செங்கல் சூளையில் சுடர்விடும் தாராபுரம் கவிஞர் கவிதா குமாரி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்கிற ஊராட்சி ஒன்றிய கிராமத்தில் செங்கல் சூளையில் பணியாற்றி வருபவர் கவிதா குமாரி. இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் கவிதா குமாரியின் கணவருக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். வறுமை நிலையிலும் பிசிஏ படித்துப் பட்டம் பெற்ற கவிதாகுமாரி சிறுவயதிலிருந்தே கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றவர். தமது வாழ்நாளை செங்கல் சூளையில் பணிபுரிந்துகொண்டு அன்றாடக் கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைக்கிறார்.
இவர் தற்கால கவிதை இலக்கியமாக விளங்கும் தன்முனைக் கவிதைகள்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு கவிதைகள் எழுதி வருகின்ற சிறந்த கவிஞர். இவரது கவிதைகள் தினத்தந்தி, ராணி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அண்மையில் கவிஞர் விகந்தன் அவர்களின் அம்மாச்சி பதிப்பகம் வெளியிட்ட மனம் நிறையும் மண் வாசம் என்கிற தன்முனைத் தொகுப்பு நூலில் இவரது சிறப்பான தன்முனைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த சிந்தனைகளுடன் இவர் எழுதும் கவிதைகளில் காதல், சமூக அவலம், இயற்கை, ஏழ்மை போன்ற கருத்துகள் நிறைந்துள்ளன.
அண்மையில் தன்முனைப் படைப்பாளர் பேரவை நடத்திய ஆண்டு விழாவில் “கவிநிலா கவிதைகள்” எனும் இவரது நூல் வெளியிடப்பட்டது. நிறுவனர் அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் இவரது தன்முனைக் கவிதைகளைத் தொகுத்து இலவசமாக பதிப்பித்து மேடையில் தன்முனைக் கவிதைகளின் தந்தை கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களது முன்னிலையில் கவிஞர் சு.சுப்புராஜூ அவர்களால் வெளியிடப்பட்டது . கவிஞர் தங்க ஆரோக்கியதாசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குகையில் “செங்கல் சூளையில் அன்றாடம் தினக்கூலியில் வேலைசெய்து கொண்டு , இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டு, மாற்றுத்திறனாளியான கணவரையும், தனது முதிய தாயாரையும் கவனித்துக் கொண்டு கவிஞர் கவிதா குமாரி அவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியது மேலும் இவர் எழுதும் கவிதைகள் உயிரோட்டமானவை.
அவரது வாழ்க்கைப் பின்னணியை விளக்குகின்ற கவிதைகள் பல இந்த நூலில் உள்ளன. இவர் போன்ற ஏழ்மை நிலையில் வாடும் கவிஞர்களுக்கு இந்தச் சமுதாயம் உதவ முன்வரவேண்டும் … குறிப்பாக இந்த கவிஞரின் எதிர்கால வாழ்வுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்” என வலியுறுத்தி பேசினார். ஏற்புரை வழங்கிய கவிதா குமாரி அவர்களின் பேச்சில் பலர் நெகிழ்வுற்று கைதட்டி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் வந்திருந்த நான் மீடியா ஆர்ஜெ நாகா அவர்கள் நூலாசிரியர் கவிதா குமாரியை பிரத்தியோகமாகப் பேட்டி எடுத்தார்.
தன்முனைக் கவிதைகள் குழும அமைப்பின் நிறுவுனர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் செயல் தலைவர் ந.வேலாயுதம் ஆகியோர் இவரது படைப்புகளை தொடர்ந்து இலவசமாக வெளியிட்டு உதவுவதாக தெரிவித்தனர். விழா மேடையில் இவரது நூல் வெளியீட்டில் ஹைக்கூ கவிஞர் ஓவியக்கவிஞர் அமுதபாரதி, நூலேணி பதிப்பகம் திரு.கன்னிக்கோவில் இராஜா,கவிஞர்கள் முனைவர் புகழேந்தி, ராஜூ ஆரோக்கியசாமி, வைரவரி வானரசன்,எழில் இலக்கியப்பேரவை தலைவர் எழில் சோம பொன்னுசாமி, கவிதைச் சாரல் சங்கத்தின் தலைவி பேச்சியம்மாள் பிரியா, திருநின்றவூர் நூலகர் திரு.சுரேஷ் பாபு ஆகியோர் உடனிருந்து வாழ்த்தினர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.