”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி !
”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி ! திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு மற்றும் கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் தனிச்சிறப்பே, பாரதவிலாஸ் பாணியிலான அதன் பன்முகத்தன்மைதான்.
முதல்முறையாக 1951 இல் டாக்டர் மதுரம் சுயேட்சையாக போட்டியிட்டது தொடங்கி, இன்று வரையில் காங்கிரசு 5 முறை; சிபிஐ 3 முறை; சிபிஎம் ஒரு முறை; அதிமுக 3 முறை; பாஜக 2 முறை மதிமுக மற்றும் திமுக தலா ஒரு முறை என வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.
கட்சிகளின் பட்டியலை காட்டிலும் வேட்பாளர்களின் பட்டியல்தான் விஷேசமானது. மத சிறுபான்மையினர், பிள்ளைமார் உள்ளிட்டு சாதி சிறுபான்மையினர் பலரை கண்ட தொகுதி திருச்சி.
காங்கிரசின் வேட்பாளர்களாக களம் கண்ட எம்.கே.எம். அப்துல் சலாம், அடைக்கலராஜ் ஆகியோர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக, அடைக்கலராஜ் முதல் மூன்றுமுறை காங்கிரசு சார்பிலும், நான்காவது முறையாக தமாக சார்பிலும் தொடர்ந்து நான்கு முறை எம்.பி.யாக கோலோச்சிய பெருமைக்கு சொந்தக்காரர். திருச்சிக்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல், சேலத்திலிருந்து வந்து பாஜக சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் ரெங்கராஜன் குமாரமங்கலம் தொடர்ந்து இரண்டுமுறை எம்.பி.யாக நீடித்தார். ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக கட்சி பிரமுகர் அதிமுகவில் இணைந்து களம் கண்ட பட்டியலினத்தை சேர்ந்த தலித் எழில்மலையும் திருச்சிக்கு அந்நியமானவர்தான்.
இதையெல்லாம்விட, மதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கிய தஞ்சாவூர் – ஒரத்தநாடை சேர்ந்த எல்.ஜி என்றழைக்கப்படும் எல்.கணேசன் ஏறத்தாழ தமிழகத்திலேயே இரண்டு இலட்சத்திற்கும் அதிமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையோடு எம்.பி.யாக ஆனவர்.இந்த பன்முகத்தன்மையெல்லாம் எல்.ஜி.காலத்தோடு காணாமல் போய்விட்டது.
அவரது காலத்திற்கு பின்னர், தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி தொகுதியில் இருந்த இலால்குடி, முசிறி சட்டமன்ற தொகுதிகள் கழட்டிவிடப்பட்டு, கந்தர்வக்கோட்டை தனித்தொகுதியும் புதுக்கோட்டையும் புதிதாக சேர்ந்ததிலிருந்து, கள்ளர்கள் களம் காணும் தொகுதி என்பதாக மாற்றப்பட்டு விட்டது என புலம்புகிறார்கள் ஏரியா வாசிகள். எல்.ஜி.க்கு அடுத்து களம் கண்ட, அதிமுகவின் ப.குமார் மற்றும் காங்கிரசின் திருநாவுக்கரசு ஆகிய இருவருமே அந்தக் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் என்கிறார்கள்.
இந்த கணக்கீட்டின்படிதான், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் தயாராகி வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக, அதிமுக தரப்பில் இந்த முறை மணல் கருப்பையாவுக்குத்தான் அதிக வாய்ப்பு என்கிறார்கள். இவர் மணல் கரிகாலனுக்கு நெருங்கிய உறவினர். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதுக்குமான மணல் காண்டிராக்ட் முழுக்க எஸ்.ஆர்.குரூப் என்றழைக்கப்பட்ட மணல் ராமச்சந்திரன் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. எடப்பாடியாரின் ஆட்சி முடிவடையும் தருவாயில், தமிழகம் விடியலுக்காக காத்திருந்த வேளையில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மணல் ராமச்சந்திரன் குடும்ப திருமண விழாவில் பங்கேற்றது பேசு பொருளானது.
