திமுக ஒரு தீய சக்தி… தவெக ஒரு தூய சக்தி… – விஜய் ஆவேசம்!
மஞ்சள் ! மஞ்சள் ! பொதுவாக நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பு, மஞ்சளை எடுத்து வைத்துதான் தொடங்குவார்கள். நம் வீடுகளில் கூட நம் தாய்மார்கள், சகோதரிகள் நமக்காக, நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் புடவை அணிந்துதான் வேண்டிக்கொள்வார்கள். மஞ்சள் என்றாலே ஒரு தனி அதிர்வுதான். நம் கொடியில் கூட அந்தத் துடிப்பான, ஆற்றல்மிக்க மஞ்சள் நிறம் உள்ளது. அந்த மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான், இந்த ஈரோடு பூமி.
இங்கு வந்து மஞ்சளைப் பற்றிப் பேசாமல் வேறு எங்கு சென்று பேசுவது? அதுமட்டுமல்லாமல், இங்கு ஒரு மகத்தான மனிதரைப் பற்றி நாம் பேசியே ஆக வேண்டும். இந்த ஈரோடு மண், விவசாயத்திற்கும் பெயர் பெற்ற மண். இங்கு நடைபெறும் விவசாயத்திற்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை, காலிங்கராயன் கால்வாய். காலிங்கராயன் அணை கட்டியதிலும், கால்வாய் வெட்டியதிலும் உயிரான, உணர்வுப்பூர்வமான பல விஷயங்கள் உள்ளன. அந்தப் பணியின்போது அவர் அணை கட்டும்போதும், கால்வாய் வெட்டும்போதும் மிகவும் சோர்வடைந்துவிட்டார். அப்போது அவரது தாயார் அதைப் பார்த்துவிட்டுச் சொன்னார், “மகனே காலிங்கா, தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரை இருக்கிறது, மோர் விற்ற காசு முகடு வரை இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போய் அணையை கட்டு, கால்வாயை வெட்டு” என்று கூறித் தைரியம் கொடுத்தார். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்தைத் தாண்டி வேறு எதுவுமே கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.
இப்போது நீங்கள்… என்னுடைய தாய்மார்கள், சகோதரிகள், நண்பா, நண்பிகள், தோழர்கள்… அனைவரும் எனக்கு அதே தைரியத்தைக் கொடுத்துள்ளீர்கள். அதே துணையாக என்னுடன் நிற்கிறீர்கள். இதைப் எப்படி பிரித்து விடலாம், இதை எப்படி கெடுக்கலாம், என்னவெல்லாம் அவதூறுகள் விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்னவெல்லாம் சூழ்ச்சிகள் விஜய் மீது செய்து மக்களை நம்ப வைக்கலாம் என சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் சில சூழ்ச்சிக்காரக் கூட்டங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. இது இன்று, நேற்று வந்த உறவு அல்ல. ஏறக்குறைய 30, 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் உறவு. நான் திரைத்துறைக்கு வந்த 10 வயதிலிருந்தே இந்த உறவு தொடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால் என்ன செய்தாலும், நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கும் இந்த விஜய்யை… இந்த விஜியை மக்கள் ஒரு நாளும் கைவிடமாட்டார்கள். மக்கள் கூடவே நிற்கிறார்கள், கூடவே நிற்பார்கள் என அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. என்ன நிற்பீர்கள் அல்லவா? உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். இந்த சத்தத்திற்காக வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்.
நம் காலிங்கராயன் அவர்கள் அணையைக் கட்டுவதற்காக பவானிக்குச் சென்று பார்க்கும்போது, ஒரு இடத்தில் பாம்பு வந்து படுத்த இடத்தில்தான் அவர் அணையைக் கட்டத் தொடங்கினார். பிறகு அந்தப் பாம்பு வளைந்து நெளிந்து செல்லும் இடங்களிலெல்லாம் கால்வாயை வெட்டினார் என சில வாய்மொழிக் கதைகள் எல்லாம் கூறுகிறார்கள். நீரைச் சேமித்து வைத்துக் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் வழிவகுப்பது எவ்வளவு பெரிய நல்ல விஷயம். ஆக, இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் செய்துவிட்டு கதைகள் கூறினால் பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டும் அள்ளி விடுகிறார்கள். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தினால் அந்த மூன்று மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏன் அதெல்லாம் செய்ய மறுக்கிறீர்கள்? வள்ளுவர் கோட்டத்திற்குக் காட்டும் அக்கறையை இங்கு மக்கள் வாழ்வாதாரத்திற்கும் கொஞ்சம் காண்பிக்கலாம். ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்? இங்கே அரசாங்கம் நடத்துகிறார்களா இல்லை கண்காட்சி நடத்துகிறார்களா? இந்த 21-ஆம் நூற்றாண்டிலேயே மக்களைப் பற்றி எதுவுமே யோசிப்பது இல்லை. ஆனால் அந்தக் காலத்திலே மக்களைப் பற்றி, குடிக்கும் நீரைப் பற்றி, விவசாயத்தைப் பற்றி, அணை கட்டுவதைப் பற்றி, கால்வாய் வெட்டுவதைப் பற்றி, பவானியில் இருந்து நொய்யலாறு வரை கால்வாய் வெட்டி இது எல்லாவற்றையும் பற்றி யோசித்த காலிங்கராயன் அவர்களுக்குக் கோடி நன்றிகள் கூறினாலும் போதாது.
அந்தக் காலத்தில் இருந்த ஒரு தலைவரைப் பற்றிப் பேசிவிட்டு, இந்தக் காலத்தில், அதாவது 19, 20-ஆம் நூற்றாண்டில் இருந்த தலைவரைப் பற்றியும் நாம் பேசி ஆக வேண்டும். ஒருவர் இளகிய மனம் கொண்டவர் என்றால், இன்னொருவர் இரும்பு மனிதர் போன்றவர். ஆம், நமது ஈரோடு கடப்பாரை தான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட சமூக சீர்திருத்த நெம்புகோல். ஈரோடு மாவட்டத்தில் பிறந்த அவர்தான், இந்தியாவிற்கே இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்காகப் போராட்டம் நடத்தியவர். அவர்தான் தந்தை பெரியார். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்டவர். அன்றும் சரி, இன்றும் சரி ஆச்சரியத்தோடு பார்க்கக்கூடிய மனிதர். நம்முடைய கொள்கைத் தலைவர். அப்படி என்றால் அண்ணாவும், எம்.ஜி.ஆரும் யார்? என கேட்கிறார்கள். பெரியார் அவர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். அவரைப் பின்பற்றிய, அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா அவர்களிடமிருந்தும், எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம்.
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கு குறை கூற முடியாது. அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர், நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் யாரும் இங்கு அழுது கொண்டிருக்க முடியாது என சொல்லிவிட்டேன். நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குத்தான் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லை அல்லவா, பிறகு ஏன் கதறுகிறீர்கள்? எங்கு சென்றாலும் ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்குப் பயம் இல்லை என சத்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு, நடுங்கிக்கொண்டே செல்லும் சிறு பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள். முதலில் தலையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள். ஊடக ஆட்கள், வானொலி ஆட்கள் என்று இவர்களுடைய ஆட்களையே மாற்றி மாற்றி அனுப்பி வைத்துக்கொண்டு, இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணம் தான் துணை. ஆனால் எனக்கு, என் மீது எல்லையில்லா பாசம் வைத்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் துணை. இப்படி நமக்குத் துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்திருக்கிறேன்.
இவ்வளவு செல்வாக்கு, இவ்வளவு பதவிகள், இவ்வளவு அதிகாரம் இருந்தும் நான் ஐந்து பைசா காசு சம்பாதித்து இருப்பேனா? எனக்கோ அல்லது என் குடும்பத்துக்கோ பட்டங்கள் வேண்டும், பதவி வேண்டும் என்று ஏதேனும் கேட்டிருப்பேனா? இல்லை ஏதேனும் இலாபம் பார்த்திருப்பேனா? இல்லை எதற்காவது ஆசைப்பட்டிருப்பேனா? என்று கூறிய பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு, அவரது கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள். அவர் பெயரைக் கூறிக்கொண்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள் . பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை.
அதனால் தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள், இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. எத்தனை, எத்தனை பொய்யான வாக்குறுதிகள். ஆட்சிக்கு வந்த உடனே நீட் தேர்வை ரத்து செய்வோம். கல்விக் கடனை ரத்து செய்வோம். கேஸ் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என பொய்யான வாக்குறுதிகளையே கொடுத்துள்ளார்கள். இவற்றையெல்லாம் சொன்னார்களே, செய்தார்களா? இவர்கள் எப்பொழுதுமே இப்படித்தான், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. திமுகவும் பிரச்சனைகளும் பசை போட்டு ஒட்டிய நண்பர்கள் மாதிரி, ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது.
