”நீங்க அனைவரும் நக்சலைட் தான்..!” – எம்.பி கனிமொழி.,
”நீங்க அனைவரும் நக்சலைட் தான்..!” சமூக செயற்பாட்டாளருக்கான பாதுகாப்பு தனி மசோதா விரைவில் கொண்டுவரப்படும் – எம்.பி கனிமொழி.,
திருச்சி, லால்குடி வீரகானூர் எனும் கிராமத்தில் பழங்குடி மக்களுக்காக போராடி சிறைவாழ்க்கையை அனுபவித்து உயிரைநீய்த்த ஸ்டேன் சுவாமியின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று 05.07.2025 அன்று அவரது கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்காக தி.மு.க. எம்.பி கனிமொழி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தோழர் முத்தரசன் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில், கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தி.மு.க. எம்.பி கனிமொழி பேசியபோது, “இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கனத்த இருதயத்தோடு, அதே நேரத்தில் ஒரு பெருமையோடு ஸ்டேன் சுவாமி சிலையை திறந்து வைத்துள்ளனர். பெருமை என்னவென்றால், இன்று உலக நாடுகளே போராளி என்றால் சேகுவாரை கூறுவார்கள். அவர் தன் மண்ணுக்கு மட்டுமல்லாது, உலகத்தில் உள்ள அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடினார்.
அப்படிப்பட்ட மற்றொரு போராளியான ஸ்டேன் சுவாமியை பெற்றெடுத்த மண் இந்த மண் என்கிற பெருமை இந்த ஊர் மக்களுக்கு உண்டு. ஸ்டேன் சுவாமி எங்கெல்லாம் அடித்தட்டு மக்கள் தனது வாழ்வுரிமைகளை பறிக்கொடுத்துவிட்டு வாழ்வதற்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த மக்களோடு நின்று உரிமைக்காக போராடியவர் தான் ஸ்டேன் சுவாமி.

ஜார்க்கண்டிலே தன்னுடைய மண்ணை காப்பாற்ற போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த இளைஞர்களுக்காக, இளம் பெண்களுக்காக அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்தான் ஸ்டேன் சுவாமி. அந்த அப்பாவிகளின் விடுதலைக்காக பாடுப்பட்டவர், அந்த மண்ணிலே வாழ்ந்த மக்களுக்காக அவர்களோடு நின்று குரல் கொடுத்தவர்.
ஆனால், ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாசிச பாஜக அரசு. அவர்கள் கார்ப்ரெட்களுக்காக ஆட்சி நடத்தக்கூடியவர்கள், மக்களுக்காக ஆட்சி நடத்தக்கூடியவர்கள் இல்லை. ஆகவே கார்ப்ரெட்க்கு எதிராக, அரசுக்கு எதிராக எந்த குரல் எழுப்பப்பட்டாலும், அந்த குரலை நசுக்கி எறிய வேண்டும் என்கிற எண்ணத்தை உடையவர்கள். அதே எண்ணத்தோடு காத்துக் கிடந்தார்கள்.

எந்த பீமா குரைக்கான் (பீமா –இடம், குரைக்கான் –நதி) வழக்கில் இணைக்கப்பட்டாரோ, நடந்த சதிக்கு பின்புலமாக இருந்தார் என்று சொல்லப்பட்டதோ அந்த ஊருக்கு நான் போனது கூட கிடையாது என்கிறார் ஸ்டேன் சுவாமி.
ஆனா இன்று இந்தியாவிலே ஒரு பெருமை மிகு வார்த்தை ’நக்சலைட்’ யார் ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்டாலும், அவர்கள் நக்சலைட் என்கிற முத்திரையை உடனே குத்திவிடுகின்றனர். அப்படியென்றால் ’மேடையில் உள்ள எல்லோரும், கீழே உள்ளவர்களும் ஏன் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் அனைவரும் நக்சலைட் தான்.’ அதனை பெருமையாக தான் எடுத்துக்கணும்.
யார் கேள்வி எழுப்பினாலும், அவர்களுக்கான கேள்வி இல்லை. இந்த தேசத்திற்கான கேள்வி, தேசத்தின் பாதுக்காப்பிற்கான கேள்வி என்ற கட்டமைப்பை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட ஒன்று தான்..பீமா குரைகானில் சமூக செயல்பாட்டாளராக இருந்த அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டிலேயே 84 வயதில் ஒரு நக்சலைட் இருந்தாறென்றால் அது ஸ்டான் சுவாமி தான். அந்த பெருமையும் அவருக்கு உரித்தானது தான். அப்படிப்பட்ட மனிதர் மகாராஸ்டிரா சிறையில் இருக்கும்போது கைகளில் எடுத்து உணவு சாப்பிடமுடியாத நிலையில், வெளியில் இருக்கும் தன் நண்பர்கள் மூலம் தனக்கு தண்ணீர் அருந்த ஸ்டா கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
ஆனால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. காரணம், மேலே இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஒரு 84 வயதை தாண்டிய மனிதன். பார்க்கிசன் எனும் நோயால் பாதிக்கப்பட்டு கைநடுக்கத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் குடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மனிதரை துன்புருத்தல் செய்துள்ளது என்றால் எப்படிப்பட்ட ஒரு கொடுமையான நிலையிலே நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இன்னமும் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் மட்டுமே வெளியே வந்துள்ளனர். இப்படி யார் ஒன்றிய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினாலும், அவர்களுக்கு எதிரான வழக்குகள் அவர்களை தேச விரோதிகள் என்று சொல்லி வாயடைக்கக்கூடிய, இல்லையென்றால் கொலை செய்யக்கூடிய நிலை நாட்டிலே நிழவிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட இந்த நிலையில் தான் மத ரீதியான அரசியல் சாதியைக் கொண்டு வந்து ஒரு அரசியல், மக்களை எப்படியெல்லாம் பிரித்தாள முடியும். எப்படியெல்லாம் மக்களை அச்சுருத்தி ஒரு அரசியலை நிகழ்த்திக்காட்டிட முடியும் என்று சட்டங்களாக இருக்கட்டும், மக்களுக்கெதிரான திட்டங்களாக இருக்கட்டும். அவங்க திட்டங்கள் கொண்டுட்டு வருவாங்க.. அந்த திட்டம் என்னன்ணு புரியுரதே பெரும்பாடு.. எந்த திட்டத்துக்கும் மாநில மொழிகளில் பெயர் வைக்க மாட்டாங்க. எந்த திட்டத்திற்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க மாட்டாங்க. நானே ஒரு கமிட்டியோட தலைவராவேரே இருக்கேன்.
அது என்னன்னு கேட்டு தெரிஞ்சு, புரிஞ்சு அந்த மீட்டிங்க நடத்துறத்க்கொள்ளேயே தலையே சுத்திடும் ஏன்னா என்ன மொழின்னு நமக்கே தெரியாது. அதுக்கான அர்த்தம் என்னன்னு தெரியாது. திடீருன்னு போசான்னுவாங்க… திரிசான்னுவாங்க என்னன்னு நமக்கு தெரியாது. இப்படி அவர்கள் கொண்டுவரக்கூடிய சட்டங்கள், சட்டத்திற்கெல்லாம் பெயர் மாற்றினார்கள். சமஸ்கிருதம், இந்தில. நான் வழக்கறிஞர்களிடம் கேட்டேன். என்ன மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள் சட்டத்தில் என்று எதும் புதுசா பில் கொண்டுவந்துள்ளார்களா… அதற்கு வழக்கறிஞர் அது என்ன பில்லுன்னு புரியட்டும் அதன்பின் உங்களுக்கு புரிய வைக்கிறேன் என்றார்.

