கலெக்டரைவிட கௌரவமான பதவியாக பார்க்கப்பட்ட ”கட்சிப் பதவி”க்கு வந்த சோதனை !
கலெக்டரைவிட கௌரவமான பதவியாக பார்க்கப்பட்ட ”கட்சிப் பதவி”க்கு வந்த சோதனை ! திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணி உருக்கமாக பேசியதாக வெளியான தகவல் கழக உடன்பிறப்புகளுக்கிடையே, அரசியல் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. திருச்சி மத்திய மாவட்ட செயலராக பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் எங்கும், யாரிடமும் எந்த சிபாரிசுக்காகவும் கைகட்டி நின்றதில்லை, சொந்தமாக ஒரு சதுர அடி நிலம்கூட வாங்கியதில்லை என்பதை தைரியமாக எங்கு வேண்டுமானாலும் சொல்வேன் என்று ”தைரியமணியாக” மாறி பேசியிருக்கிறார், மாவட்ட செயலர் வைரமணி.
அதிலும் குறிப்பாக, ”40 ஏக்கருக்கும் மேல் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தபோது, ஆண்டுக்கு அரைக்காணி நிலமாவது வாங்கிப் போட்டுவிடுவேன். அரசியலுக்கு வந்தபிறகு அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் கட்சிக்காரர்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.” என்பதாகவும் பேசியிருக்கிறார், வைரமணி. ”ஆளுங்கட்சியாக இருக்கும் காலத்திலேயே, எங்களையெல்லாம் கட்சி கண்டுகொள்ளவில்லை” என்று பகுதி செயலர்கள் புலம்பும் அளவிற்கா உட்கட்சி நிலவரம் இருக்கிறது? லோக்கல் உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
”அட நீங்க வேற, மாவட்ட செயலாளர்களுக்கே மரியாதை இல்லாத நிலைதான் இருக்கிறது. ஒரு காலத்தில் திமுகவில் மாவட்ட ஆட்சியரைவிட அதிகாரம் மிக்க ஒரு பதவியாக கட்சிப்பதவியான மாவட்ட செயலர் பதவி பார்க்கப்பட்டது. அது எல்லாம் ஒரு காலம். இன்று, மாவட்ட செயலர் சொன்னாலும் எந்த அரசு அதிகாரிகளும் சட்டைகூட செய்வதில்லை. அவர்களும் கட்சி வேலையைப் பார்த்தோமா. மேலிடத்துக்கு விசுவாசமாக இருந்தோமா? என்று பதவிக்கும் பவிசுக்கும் பங்கம் வராத வகையில் ஒதுங்கி போய்விடுகிறார்கள்.
முன்பெல்லாம், முதல்வரோ, கட்சித் தலைவரோ மாவட்டத்திற்கு வருவதாக இருந்தாலும் மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் பயணத்திட்டங்கள் வகுக்கப்படுவதில்லை. இன்று அப்படியில்லை. மாவட்ட அளவில் நடக்கும் கட்சி ரீதியிலான சில முன்னெடுப்புகள்கூட, மாவட்ட செயலரின் கவனத்திற்கு செல்லாமலே கூட நடைபெறத்தான் செய்கின்றன.
மிக முக்கியமாக, மாதந்தோறும் குறிப்பிட்ட ”வருவாய்” கிளை கழகம் வரையில் பகிர்ந்தளிக்கப்படுவது வழக்கம். இப்போது, மாவட்ட செயலருக்கே வந்து சேராத போது, அவர் பாக்கெட்டிலிருந்தா பகுதிக்கும் கிளைக்கும் பிரித்துக் கொடுப்பார்? அதனால்தான், கட்சி நிகழ்ச்சிகளில் தலையை காட்டினோமா? கட்சி தொண்டர்களின் கல்யாணம் காதுகுத்துனு கலந்துகிட்டோமா? லோக்கல் மினிஸ்டர்கூட பயணப்பட்டோமானு பதவி காலத்தை ஓட்டிகிட்டுருக்காங்க.” “அண்ணா காலத்துல … கலைஞர் காலத்துல இருந்த மாதிரி கட்சி அமைப்புகள் கட்டுக்கோப்பா மாற வேண்டும்” என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்கிறார்கள், முடி நரைத்த உடன்பிறப்புக்கள் சிலர்.
– டெல்டாகாரன்.