முன்பணம் இல்லை … வரிவிதிப்புமில்லை … 24 மணிநேரமும் சாக்கடைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் திருச்சி மாநகராட்சி !
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருவதாக மூன்று நாட்களுக்கு முன்பே தெரியப்படுத்தியும், இதுவரையில் திருச்சி மாநகராட்சியின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாக, மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி மாநகராட்சி 46 – வது வார்டு வ.உசி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நான்கு வாரத்திற்கும் மேலாக 24 மணி நேரமும் (24×7) தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தகவல் இரண்டு வாரம் முன்பு தெரிவித்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகமே!! வீட்டுக்கு தண்ணீர் கொடுத்தால் வீட்டின் உரிமையாளர் வரி கட்டுவார்கள்.
சாக்கடைக்கு தண்ணீர் வழங்கினால் யார் வரி கட்டவேண்டும்? குடிநீருக்கு முன் பணம் கட்டாமல் சாக்கடைக்கு குடிநீர் வழங்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறோம்! தண்ணீரை வீணாக்கும், மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மக்கள் சக்தி இயக்கம், மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.