இப்படி மொழி ஆதிக்கத்தால், தொடர்ந்து நம் உரிமைகளை பறிப்பது. அதே நேரத்திலே மாநில உரிமைகளில் தலையீட்டு ஒவ்வொரு மாநில மசோதாக்களிலும் மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய ஆட்சி. அந்த மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய அதே நேரத்திலேயே சாதாரண, சாமானிய மக்களின் உரிமைகளை மக்களுக்கான போராடக்கூடிய உரிமைகளை பறிக்கக்கூடிய ஆட்சிதான் மத்தியில் நடந்துக்கொண்டிருக்கிறது. நாம் உண்ணும் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஒரு கார்ப்ரெட் நிறுவனம் தான் முடிவு செய்யும் நிலையை, இந்த நாட்டிலே உருவாக்கி வைத்துள்ளனர். இதை எதிர்த்து தான் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். அந்த போராட்டத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
போராட்டத்தை வலுப்படுத்தி இங்கே சிலையாக இருக்கக்கூடிய ஸ்டேன் சுவாமியாக இருக்கட்டும் முதலமைச்சர் தொடர்ந்து கையிலே எடுக்கக்கூடிய போராட்டங்களாக இருக்கட்டும். இங்கே இருக்கக்கூடிய சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் அனைவரும் இன்னொரு விடுதலை போராட்டமாகத் தான் இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இது தேர்தலுக்கான மாற்றமாக இருக்கும் என்று சொல்லவில்லை. தேர்தலைத் தாண்டி தலைமுறைக்கான விடுதலையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதே புரிந்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் விட்டுச் செல்வது வீடோ, பணமோ இல்லை.. அவர்களுக்கான உரிமைகளையும், விடுதலையையும் விட்டுச்செல்ல வேண்டும். இதவிட உயர்ந்தது எதுவும் இல்லை. சுயமரியாதையை விட உயர்ந்தது இல்லை என்பதே புரிந்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டுட்டு போலாம். அடிமையாக இருந்தால் எந்த பிள்ளையும் அந்த வீட்டில் நிம்மதியாக வாழ முடியாது. உரிமைகள் இல்லாமல் யாரும் நிம்மதியாக சுயமரியாதையுடன் வாழ முடியாது.
நம்முடைய உரிமைகளுக்காக, நம்முடைய எதிர்க்கால தலைமுறையின் சுயமரியாதைக்காக நாம் பாடுபட வேண்டும்.. ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும்..ஒரு நியாயத்தை உருவாக்கிக்காட்ட வேண்டும். இந்த சமூகத்திலே சமூக நீதியை அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்களின் குரல்களை கேட்கக்கூடிய சட்டங்களை, இந்த மேடையில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர்களை பாதுக்காக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த கோரிக்கைகளை முதலைச்சரும் பார்த்திருப்பார்கள். அதே நேரத்தில் என்னால் முடிந்த, இங்கே அமர்ந்துள்ள அண்ணன் திருமாவளவனும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். தனிநபர் மசோதாவாக நிச்சயமாக நாடாளுமன்றத்திலே கொண்டுவருவதற்கு தயாராக இருக்கிறேன் என்கிற உறுதியை நான் உங்களுக்கு தருகிறேன். ஏனென்றால் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதுதான் திமுக-வின் அடிநாதமாக இருக்கிறது.. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் சொல்லக்கூடிய எல்லோருக்குமான ஆட்சி..!” என்றார்.
– ஜான்கென்னடி