வேனில் வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் ! துறையூர் போலிசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தனிப்படை போலிஸ் !
ஜோஸ்
துறையூரில் 2 கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் நகர்புறப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துறையூர் நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் துறையூர் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அனைவரின் முன்னிலையில் குற்றச்சாட்டு வைத்தது பேசியது மிகவும் பரபரப்பானது.
இந்நிலையில் முசிறி மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கஞ்சா குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் , இன்று (05-08-2022) மாலை துறையூர் பாலக்கரை பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆத்தூர் ரோட்டில் இருந்து துறையூர் நோக்கி வந்த வேனை மடக்கி விசாரித்தனர்.
வேனுக்குள் சோதனையிட்ட போது காக்கி கவருக்குள் சுற்றப்பட்ட பண்டல் இருந்ததை எடுத்து சோதனையிட்டனர் அதில் போதைப் பொருளான கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் துறையூர் அடுத்த பச்சபெருமாள்பட்டி ,வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகனான அருண்குமார் என்பதும், இவர் திமுகவில்பச்ச பெருமாள்பட்டி கிளைச் செயலாளராக இருந்து தற்போது இளைஞரணியில் பொறுப்பில் உள்ளதும் , தற்போது தனது ஊரில் இருந்து துறையூருக்கு தனக்கு சொந்தமான வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் உடனடியாக அவரிடமிருந்த 2 கிலோ அளவுள்ள கஞ்சாவையும், அதனைக் கடத்தியதற்கு பயன்படுத்திய அவருடைய நான்கு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் துறையூர் நகரில் வைத்து கஞ்சா கடத்திய குற்றவாளியை மடக்கிய தனிப்படை போலீசார் துறையூர் காவல் நிலையத்தில் கஞ்சா கடத்திய நபரையும், வாகனத்தையும் ஒப்படைத்தனர்.
துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரான அருண்குமார் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.
துறையூர் நகர் மற்றும் தாலுக்காவில் எந்தவொரு இடத்திலுமே கஞ்சா விற்பனை நடைபெறாமல் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துறையூர் போலீசார் கூறி வந்த நிலையில், தனிப்படை போலீசார் 2 கிலோ கஞ்சாவையும், குற்றவாளி மற்றும் வாகனத்தையும் பிடித்துள்ள சம்பவம் துறையூர் போலீஸ் வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனிப்படை போலீசார் துறையூர் போலீசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக துறையூர் பகுதியில் பலர் பேசிக் கொள்வதைக் காண முடிந்தது .