”சுனாமி பேரழிவு ” பிறருக்கு நடக்கும் வரை நிகழ்வு… நமக்கு நடக்கும் போது வலி….
இருபது வருடங்கள் கடந்தோடி விட்டன அதுவரை பாதம் தழுவிச் செல்லும் என்றே பழக்கப்பட்ட அலைகள் வாரிச்சுருட்டி இழுத்துச் செல்லும்
என்றே அறிந்து கொண்ட தினம் அது .
“சுனாமி” என்றொரு ஜப்பானிய சொல்லை இந்திய தீபகற்பவாசிகள் முதன்முறை கேள்விப்பட்ட நாளும் அன்று தான்.
டிசம்பர் 26, 2004 ஞாயிற்றுக் கிழமை பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததால் வீட்டில் தொலைக்காட்சி இல்லை.
ஞாயிற்றுக் கிழமை ஆதலால் சோம்பலுடன் பல் துலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் அலைப்பேசிக்கு சென்னை மெரினா பீட்ச்சுக்குள் கடல் புகுந்து விட்டது என்று செய்தி வருகிறது.
ஏதோ சுனாமி என்கிறார்கள். பலர் மரணமடைந்திருக்கக் கூடும் எனும் செய்தி எங்களின் நெருங்கிய உறவினர்கள் மெரீனா பீட்சுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
நானும் அப்பாவும் நிலைமை குறித்து அறிய அருகில் உள்ள டீக்கடைக்கு செல்கிறோம். அதில் ப்ரேக்கிங் நியூஸ் பார்த்து விட்டு உறவினர்களுக்கு அழைத்து அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து வீடு திரும்பினோம்.
அன்று என்ன நடந்தது? பலரது கனவுகளை ஒரு நொடியில் இல்லாமல் செய்த இயற்கை சீற்றம் எவ்வாறு நடந்தது?
இந்தோனேசிய நேரம் காலை 7:58 மணி பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதி பயங்கரமான பூகம்பம் இந்தோனேசிய தீபகற்பத்தின் வடக்கில் இருக்கும் பண்டா அசே தீவுக்கு மேற்கே 160 கிலோமீட்டரில் கடலுக்கு அடியில் உள்ள நிலப்பகுதியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்தியத் தட்டும் பர்மா தட்டும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டதில் இந்தியத் தட்டு பர்மா தட்டுக்கு கீழ் சென்றது.
நடந்த இந்த மோதலில் தெற்கில் இருந்து வடக்கு திசையாக நிலப்பகுதி 1200 கிமீக்கு விரிசல் கண்டது.
வரலாற்றில் இத்தனை நீளமான விரிசல் பூமிப்பந்தில் விட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விரிசல் முதலில் தெற்கில் ஆரம்பித்து ஒரு நொடிக்கு 2.8 கிலோமீட்டர் வேகத்தில் 400 கிலோமீட்டர் விட்டுள்ளது.
பிறகு 100 விநாடிகள் இடைவெளி விட்டு அங்கிருந்து ஆரம்பித்து வடக்கு நோக்கி விரிசல் நீண்டுள்ளது.
மொத்தம் இந்த விரிசல் பயணம் பத்து நிமிடம் நீடித்துள்ளது. இதுவும் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதிகம்.
இந்த விரிசலின் மூலம் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தியத் தட்டை கீழ் தள்ளி பர்மா தட்டு மேலேறி விட்டது. இதை “மோதலால் ஏற்பட்ட சறுக்கல்” STRIKE SLIP என்று அழைக்கிறார்கள்.
இவ்வாறு இந்தோனேசிய தீபகற்பத்தில் பல பூகம்பங்கள் நடந்துள்ளன. ஆயினும் அனைத்தும் அலை எழுச்சியை ஏற்படுத்துவதில்லை. எனவே இந்திய பெருங்கடலில் சுனாமி ஆராய்ச்சி குறித்தோ எச்சரிக்கை செய்வதற்கோ என எந்த அமைப்பும் மையமும் அதுவரை இல்லை.
பசிபிக் பெருங்கடலில் சுனாமிக்கள் அடிக்கடி ஏற்படும் என்பதால் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் – அமெரிக்கா ஆகிய நாடுகள் சுனாமி எச்சரிக்கை மையங்களை நிறுவி அப்பகுதியில் எச்சரிக்கை செய்து வந்தன.
பூமி 1200 கிலோமீட்டர் நீளத்துக்கும் 400 கிலோமீட்டர் அகலத்துக்கும் பிளந்து கொண்டது.