ஆட்சி மாறிய பிறகும் இன்று வரையில் மணல் ராமச்சந்திரன் கட்டுப்பாட்டில்தான் மொத்த மணல் காண்டிராக்ட் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையில், அமலாக்கத்துறையினர் மணல் ராமச்சந்திரன் தொடர்புடைய உறவினர்கள் உள்ளிட்டு பல இடங்களில் ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த பின்புலத்தில் இருந்துதான், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஒரு வகையில் உறவினரும் அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் மணல் கருப்பையாதான் திருச்சி தொகுதியின் வேட்பாளர் என்ற பேச்சு அடிபடுகிறது. இதனை உறுதிபடுத்தும்வகையில், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான கட்சி நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஒன்றாக இணைந்து கடைசிவரை பங்கேற்று திரும்பியதும் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
திமுக தரப்பில், கூட்டணி கட்சியான மதிமுகவின் துரை வையாபுரிக்கே அதிக வாய்ப்பு என்கிறார்கள். இதுவரை திமுக நிற்காத தொகுதிகளில் இந்த முறை வேட்பாளர்களை களமிறக்குவது என்ற அதிரடி திட்டம் ஒன்று கைவசம் இருப்பதாக அறிவாலயத் தரப்பில் சொல்கிறார்கள். திருச்சியை பொருத்தவரையில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திமுக சார்பில் போட்டியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபரும் மக்கள் நீதி மையத்தின் சார்பில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு பின் வெளியேறியவருமான எம்.எம்.எம். முருகானந்தத்தை அதிமுக, பாஜக, திமுக ஆகிய மூன்று கட்சிகளுமே குறிவைத்திருக்கின்றன. கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதோடு, நாகரீகமான தொழிலதிபர், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர், அகில இந்திய அளவில் ரோட்டரி கிளப்பில் முக்கியமான நபர் என்பதெல்லாம் இவரது சிறப்பாக இருப்பதால், மூன்று கட்சிகளின் சார்பிலும் வலைவீசியிருக்கிறார்கள். எதிலும் சிக்காமல் அமைதி காத்து வருகிறாராம் முருகானந்தம்.
சிட்டிங் எம்.பி. திருநாவுக்கரசு மீது சொந்தக் கட்சியினரே கடும் அதிருப்தியில் இருப்பதால், கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் சாய்ஸ், தொடர்ந்து நான்கு முறை எம்.பி.யாகவும் திருச்சியில் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ்ந்த அடைக்கலராஜ் மகனும் தொழிலதிபருமான ஜோசப்லூயிஸ்க்குத்தான் என்கிறார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஜோசப்லூயிசுக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மனிதஉரிமை பிரிவின் தலைவர் புத்தூர் சார்லஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு 1000 கணக்கில் இ.தபால் அனுப்பி உள்ளார்.
ஆனாலும், ராகுல் – சோனியாவை சந்தித்து எப்படியாவது துண்டை போட்டு வைக்க திருநாவுக்கரசர் தரப்பில் மூவ் செய்யப்படுவதாகவும் தகவல். அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் தயாராக இருக்கிறார் என்கிறார்கள்.
எது எப்படியோ, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய மூன்றும் கள்ளர்கள் செல்வாக்கான தொகுதி என்ற கணக்கீட்டிலிருந்து தான், எல்.ஜி.க்கு பிறகான வேட்பாளர்களை சமூகம் பார்த்து களமிறக்கி வருகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விசயம். போட்டி போட்டுக் கொண்டு மற்ற கட்சிகளும் இதே பார்முலாவில் ஆட்களை இறக்க, ஓட்டுகள் சிதறியதுதான் மிச்சம் என்கிறார்கள். உதாரணத்துக்கு, ப.குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சாருபாலா தொண்டைமானை வெறும் மூவாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சாதிய கூண்டைவிட்டு, பழைய பன்முகத்தன்மையை மீட்டெடுக்குமா, திருச்சி எம்.பி.தொகுதி ? பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
அங்குசம் புலனாய்வு குழு.