தமிழகத்தில் இரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் தேர்தல் அரசியலும் !
காரைக்கால்- பேரளம் துறைமுகப்பாதை உட்பட தமிழகத்தில் பத்து புதிய ரயில்வே பாதை திட்டங்கள் நடந்து வருகின்றன. இத்திட்டங்களில் ராமேஸ்வரம்- தனுஸ்கோடி திட்டமும், காரைக்கால் துறைமுகப்பாதை திட்டமும் பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். மற்ற எட்டு திட்டங்களும் பத்து ஆண்டுகள் பழமையானவை. காங்கிரஸ் ஆட்சிகால திட்டங்கள். நிதியாண்டு 2021-22 இல், இதில் ஏழு திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே ஓதுக்கப்பட்டது. போதிய நிதி ஓதுக்கீடு கிடைக்காமல் தமிழக திட்டங்கள் அனைத்துமே ஆமை வேகத்தில் நடந்து வந்தன.
கடந்த பிப்ரவரி முதல் தேதி வரும் 2024- 25 நிதியாண்டுக்காக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இத்தமிக திட்டங்களுக்கு ரூ.876 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
செஞ்சி வழி 70 கி.மீ தூர திண்டிவனம்- திருவண்ணாமலை திட்டத்திற்கு ரூ.100 கோடி; 179 கி.மீ தூர திண்டிவனம்- நகரி திட்டத்திற்கு ரூ.350 கோடி; 88 கி.மீ அத்திப்பட்டு – புத்தூர் திட்டத்திற்கு ரூ.50 கோடி; 91 கி.மீ ஈரோடு- பழநி திட்டத்திற்கு ரூ.100 கோடி; மகாபலிபுரம், புதுச்சேரி வழி 179 .மீ தூர சென்னை –கடலூர் திட்டத்திற்கு ரூ.25 கோடி; அருப்புக்கோட்டை வழி 143 கி.மீ மதுரை- தூத்துக்குடி திட்டத்திற்கு ரூ.100 கோடி; இருங்காட்டுக்கோட்டை வழி 60 கி.மீ ஸ்ரீபெரும்புத்தூர் – கூடுவாஞ்சேரி திட்டத்திற்கு ரூ. 25 கோடி; 36 கி.மீ மொரப்பூர் – தர்மபுரி திட்டத்திற்கு ரூ.115 கோடி – என நிதி தமிழக திட்டங்களுக்கு வாரி வழங்கப்பட்டு உள்ளது.
17 கி.மீ தூர இராமேஸ்வரம்- தனுஸ்கோடி திட்டத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்ல என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது முக்கிய காரணம். காரைக்கால் துறைமுகப்பாதை திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். இதில் காரைக்கால் – பேரளம் இடையே 24 கி.மீ தூரத்திற்கு அகலப்பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதை ஒட்டி இரட்டை ஒத்தைப்பாதையாக போடப்பட இருக்கிறது.
இது தவிர, திருச்சி- காரைக்கால் அகலப்பாதை திட்டத்தின் விரிவாக்கமாக நடந்துவரும் திருக்குவளை வழி நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி புதிய பாதை திட்டத்திற்கு ரூ.150 கோடி, மயிலாடுதுறை- காரைக்குடி அகலப்பாதை திட்ட விரிவாக்கமான பட்டுக்கோட்டை – மன்னார்குடி, பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் புதிய பாதை திட்டங்களுக்கு சேர்த்து ரூ.161 கோடி என ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில் பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் திட்டம் துவக்கப்படாத திட்டம்.
160 கி.மீ காட்பாடி- விழுப்புரம் இரட்டைப்பாதை; 160 கி.மீ சேலம்- கரூர்- திண்டுக்கல், இரட்டைப்பாதை; 65 கி.மீ கரூர்- ஈரோடு இரட்டைப்பாதை திட்டங்களுக்கு தலா ரூ 150 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. முடங்கிக் கிடந்த தமிழக இரயில்வே திட்டங்கள் இனி வேகமெடுப்பது தொடர்ந்து வரும் நிதியாண்டுகளில் ஒதுக்கப்படும் நிதியை பொருத்ததே.
கடந்த பத்து ஆண்டுகளில் புதிய பாதை திட்டங்கள் எதையும் தமிழகத்தில் முடிக்கவில்லை. பணிகள் முடிக்கும் தருவாயில்கூட எந்த ஒரு புதிய பாதை திட்டமும் இல்லை. கடந்தபத்து ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து போதிய நிதி ஓதுக்கீடு வழங்கப்படாததே இதற்குமுக்கிய காரணம். வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இப்போது அதிக அளவில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புதிய பாதை திட்டங்களுக்கு வரும்காலங்களில் தொடர்ந்து நிதி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்!. மொத்தத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தேர்தல்அரசியலே!
மன்னை. மனோகரன்