துண்டு பிடித்தல், தொண்டர் பிடித்தல்களுக்கு இடையே விஜய் மாநாடு பற்றிய என் கண்டுபிடித்தல் இதோ!
விஜய் கூட்டிய மதுரை மாநாட்டில் லட்சக்கணக்கான கூட்டம் திரண்டது அவரது கதாநாயக பிம்ப அரசியலுக்கான வரவேற்பு. இதில் வியக்கவோ அதிர்ச்சி அடையவோ ஒன்றுமில்லை.
என்னுடைய அதிர்ச்சியெல்லாம்… விஜய் தன்னை நம்பி வந்த இந்த மாபெரும் மனித வளத்தை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறார் என்பதுதான்!
லட்சக்கணக்கில் முதல் நாள் இரவில் இருந்தே மாநாட்டுத் திடலுக்குள் பெண்களும், ஆண்களுமாக திரளத் தொடங்கிவிட்டனர். மாநாட்டு நாளான ஆகஸ்டு 21 ஆம் தேதி காலையில் இருந்து அனைத்து சேனல்களும் அந்த கூட்டத்தை லைவ் செய்து கொண்டிருந்தன.
தொண்டர்களுக்கு தண்ணீர் இல்லை, கூரை இல்லை அதனால் வெயிலில் வாடுகிறார்கள், வெயிலில் சுருண்டு தவிக்கிறார்கள்… என்றெல்லாம் சேட்டிலைட் சேனல்களும் விஜய் வெறுப்பை கக்கும் யு ட்யூப் சேனல்களும் டைட்டில் போட ஆரம்பித்துவிட்டன.
இதையெல்லாம் தாண்டி மாலை 4. 30 மணி மணிக்கு மேல் மங்கல இசையோடு கூட்டம் தொடங்கியது.
புஸ்ஸி ஆனந்த் சாதாரணமாக பேசுவதற்கே தடுமாறினார். இரண்டு மாதமாக அங்கேயே தங்கி மாநாட்டு வேலைகளைப் பார்த்த உண்மையிலேயே விஜயின் செயல்வீரர் அவர். அவரிடம் பேச்சுக் கலையை எதிர்பார்க்கக் கூடாது.
துடுக்குத் தனமாக சர்ச்சையாக பேசும் ஆதவ் அர்ஜுனாவும் இந்த மாநாட்டில் எதையும் ஸ்கோர் செய்யவில்லை. மதுரையில் பாண்டிய மன்னின் ஆட்சியை புகழ்ந்துவிட்டு, மன்னராட்சியை ஒழிப்போம் என்கிறார் அவர்.
அடுத்து நான் இந்த மாநாட்டில் எதிர்பார்த்தது ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று விஜய் கட்சியில் சேர்ந்த அருண் ராஜ் அவர்களின் பேச்சைதான். ஆனால் மெத்தப் படித்த அவரே ஒரு ரசிகக் குஞ்சு போலத்தான் பேசினார். தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் வீணடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஐ.ஆர்.எஸ். அதிகாரியையே விஜய்யால் அரசியல் படுத்த முடியவில்லை என்றால் அப்பாவித் தொண்டர்களை என்ன செய்வார்? முழுக்க முழுக்க விஜய்யின் ஒன் மேன் ஷோதான் இந்த மாநாடு.
அண்ணாவை, பெரியாரை எல்லாம் பற்றி பேசும் விஜய் அவர்கள் நடத்தும் மாநாடுகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்.
இந்த மாநாட்டையே பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை பற்றி , அவர்களின் வரலாறு பற்றி தலா கால் மணி நேரமோ அரைமணி நேரமோ பேச்சாளர்கள் பேசியிருந்தால்… வந்துள்ள லட்சக்கணக்கான கூட்டத்தில் சில ஆயிரம் பேராவது அரசியல்மயப்பட்டு ஊர் திரும்பியிருப்பார்கள்.
தவெகவில் இப்படிப் பேசுவதற்கான திறமையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தொகுத்து வழங்கிய ராஜ்மோகனே நல்லதொரு பேச்சாளர்தான். ஆனால் அவரையும் பயன்படுத்தத் தவறிவிட்டார் விஜய்.
முதல் மாநாட்டில் இருந்து ஊர் மட்டுமே வேறுபட்டிருக்கிறது. வேறு எதுவும் வேறுபடவில்லை.
அதே ரேம்ப் வாக், அதே துண்டு பிடித்தல், அதே தொண்டர் பிடித்தல் என்றுதான் இந்த மாநாடும் நடந்திருக்கிறது.
விஜய் அவர்களே… கடந்த ஐம்பதாண்டு அரசியலில் மாற்றம் வேண்டும் என்றுதான் மக்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்.
அப்படியானால் 1967, 1977 என ஐம்பது வருடம், அறுபது வருடங்கள் முந்தைய அரசியலை ஏன் திரும்ப இழுக்கிறீர்கள்?
தமிழ்நாடு 2050 இல் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்டமைக்கும் புதிய அரசியலாக உங்கள் அரசியல் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் தமிழ்நாட்டை மீண்டும் 50, 60 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கிறீர்கள்.
உங்களை நம்பி வரும் நண்பர்களை நண்பிகளை, தோழா்களை தோழிகளை உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் மக்களை அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர்த்துங்கள். முன்னோக்கி நகர்த்துங்கள்… பின்னோக்கி இழுக்காதீர்கள் விஜய். தமிழ்நாட்டை யார் நினைத்தாலும் பின்னோக்கி இழுக்க முடியாது…
— ஆரா, பத்திரிகையாளர்