ஈரோடு பகுதியில் உள்ள பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம். பெரியார் பெயரை மட்டும் கூறிக்கொண்டு, எப்படி அவரது கொள்கைகளுக்கு எதிராகவே செயல்படுகிறார்களோ, அதுபோலத்தான் இந்த மஞ்சள் நகரத்தின் மஞ்சளுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆராய்ச்சி மையம், சிறப்பு மையம் என்று கோடி கோடியாக ஒப்பந்தம் விட்டார்கள். பெயருக்குக் கட்டிடத்தைக் கட்டியுள்ளார்கள். ஆனால் உலகமே போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் மஞ்சளின் மதிப்பை உயர்த்தி நம் விவசாயிகளுக்கும், இந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்ய இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ஒரு பெரிய பூஜ்யம் தான். கரும்பு மற்றும் நெல்லுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் ஒழுங்காகச் செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. அங்கே, நெல் கொள்முதல் செய்வதில் ஊழல் நடக்கிறது. கஷ்டப்பட்டு விளைய வைத்த நெல் வீணாகப் போகக்கூடாது என்று நினைத்து கேட்கும் லஞ்சத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகு கூட அந்தக் கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. ஏதோ ஒரு விலை தான் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இப்படியெல்லாம் இல்லாமல், ஒழுங்காக, நேர்மையாக நம் மஞ்சளுக்கும் நியாயமான விலையை நிர்ணயித்து, தரமான விதைகளைக் கொடுத்தால் என்ன குறைந்து போய்விடுவார்கள்? இதெல்லாம் யோசிப்பதற்கு அவர்களுக்கு நேரமே இல்லை. விஜய்யை எப்படி முடக்கலாம்? தமிழக வெற்றிக் கழகத்தை எப்படி எல்லாம் முடக்கலாம்? என்பதும் 24 மணி நேரமும் அவர்களது சிந்தனையாக உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் காலிங்கராயர் நதிகளின் இணைப்பிற்கு முன்னோடியாக இருந்தார். பவானி ஆற்றில் வரும் அதிகமான நீரை, அணையின் மூலம் தேக்கி தண்ணீர் வறட்சியான பகுதிகளுக்கு அனுப்பினார். ஆனால் இன்று நவீன வசதிகள் இருந்தும், அறிவியல் வளர்ச்சிகள் இருந்தும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தும், அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன, பவானி, நொய்யலாறு, அமராவதி ஆறு இணைப்புத் திட்டத்திற்கு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. வாக்குறுதி எண் 103, சொன்னார்களே செய்தார்களா? சரி, இது ஒரு பெரிய திட்டம் என்று வைத்துக்கொண்டால்கூட, ஆறுகளை தூய்மைப்படுத்த பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்குவோம், தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளைச் சுத்தப்படுத்துவோம் என்று சொன்னார்களே, செய்தார்களா? ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாகச் செய்வார்கள். மக்கள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மற்ற மாவட்டங்களில் மணல் காணாமல் போனது போல, மலைகள் காணாமல் போனது போல, நம் மாவட்டத்தில் தனி வளத்தை கொடுக்கக்கூடிய செம்மண்ணும் காணாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நம் மண்ணுக்கும், நம் ஆற்றுக்கும், நம் விவசாயிக்கும் தான் இந்த மோசமான நிலைமை.
ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று பார்த்தால், அதற்கும் வழியில்லை. 30 சதவீதம் நெசவாளர்களுக்குக் கூலி கொடுக்கப்படாமல் இருக்கிறது. அரசு நம் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த வேட்டி, சேலைக்கான கூலியைக் கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. அது சலுகையோ, உதவியோ, நலத்திட்டமோ கிடையாது. நம் உழைப்புக்கான ஊதியம், நம்முடைய உரிமை. அதற்கே போராட வேண்டிய நிலையில்தான் இந்த அரசு நம்மை வைத்திருக்கிறது. ‘பீக் ஹவர்’ (Peak Hour) கட்டணம் என்று மின்சாரத்திற்கு அநியாய விலை வைத்து, சிறு, குறு தொழில்களையும் செய்ய விடாமல் நம்மை முடக்கிவிடுகிறார்கள். அந்த ‘பீக் ஹவர்’ கட்டணக் கொள்ளையால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மிக அதிகமான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிறோம், போராடுகிறோம், கோரிக்கை வைக்கிறோம். எதையுமே இவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்று கொஞ்சம் யோசியுங்கள். அப்போதுதான் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முடியும். அதற்கு ஒப்பந்தம் போட முடியும். அப்படி ஒப்பந்தம் விடப்பட்ட விஷயங்களில் எல்லாம் என்ன நடந்தது என்று மக்களுக்குத் தெரியும். ஈரோட்டில் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள் தான் இருக்கிறது.
அதையெல்லாம் தீர்ப்பதற்கு ஒரு தீர்வு கூட சொல்லாமல், பெருமையாக ‘மாடல் அரசு’ என்கிறார்கள். இவற்றை கேட்டால் விