திருச்சி முன்னாள் எம்.பி. பெயரில் ரூ.19.50 லட்சம் மோசடி ! உடந்தை செயல்பட்டதாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது புகார்

0

எக்ஸ். எம்.பி. குமார் பெயரில் ரூ.19.50 லட்சம் மோசடி

உடந்தை செயல்பட்டதாக அதிமுக முன்னாள் கவுன்சிலர்             மீது புகார்

 

சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் கே.ரகுநாதன் என்பவர் கடந்த 2ம் தேதி திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம், திருச்சி மாநகராட்சியின் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சகாதேவ பாண்டியன் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.குமார் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.19.50 லட்சம் வரை பணம் வாங்கி மோசடி செய்துள்ளார் என புகாரளித்துள்ளார். இது குறித்து நாம் ரகுநாதனிடம் பேசினோம்.

- Advertisement -

- Advertisement -

அப்போது அவர், “நான் துறையூர் தாலுகா, சிறுநாவலூரில் வசித்து வருகிறேன். திருச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்ததன் மூலம் சகாதேவ பாண்டியன் மற்றும் அவரது உதவியாளர் பிரவீன் ஆகிய இருவரும் பழக்கமாகினர். இந்த பழக்கத்தின் மூலம் ஒரு நாள் பிரவீன் என்னிடம், “சகாதேவ பாண்டியனுக்கு எம்.பி.குமார் நல்ல பழக்கம். என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார். அவர் மூலம் நான் பலருக்கும் வேலை வாங்கித் தந்திருக்கிறேன். உங்களுக்கு அரசு நிரந்தர வேலை வாங்கித் தருகிறேன். வேறு எவரும் அரசு வேலை பெற விரும்பினால் அவர்களையும் அழைத்து வாருங்கள். வேலை வாங்கித் தருகிறேன்” எனக் கூறினார்.

 

அவரது பேச்சை நம்பி முதல் தவணையாக ரூ.2 லட்சமும் பின்னர் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.7.50 லட்சம் வரை நான் சம்பாதித்த பணம் மற்றும் என் மனைவியின் நகையினை அடகு வைத்தது என பிரவீனின் வங்கிக் கணக்கின் மூலம் பணத்தை கொடுத்தேன். இதே போல் எனது நண்பர்கள் தீனதயாளன், வின்சென்ட், கண்ணன், மகேந்திரன், மகாலிங்கம், ஜெயக்குமார், முத்துமாலை உள்ளிட்ட ஏழு பேர்களும் சேர்த்து என் பணம் உட்பட இது வரை மொத்தம் ரூ.19.50 லட்சத்தை பிரவின் வங்கிக் கணக்கின் மூலம் கொடுத்துள்ளோம்.

4 bismi svs
புகார் அளித்த கே.ரகுநாதன்
புகார் அளித்த கே.ரகுநாதன்

 

ஒவ்வொரிடமிருந்தும் பணம் வாங்கிய போது சகாதேவ பாண்டியன் எங்களிடம், “ஒரு மாதத்தில் வேலை வாங்கித் தருகிறேன்” என கூறுவார்.  ஆனால் பணம் கொடுத்து ஐந்து ஆண்டுகளாகியும் இது வரை வேலை வாங்கித் தரவில்லை. வேலை வாங்கித் தராவிட்டால் பரவாயில்லை. பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டால் பணமும் தரவில்லை. இந்த மோசடிக்கு உடந்தையாக பிரவீனின் சித்தப்பா தனபால் (அம்மா பேரவையின் மலைக்கோட்டை பகுதி செயலாளர்) செயல்பட்டுள்ளார். அதனால் நாங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி காவல்துறையின் புகார் அளித்தோம்” என்றார்.

ரகுநாதனின் புகார் குறித்து நாம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சகாதேவ பாண்டியனிடம் கேட்ட போது, “அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ப்ரவீன் என்பவன் என் வார்டில் இருந்தான். கட்சிகாரரின் அண்ணன் பையன். வார்டில், நிகழ்ச்சிகளில் என் கூட வருவான். அவன் செயல்பாடு சரியில்லை என்றதும் நான் அப்போதே அவனை விரட்டிவிட்டுவிட்டேன். அதற்கு பிறகு அவனை நான் பார்ப்பதில்லை. ஆள் இப்போது ஊரிலேயே இல்லை, தலைமறைவாகிவிட்டான் என்று கேள்விபட்டேன். நீங்கள் சொல்லும் புகார் குறித்து நீங்கள் சொல்லித் தான் எனக்கு தெரிய வருகிறது. நான் இது போன்ற எந்தவிதமான தவறான செயல்களிலும் ஈடுபடுவதில்லை. எம்.பி.குமார் பெயரையெல்லாம் இந்த விஷயத்திற்குள் இழுத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகக் கூட இருக்கலாம்” என்றார்

இது குறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.பி.குமாரிடம் பேசிய போது, “இந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக எவரேனும் தேவையில்லாமல் என் பெயரை பயன்படுத்துகிறார்கள்” என முடித்துக் கொண்டார்.

தீவிர அரசியலில்  இருப்பவர்கள் தன்னுடன் வைத்திருப்பவர்களை கவனத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது . திருச்சி மாநகர காவல்துறையினர் தன்னுடைய முதல்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பிரவீன் மோசடி குறித்து நாம் விசாரிக்கையில்… பிரவீன் மீது ஏற்கனவே பலபேர்க்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இருக்கார் என்ற புகாரின் அடிப்படையில் டிசி மயில்வாகன் விசாரணை நடத்தி இருக்கிறார். அந்த விசாரணையின் போது பாதிக்கப்பட்ட இன்னும் பல பேர் புகார் கொடுக்க ஆரம்பித்தவுடன் அப்போதிலிருந்தே  தலைமறைவாக தான் இருக்கிறான். பீரவீன் மீது விசாரணையை துரிதப்படுத்தினால் இன்னும் பல மோசடிகள் அம்பலம் ஆகும் என்கிறார்கள் அவனால் பாதிக்கப்பட்டவர்கள்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.