அதுவும் ஒரு மணிநேரத்திற்கு 10,100 கிலோமீட்டர் வேகத்தில் அந்தப் பிளவு நிகழ்ந்தது.
அங்கிருந்து உருவான ஆற்றல் ஐந்து மெகா டன் டிஎண்டி அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. இது பல அணுகுண்டுகளை ஒன்றாக வெடிக்கும் அளவு ஆற்றலாகும்.
ஹிரோஷிமா அணுகுண்டின் ஆற்றல் 0.015 மெகா டன். நாகசாகி அணுகுண்டின் ஆற்றல் 0.021 மெகா டன். இப்போது ஆற்றலை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.
இப்போது நிகழ்ந்த விரிசலின் போக்கைப் பொருத்து சுனாமி நிகழ்வு நடந்ததைப் பார்ப்போம். விரிசல் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இருந்தது.
முதல் விரிசல் இந்தேனேசியாவின் பண்டா அசேவுக்கு அருகில் இருந்து வடக்கு வட மேற்கு திசை நோக்கி நொடிக்கு 2.8 கிலோமீட்டர் என்ற வேகத்தில் தெற்குப் புறத்தில் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு நடந்தது.
இரண்டாவது பகுதி விரிசல் விட்ட இடத்தில் ஆரம்பித்து அந்தமான் நிகோபார் தீவுகள் நோக்கி வடக்கு திசையில் சற்று வேகம் குறைவாக நொடிக்கு 2.1 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நடந்தது. இது ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
இதற்கடுத்து இரண்டு தட்டுகளுள் மேற்கில் இருக்கும் இந்தியத் தட்டு – கிழக்கில் இருக்கும் பர்மா தட்டுக்குக் கீழ் சென்றது.
இவ்வாறு ஒரு தட்டு மற்றொரு தட்டின் கீழ் சென்றதால் ஏற்பட்ட பெரும் பள்ளத்தாக்குக்குள் கடல் நீர் நிரப்பியதால் இந்த நிகழ்வு நடந்த இடத்துக்கு கிழக்கே உள்ள இந்தோனேசியா மற்றும் மலேசியா தாய்லாந்தில் கடல் நன்றாகப் பின் வாங்கியது.
இந்தியத் தட்டு கீழிறங்கிய விளைவால் இந்திய கடற்கரை மற்றும் இலங்கை கடற்கரையிலும் கடல் சில கிலோமீட்டர் முதலில் பின்வாங்கியது.
கடல் பின்வாங்கியதும் இதை எச்சரிக்கை சமிக்ஞையாக எடுத்துக் கூற யாருமில்லை என்பதால் மக்கள் கடல் பின்வாங்கிய பகுதிகளுக்குள் இறங்கி ஆராய்ச்சியில் இறங்கினர்.
அரிய சிற்பி பொருக்கினர். அடுத்து பின்வாங்கிய நீர் மீண்டும் தனது இடத்தை அபகரிக்க உள் வந்தது. இது முதல் அலையாகும். இந்த அலை – சற்று வலிமை குறைவானதே ஆயினும் இதுவே சில மீட்டர் உயரம் வரை இருந்தது.
இனி, இவையன்றி முதல் மற்றும் இரண்டாம் விரிசலின் மூலம் ஏற்பட்ட ஆற்றலின் காரணமாக எழுப்பப்பட்ட அலைகளை ஒவ்வொரு கடற்கரையும் சந்தித்தாக வேண்டும்.
ஆம்.. முதல் விரிசல் வேகத்திலும் ஆற்றலிலும் ஆக்கிரோசமானது என்பதால் அந்த விரிசல் வடக்கு – வட மேற்கு திசை ( அதாவது இந்திய துணை கண்டத்தை நோக்கி) இருந்தமையால் அவ்வளவு ஆற்றலுடனும் ஆக்கிரோஷத்துடனும் சுனாமி அலைகள் தங்களது பயணத்தைத் தொடங்கின…
ஒரு மணிநேரத்திற்கு 500 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் இருந்தாலும் ஆழ் கடல் பகுதியில் சுனாமி பயணம் செய்வதை ஆழ்கடலில் பயணம் செய்யும் படகுகள் , கப்பல்களால் கூட உணர முடியாது.
காரணம் ஆழ் கடலில் சுனாமி சில அடிகள் உயரம் மட்டுமே இருக்கும் மிகப்பெரிய மேடு போல பயணம் செய்யும்.
இதனால் தங்களுக்குக் கீழ் சுனாமி பயணம் செய்கிறது என்பதை அங்கு பயணம் செய்பவர்களாலேயே உணர முடியாது.
