என்னது, டிரம்ப் சிக்கன் பிரியாணியா? அதுக்கு 25 % தள்ளுபடி வேறயா ?
ஏங்க எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ??? ஒரு ரூபாய்க்கு டீசர்ட் கிடைக்கும். ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என புதிதாக கடைகளை திறக்கும் போது விளம்பரம் செய்து பார்த்திருப்போம்.
ஆனால், இங்கு ஒரு உணவகத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் உள்ள வரி விதிப்பு தொடர்பான விவகாரத்தை அமெரிக்க அதிபரின் பெயரை பிரியாணிக்கு பயன்படுத்தி 25 சதவீதம் தள்ளுபடி விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுவது சற்று வித்தியாசமாகவே உள்ளது.
சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் தனியார் உணவகம் ஒன்றில் அச்சிடப்பட்ட விளம்பர பலகையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான வரி விதிப்பை எதிர்த்து, இனிவரும் நாட்களில் நமது உணவகத்தில் இன்று மாலை முதல் தினம் தோறும் மாலை 6:00 மணி முதல் டிரம்ப் சிக்கன் பிரியாணி 25 % தள்ளுபடி உடன் கிடைக்கும். மேலும் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு ஒரு பாதிப்பும் வராது என்பதை குறிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது ஸ்டைலில் பயன்படுத்திய வார்த்தையை அப்படியே மாற்றி, ( இந்தியா வெல்லும் இந்தியா சமாளிக்கும்) என அந்த விளம்பரப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் கொஞ்சம் புதுசா தான் யோசிக்கிறாங்க என வயிறு வலிக்க சிரித்தபடியே டிரம்ப் சிக்கன் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
— மாரீஸ்வரன்