலம், அந்த நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படவில்லையா?
சாட்சிகளை ஜோடனை செய்யும் காவல்துறை – அது இந்த வழக்கிலும் நடந்துள்ளது!
பல நேரங்களில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், குற்றவாளிகளாக வேறு ஒருவரை (Proxy) காவல்துறையினர் ஜோடனை செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள் என்ற நடைமுறையை இன்று வரை நீதிமன்றங்கள் தொடர்ந்து வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
இப்படி ஏமாற்றி, வெளிநாட்டுக்கு ஒருவர் தப்பி ஓடியிருக்கிறார் – பொய்யாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டவரும் (Proxy) விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றால் இது சட்டத்திற்கு விரோதமானதல்லவா? நீதி தடம் புரள்கிறது அல்லவா?
சாட்சிகள் சரியில்லை என்றால், நம் நாட்டில் சாட்சிகள் எப்படி இருக்கிறார்கள் என்பது உலகறிந்த விசயமல்லவா? வழக்கில் ‘வேண்டும் அளவுக்கு’ எப்படி சாட்சிகள் வளைக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை! அந்த வாய்ப்பை, தான் பயன்படுத்தியதையும் உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இப்படி நியாயப்படுத்துகிறார். பொய் சொல்லி நீதியை வளைத்தவர் இவர் கண்ணுக்கு வீரனாகத் தெரிகிறார்.
அப்பீலில் இருந்த நீதிபதி தன்னோடு கூடப் படித்தவர் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போல கொடுத்திருக்கிறார். அந்த நீதிபதி என்ன செய்கிறார்? அந்த பொய்யான குற்றவாளி (Proxy)யையும் சாட்சிகள் சரியில்லை என்று விடுதலை செய்துவிடுகிறார். இதிலிருந்து பெறும் உண்மை என்ன என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
நிறைவாக என்ன சொல்கிறார்?
வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றுமாம்!
“வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்று இதோபதேசம் செய்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
ஸநாதனப்படி வாழ்பவர் தப்பு செய்யமாட்டார் என்பது முன்முடிவு அல்லவா?
வேதம் படித்தவர்கள் தப்பு பண்ணியிருக்க முடியாது என்று சொல்வது உண்மையா?
காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரரும், விஜ யேந்திரரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றார்களே, வேதம் அவர்களைக் காப்பாற்றியதா? அல்லது பிறழ் சாட்சியங்களும், அன்றைய அரசு மேல்முறையீடு செய்யாததும் தான் இவர்களைக் காப்பற்றியதா?
இப்படிப்பட்ட நடத்தைகளை நீதி உலகம் ஏற்கிறதா? நியாயப்படி இவருடைய செயல் கண்டனத்திற்குரியது.
இப்போது நடைபெறவது மநுதர்ம ஆட்சியல்ல; மக்களாட்சி. இங்கு அரசமைப்புச் சட்டம்தான் முதன்மையானது!
இதுவரை அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பு என்று தான் சொல்லப்பட்டது. இப்போது அவரே தந்த வாக்கு மூலத்தின் மூலம் அவர் ‘நியாயத்தை வளைக்கலாம்; நியாயத்தைச் சாய வைக்கலாம்’ – ’குற்றவாளிக்குத் துணை போகலாம்’ என்ற புதிய தத்துவத்தைச் சொல்லிக்கொடுக்கிறார் போலும். நீதிபதிகள் இப்படி நடந்தால், நீதிமன்றத்தின் மாண்பும், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் காப்பாற்றப்படுமா? அவை காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தான் நான் இதை எழுதுகிறேன்.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து, நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் நீதிமன்றத்திலேயே வழக்குரைஞர் வாஞ்சிநாதனை ‘கோழை’ என்கிறார்; ‘காமெடி பீஸ்’ என்று கிண்டலடிக்கிறார். ஆனால், இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி!