இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !
நீதியரசர் சுவாமிநாதனுக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார் மனு சமூகவலைதளங்களில் வெளியான விவகாரம் தொடர்பாக, சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரான நிலையில் இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பகீர் கிளப்பியிருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் மீது புகார் மனு ஒன்றை வழங்கி இருந்த நிலையில், அவர் வழங்கிய புகார் மனு சமூக வலைதளங்களில் வெளியாகி இதைத் தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திருப்பரங்குன்றம் சாலை பகுதியில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து புகார் மனுவை பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , தன்னுடைய புகார் மனு குறித்த விபரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
உச்சநீதிமன்ற நீதிபதியிடம் மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது புகாருக்கு தற்போது வரை எஃப்.ஐ. ஆர் பதிவு செய்யவில்லை. உடனடியாக எஃப்.ஜ.ஆர். போடவேண்டும். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவு செய்து வரக்கூடிய நிலையில், தனது உயிருக்கு அச்சம் இருக்கிறது.
நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் போராட்டம் தனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விரைவில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளையும் சந்திக்க உள்ளேன். திமுக தனக்கு ஆதரவாக எந்த ஒரு அறிக்கையும் தற்போது வரை வெளியிடவில்லை. திமுகவினர் தனக்கு வீடு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரப்பி வருபவர்கள் அதை நிரூபித்தால் உரியவருக்கு அந்த வீட்டை கொடுக்க தயார். மேலும், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை குறித்தும் அம்பேத்கர் பெரியார் ஆகியோருடைய நூல்களை மேற்கோள்காட்டி தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.