தேர்தல் களம் 2026 : வேதாரண்யம் தொகுதி ! ஒரு அலசல் !
தமிழகத்தின் வரலாற்று பெருமை கொண்ட மாவட்டங்களுள் ஒன்று நாகப்பட்டினம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலிருந்து 1991 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் புதிய மாவட்டமாக தோற்றம் பெற்றது. நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் திமுக அதிகமுறை (6) வென்ற சட்டமன்ற தொகுதி என்ற பெருமை கொண்டது வேதாரண்யம். திமுக-வை தொடர்ந்து அதிமுக 4 முறை, காங்கிரசு 4 முறை தொகுதியை கைப்பற்றியிருக்கிறார்கள். தற்போது கூட்டணிக்கட்சியாக இடம்பெற்றுள்ள காங்கிரசு கட்சியை 8 முறையும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஒருமுறையும் நேருக்கு நேர் திமுக எதிர்கொண்டிருக்கிறது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளுள் ஒன்றாக வேதாரண்யம் தொகுதி திகழ்கிறது.
காந்தி வழியில் தமிழகத்தில் இராஜாஜி தலைமையில் வெள்ளையர்களுக்கு எதிராக உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கிய, தமிழகத்தின் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்ற பெருமையோடு, மீனவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை கொண்ட தொகுதியாக வேதாரண்யம் அமைந்திருக்கிறது.
வன்னியர், அகமுடையர், அம்பலக்காரர் மற்றும் இதர சமூகத்தினரை கொண்ட தொகுதி. அகமுடையர் சமூகத்தின் ஆதிக்கமே தொகுதியின் பலமாக இருக்கிறது. இதுவரை 10 பேர் இதே சமூகத்திலிருந்து வேட்பாளர்களாக வெற்றிப்பெற்றிருக்கிறார்கள். 3 முறை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.வேதரத்தினம் 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத்தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்ற நிலையில், 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ம.வு.க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
2016 இல் பாஜகவில் ஐக்கியமாகி, திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரசின் பி.வி.ராஜேந்திரனை கவிழ்த்து மீண்டும் அதிமுகவை வெற்றிபெற வைத்தார். தாய் கழகமான திமுகவுக்கு திரும்பியதும் மீண்டும் 2021 இல் இவருக்கே வாய்ப்பு வழங்கியது கட்சித்தலைமை. மக்கள் அதிருப்தி காரணமாக தோல்வியை தழுவினார். இவர் ஒருவரால்தான் தொடர்ந்து 3 முறை திமுக இத்தொகுதியை இழந்தது என்பதோடு, தொடர்ந்து 3 முறையும் அதிமுக வசமாகியிருக்கிறது வேதாரண்யம் தொகுதி.
சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொண்ட கதையாக, அதிமுக வசமாகிப்போன வேதாரண்யம் தொகுதியை எப்படி மீட்பது என்பதுதான் திமுகவுக்கு எதிரான பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.
தொடர்ந்து இரண்டுமுறை அடுத்தடுத்து வெற்றிபெற்று வலுவான இடத்தை தக்க வைத்திருக்கும் அதிமுகவின் ஓ.எஸ்.மணியன், மீண்டும் போட்டியிடும் ஆர்வத்தில் இருக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதே அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவரைத்தான் வேட்பாளரை நிறுத்தியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
தற்போது, மாவட்டத்தின் சீனியர் எஸ்.கே.வேதரத்தினத்துக்கு அடுத்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், வேதாரண்யம் நகர செயலாளர் மா.மீ.புகழேந்தி, நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாரிபாலன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.
திமுவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு, பாஜகவுக்கு சென்று திரும்பிய எஸ்.கே.வேதரத்தினம்; அதிமுகவுக்கு சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ்; திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த அதிமுகவின் ஓ.எஸ்.மணியனை வேஷ்டியை அவிழ்த்து சர்ச்சையில் சிக்கி அதிமுகவில் வெளியேற்றப்பட்டு திமுகவுக்கு வந்த பழனியப்பன் என ஆளுக்கொரு திசையில் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்களாம். இதுபோதாதென்று, நகர செயலாளர் மா.மீ. புகழேந்தி ஒரு அணியாகவும்; நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் ஏ கே எஸ் விஜயன் ஆதரவாளரான வழக்கறிஞர் மறைமலை ஒரு அணியாகவும்; வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சதாசிவம் ஒரு அணியாகவும்; நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் ஆதரவாளரான வேதாரண்யம் மேற்கு செயலாளர் உதயம் முருகையன் ஒரு அணியாகவும் செயல்படுகிறார்களாம். இந்த நவக்கிரகங்களை வைத்துக் கொண்டு, அதிமுகவிடமிருந்து தொகுதியை எப்படி மீட்பது என்பதுதான் கட்சித் தலைமையின் தலைவலியாக மாறியிருக்கிறதாம்.
கள நிலவரங்களையெல்லாம் தனி டீம் வைத்து சேகரித்த தலைமை, ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு சமீபத்தில் அறிவாலயத்தில் நடைபெற்ற வேதாரண்யம் தொகுதிக்கான பிரதிநிதிகள் சந்திப்பில், இந்த முறை எப்படியேனும் வேதாரண்யம் தொகுதியை வென்றெடுத்தாக வேண்டுமென்ற கட்டளையைப் பிறப்பித்திருக்கிறதாம் கட்சித் தலைமை.
அதிமுக தரப்பில் ஓ.எஸ்.மணியன் என்பது ஏறத்தாழ முடிவாக விட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமானின் தம்பியும் நாதகவின் நம்பிக்கைத் தூண்களில் ஒன்றாக திகழும் இடும்பாவனம் கார்த்தியை களமிறக்கியிருக்கிறது.
கடந்த கால அனுபவங்களிலிருந்தும், ஆளுக்கொரு பக்கமாக திருப்பிக்கொண்டு செல்லும் சீனியர் நிர்வாகிகளின் லோக்கல் பாலிடிக்ஸை கடந்து, தொகுதியை திமுக மீட்டெடுக்க இளைஞர் பட்டாளத்தைதான் கட்சித்தலைமை பெரிதும் நம்பியிருக்கிறதாம். திராவிடம் 2.0 செயல்திட்டத்தின் சோதனை முயற்சியாக, உதயநிதி ஸ்டாலின் வியூகத்தில் கனிசமான இளைஞர்களை களமிறக்கும் திட்டத்தில் வேதாரண்யம் தொகுதியும் இடம் பெற்றிருக்கிறதாம். அந்த வகையில், மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து கட்சித்தலைமையின் குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் கவனத்தை பெற்றிருக்கும் நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாரிபாலன் ரேஸில் முந்துகிறார் என்கிறார்கள்.
வேட்பாளர் யார் என்பதைக் காட்டிலும் கோஷ்டி பூசலை கடந்து ஜெயிப்பது எப்படி என்பதுதான் திமுகவின் பெரும் சவால் என்கிறார்கள் லோக்கல் பாலிடிக்ஸ் அறிந்தவர்கள். கடற்கரையோரம் அமைந்த சட்டமன்றத் தொகுதி என்பதால் என்னவோ, கடல் அலையைப்போலவே கட்சிக்குள் கோஷ்டி பூசலும் ஓயாது போல!
– அங்குசம் தேர்தல் செய்தியாளர் குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.