இந்த முதல் விரிசலின் காரணமாக உருவானதே இரண்டாவது மற்றும் தீவிரமான பல உயிர்களைக் காவு வாங்கிய இரண்டாவது பேரலை.
அடுத்து நேர்ந்த விரிசல் சற்று பலம் குறைவானது மற்றும் சற்று நீண்ட நேரம் நீடித்தமையால் மூன்றாவது அலை சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தது.
உயிர் பிழைத்தவர்களின் கூற்றுப்படி இரண்டாவது அலையே மிகப்பெரும் ஆற்றலுடனும் உயரத்தில் அதிகமானதாகவும் இருந்தது என்பதாகும்.
பூகம்பம் ஏற்பட்ட நேரத்தில் இருந்து கிழக்கு திசையில் மிக அருகில் பயணித்து பதினைந்து நிமிடத்தில் இந்தோனேசிய, மலேசியா, தாய்லாந்து கடற்கரைகளை சுனாமி பதம் பார்த்தது.
பண்டா அசே கடற்கரையில் 30 மீட்டர் வரை ஆழிப்பேரலை ஏற்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு தென்னை மரம் அதிகபட்சம் வளரும் உயரமே 25 மீட்டர் தான். எனும் போது பேரலையின் உயரத்தை நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியும். அடுத்து மேற்கே உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டது.
அங்கிருந்து 90 நிமிடங்கள் தொடங்கி இரண்டு மணிநேரங்கள் வரை இலங்கையின் கிழக்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரையைப் பதம் பார்த்தது சுனாமி. இந்தியா மற்றும் இலங்கையின் கிழக்குப் புற கடற்கரைகளில் தாக்கிய அலைகள் அங்கிருந்து வளைந்து மேற்கு கடற்கரைகளையும் தாக்கியது.
இலங்கையின் கொழும்பு இந்தியாவின் கேரளா முதற்கொண்டு சுனாமியில் இருந்து தப்ப இயலவில்லை.
அதற்கடுத்த 7 மணிநேரங்கள் பயணம் செய்து ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் சோமாலியாவை அடைந்து அங்கும் சில நூறு மரணங்களை ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதற்கடுத்த பதினைந்து நிமிடங்களில் அதனையொட்டிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டும் – அதில் இந்திய தேசத்தைச் சேர்ந்த அந்தமான் நிகோபார் தீவுகள் இருந்தும்
அப்போது நம்மிடம் சுனாமி குறித்த விழிப்புணர்வோ எச்சரிக்கை செய்யும் வழிமுறைகளோ எதுவும் இல்லை என்பதால் சுனாமி இவ்வளவு தூரம் பயணிக்காது என்ற அசட்டைத்தனம் இருந்தமையால் இந்திய இலங்கை கிழக்கு கடற்கரை ஓரங்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்படவில்லை.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது இவ்வளவு வேகமான தொலைத்தொடர்பும் சமூக வளைதளங்களும் இல்லை. இதுவும் காரணமாக இருக்கலாம்.
சுனாமி உள்நுழையும் போது எவ்வளவு பெரிய பாதிப்பை உள்ளாக்கும் என்பதற்கு பின்வரும் கற்பனை செய்து பாருங்கள் மணிக்கு சுமார் 500 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒரு மகிழுந்தை திடீரென ப்ரேக் போட்டு 50 கிலோமீட்டர் அளவுக்கு குறைத்தால் என்ன விளைவு ஏற்படும்..
அந்த மகிழுந்தில் பயணிக்கும் நபர்கள் முன் பக்கமாக அதே வேகத்தில் தூக்கி வீசப்படுவார்கள். இதையே சுனாமிக்கும் கற்பனை செய்து பாருங்கள்.
பூகம்பத்தால் உண்டான ஆற்றலின் விளைவைத் தாங்கிய கடல் நீர் 1000 கிலோமீட்டர் வேகத்தில் எந்தத் தடையுமின்றி கடலில் பயணித்து வரும்…
திடீரென கடற்கரை ஓரங்களைச் சந்திக்கும் போது அதன் வேகம் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு நடக்கும் போது கடல் அலைகள் தீவிரமான வேகத்தில் கடற்கரைகளுக்குள் வரும்.
இது சடன் ப்ரேக் பிடிக்கும் போதுபயணிப்பவர்கள் முன்னே வந்து விழுவது போல வருகிறார்களே.. அதே விளைவு தான் இதுவும். உள்ளே வந்த கடல் நீர் மீண்டும் தனது இருப்பிடம் அதாவது பள்ளத்தை நோக்கி செல்லும் அவ்வாறு செல்லும் போது அனைத்தையும் சுருட்டிச் செல்லும் விளைவு ஏற்படும்.
இதனால் நொடிப்பொழுதில் இந்த கடற்கரைகள் அனைத்திலும் சேர்த்து சில லட்சம் மக்கள் மரணமடைந்தனர். பலர் அனாதைகளாகவும்
விதவைகளாகவும் மாறினர்.
நிகழ்வு நடந்த தினம் வேளாங்கன்னியில் சுற்றுலா சென்றிருந்த எனது சகோதரி ஒருவர் கூற நேரடியாகக் கேட்டது.
நேரம் காலை 9.30 மணி இவரும் குடும்பத்தாரும் வேளாங்கன்னி பேராலயத்துக்குள் இருந்துள்ளனர். திடீரென பெரும் கூச்சல் ஓலம் வெளியே கேட்டுள்ளது. யாரும் வெளியே செல்லாமல் பேராலயத்துக்குள்ளேயே இருந்துள்ளனர்.
சில நாழிகைகள் கழித்து வெளியே வந்து பார்த்த போது பிணங்கள் குவியல் குவியலாக இருந்ததைக் குறிப்பிட்டார். அது நிகழ்ந்த பல வருடங்கள் கழித்தும் கடலைக் கண்டாலே பதட்டம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய தீபகற்பம் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் மாறாத வடுவை ஏற்படுத்திய நிகழ்வு அது.
இந்த நிகழ்வின் விளைவாக இந்தியப் பெருங்கடலிலும் சுனாமி எச்சரிக்கை மையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்தியாவுக்கு என பிரத்யேக சுனாமி எச்சரிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுனாமியை ஒட்டி மற்றொரு ஆச்சரிய நிகழ்வுகளும் நடந்தன.
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஓங்கே மற்றும் செண்டினல் போன்ற இதுவரை நவீன உலகுடன் கலக்காத பழங்குடி இனங்கள் வாழும் பகுதிகளில் பழங்குடி இனங்கள் முற்றிலுமாக அழிந்திருப்பார்கள் என்றே கருதினர்.

ஆனால் இந்தோனேசியாவில் இந்த பூகம்பம் நடந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த சிமியூல் தீவுகளிலும் அந்தமான் தீவுகளில் இருந்த பழங்குடி இனங்கள் பெரிய பாதிப்பைச் சந்திக்கவில்லை.
இதற்குக் காரணமாகக் கூறப்படுவது 1907 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி இதே போன்ற பேரழிவு தரும் பூகம்பமும் சுனாமியும் நிகழ்ந்துள்ளது.
இந்த பழங்குடி இனங்களில் அந்த சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையும் உயிரிழப்புகளையும் அறிவூட்டும் நாட்டுப்புற பாடல்களாகவும் கதைகளாகவும் தலைமுறை தலைமுறைகளாகக் கூறி வளர்த்து வந்துள்ளனர்.
எனவே இம்முறை பூகம்பம் ஏற்பட்டதுமே பெரிய அலைகள் வரப் போகின்றன என்பதை ஏற்கனவே நாட்டுப்புற கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டதால் மேடான இடங்கள், மலைகள், மரங்கள் மேல் ஏறி தங்களின் உயிர்களைக் காத்துக் கொண்டுள்ளனர்.
அந்தப்பக்கம் ஹவாய் தீவில் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மைய ஆராய்ச்சியாளர்களுக்கு – சுனாமி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டிருப்பது தெரிந்ததும் தங்களால் இயன்ற அளவு இந்தியா மற்றும் இலங்கைக்கு தெரிவிக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது.
மேலும் இதற்குரிய முன் கூட்டிய செயல்முறைத் திட்டம் இல்லாததாலும் கால அவகாசம் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மட்டுமே என்பதாலும் அக்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் இந்த அளவு முன்னேறவில்லை என்பதாலும் காலங்கடந்தே எச்சரிக்கை வந்து சேர்ந்திருக்கிறது.
எனினும் ஆப்பிரிக்காவுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை அவர்கள் அனுப்ப போதுமான நேரம் (7 மணிநேரம்) இருந்தமையால் அங்கு மரண எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது.
இன்றைய தினம் 2004 சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். அவர்தம் உற்றார் உறவினருடன் உணர்வால் உடனிருப்போம்.
எதுவும் பிறருக்கு நடக்கும் வரை நிகழ்வு
நமக்கு நடக்கும் போது வலி
பிறர் வலி உணரும் போது
ஒவ்வொரு நிகழ்விலும் பாடம் கற்க முடியும்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.