திமுக அமைச்சர்கள் போஸ்டர் – கைகலப்பு- திருச்சியில் நடப்பது என்ன?
திமுக அமைச்சர்கள் போஸ்டர் – கைகலப்பு- திருச்சியில் நடப்பது என்ன?
திருச்சியில் உள்ள திமுகவின் இரண்டு முக்கிய புள்ளிகளும் அமைச்சராக பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து நேரடியாக போட்டி போடத் தொடங்கிவிட்டனர். இரு அமைச்சர்களும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தாலும் சரி தனித்தனியாக நடத்தி வந்தனர். மேலும் திருச்சி திமுகவின் மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டம் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சியை, தெற்கு மாவட்டம் தனியாக நடத்தும். இப்படி இருந்து வந்த நிலையில் 30ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு அமைச்சர்களும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒன்றாக இணைந்து பங்கேற்க தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட சிறப்பு குறை தீர் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய மக்களும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து வருகின்றனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இருவரும் இணைந்து பெரும்பான்மையான பகுதிகளுக்குச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி அன்று முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுவைப் பெற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் இரண்டு அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. இதற்காக திமுகவைச் சேர்ந்த சித்தூர் மணிவேல் என்பவர் முசிறி தொகுதி முழுக்க குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் நேரு, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி படங்களை பயன்படுத்தி போஸ்டர், பிளக்ஸ் அடித்திருந்தார். மேலும் சில போஸ்டர்களில் அமைச்சர் நேரு படத்தை விட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி படம் பெரிதாக இருந்ததாக கூறப்படுகிறது, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் படம் சிறியதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அல்லூர் மணிவேல் அடித்த போஸ்டர்கள் இரவு நேரத்தில் கிழிக்கப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பிரச்சினை குறித்து எஸ்.பின் கவனத்திற்கு சென்ற உடன் அனைத்து பிளக்ஸ்களையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டாராம். மேலும் இனிமேல் இருதரப்பினரும் மோதிக் கொண்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விடுவோம் என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளாராம். பிறகு சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட அனைத்து பிளக்ஸ் போர்டுகளும் அப்புறப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு முசிறியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொள்ளவில்லை, அன்று துறை ரீதியான வேலைக்காக நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிய அல்லூர் மணிவேலை அங்குசம் தொடர்பு கொண்டது, “அரசு நிகழ்ச்சிக்கு அமைச்சர் வருவதாக கூறி இருந்ததை அடுத்து அமைச்சர் நேரு, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இவருடைய புகைப்படங்களையும் பயன்படுத்தி, இருவரின் படங்களையும் ஒரே சைஸில் அடித்து வைத்தேன். இப்படி 70 ஆயிரம் ரூபாய் செலவில் கைக்காசை போட்டு பிளக்ஸ் மற்றும் போஸ்டரை அடித்தேன். அதை கிழித்து விட்டார்கள். இதன் பிறகு மீண்டும் 80,000 ரூபாய் கைக்காசை போட்டு மீண்டும் அடித்தேன். அதையும் கிழித்து விட்டார்கள். மேலும் என்னை அழைத்து தகாத வார்த்தையில் திட்டி, அதுமட்டுமல்லாமல் அடித்தார்கள், இதில் காயமடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
அரசு நிகழ்ச்சிக்கு எங்கள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வருகிறார் என்பதால் தான் போஸ்டர் மற்றும் பிளக்ஸ் அடித்தேன், எங்கள் அமைச்சர் எங்கள் பகுதிக்கு வரும்போது எப்படி அடிக்காமல் இருக்க முடியும். எங்கள் அமைச்சர் படத்தை போட்டதற்காக இப்படி செய்து விட்டார்கள். இன்னும் “தெற்கு மாவட்ட செயலாளருக்கு, வடக்கு மாவட்டத்தில் என்ன வேலை” என்று கேட்டு என்னை மிரட்டினார்கள்.
திருச்சி திமுக ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது. ஒரு குடும்பத்தின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். நான் அடித்த பிளக்ஸ் மட்டும் போஸ்டரில் எந்தவித தவறும் செய்யவில்லை, நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
காடுவெட்டி தியாகராஜன் ஜாதி பார்த்து செயல்படுகிறார். நான் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் பிறந்ததால் ஒதுக்கப்படுகிறேன். அந்த சமூகத்தில் பிறந்தது என்னுடைய தப்பா. இனி அரசியலே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இனி குடும்பத்தை பார்க்க வேண்டியதுதான். கை காசை செலவு செய்து இப்பொழுது இந்த நிலை, என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள், தவறு செய்தவர்கள் அவர்கள். ஆனால் வழக்கு என் மீது, இதனால் முடிவு செய்துவிட்டேன். குடும்பத்தை கவனித்துக் கொள்ள போகிறேன். தலைமை பார்த்து திருச்சி அரசியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதுபற்றி எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜனை அங்குசம் தொடர்பு கொண்டது, “இதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க, நான் ஒரு எம்எல்ஏ, மாவட்ட செயலாளர், எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு, மக்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தா சொல்லுங்க, மக்கள் எவ்வளவு மனு கொடுத்தாங்க, எவ்வளவு வேலைக்கு தீர்வு கண்டுருக்கோம் இப்படி என்கிட்ட கேள்விய கேளுங்க. யாருன்னே தெரியாத ஒருத்தன் சொன்னானு ஏன்கிட்ட கேள்வி கேக்குறீங்க, அவன் எங்க கட்சி உறுப்பினரா…. சொல்லுங்க. யாருன்னே தெரியாத ஒருவன் என் கட்சிக்காரங்கள அடித்திருக்கிறான். அவங்க வீட்டு பொம்பளைங்க அழுதுகிட்டு கிடக்குறாங்க. வழக்குப்பதிவு செய்து இருக்கு. இந்த கேள்விய போலிஸ் கிட்ட போய் கேளுங்க சார்.
இந்த மாதிரி கேள்வி எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க எப்ப பார்த்தாலும், இதே மாதிரி நீங்க பண்றீங்க. எதுக்கு எடுத்தாலும் எம்எல்ஏ கிட்டயே கேட்கறீங்க. அவன் எங்க கட்சி காரங்கள அடிச்சு இருக்கான்.
நாங்க மக்களுக்கு நிறைய செய்ய நினைக்கிறோம். அத தான் எங்க கிட்ட இருந்து முதல்வரும் விரும்புகிறாரு. அங்குசம் பத்திரிகைக்கு இதே வேலையா போச்சி, எதா இருந்தாலும் போன் அடிச்சு கேட்குறது. ஒரு நாலஞ்சு பத்திரிக்கை இருக்கு, இப்படித்தான் எது நடந்தாலும் ஒன்னுக்கு ரெண்டா போட்டு பெருசாகிரவேண்டியது. மக்கள் பிரச்சனையை எங்ககிட்ட கேளுங்க சார் என்று கூறினார்.
இப்படி திமுகவின் கோஷ்டிப் பூசல் தலைதூக்கத் தொடங்கி இருக்கக் கூடிய நிலையில் உடனடியாக திமுக தலைமை இதைக் கண்டு கொள்ளாவிட்டால் திருச்சியின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக உள்ளடி வேலை காரணமாகவே தோல்வியை சந்திக்க நேரிடும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இரண்டு அமைச்சர்கள் இடையே உள்ள ஈகோ கிளாஸ் உடன் பிறப்புகளின் ஈகோ பிளாஸாக மாறுவதற்குள் தடுத்து நிறுத்தாவிட்டால் திமுக திருச்சியில் தன்னுடைய பலத்தை இழக்கும் என்றும் கூறுகின்றனர்.