கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பில் கிராமத்தின் பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட காற்றாலை !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை முயற்சியில் புதுடெல்லி மத்திய கல்வி அமைச்சத்தின் நிதி உதவியுடனும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் வாயிலாகவும் இத்திட்டத்தின் தமிழக தென்மண்டல ஒருங்கிணைப்பு நிறுவனமான கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வழிகாட்டுதலுடனும் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் ஊராட்சியிலுள்ள யாகபுடையான்பட்டியில் 19.09.2025 அன்று மாலை மரபு சாரா எரிசக்தியில் செங்குத்தாக சுழலும் காற்றாலை மின் உற்பத்தியைத் தொடங்கி கிராம மக்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.

உலகளவில் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்து புவிவெப்பமயமாவதைத தணிக்கவும்; இதனால் பல்லுயிர்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கவும் கிராமபுற மக்களும் பள்ளி மாணாக்கர்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும் காற்றாலை மின் உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது.

செங்குத்தாக சுழலும் இதன் மூலம் 500 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை அவ்வூர்; நாடக மேடையில் மின் விளக்குகள் அமைத்து குழந்தைகளின் மாலை நேர கல்விக்காக பயன்படுத்திக் கொள்வர். எஞ்சியிருக்கும் மின்சாரம் பேட்டரியில் சேமித்து வைக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு ஒரு இலட்சம் ரூபாய். கல்லூரி நிர்வாகமும் கிராம மக்களின் பங்களிப்பும்; சேர்த்து இருபத்தைந்தாயிரம் என இத்திட்டத்திற்கு ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த இளங்கலை மூன்றாம் ஆண்டு கணிணி அறிவியல் துறைத்துறை பணிமனை இரண்டின் மாணவர்கள் உதவினர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சேச தலைமையேற்று சிறப்புரையாற்றினர். கிராமத் தலைவர் லாரன்ஸ் மேனாள் ஊராட்சிமன்றத் தலைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சேச உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான டோமினிக், நாகமங்கலம் ஆலய பங்குதந்தை அந்தோணிசாமி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் அலெக்ஸாண்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக உன்னத் பாரத் அபியான் துணை ஒருங்கிணைப்பாளரும் செப்பர்டு விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளருமான ஜெயச்சந்திரன் வரவேற்று திட்ட விளக்கவுரையாற்றினார். முடிவில் யாகபுடையான்பட்டி ரிச்சர்டு நன்றி கூறினார். விரிவாக்கத்ததுறை ஒருங்கிணைப்பாளர்கள் லெனின் ஜெயசீலன் யசோதை சுதாகர் மற்றும் அலுவலக உதவியாளர் அமலேஸ்வரன் உள்ளிட்ட சுமார் 250-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.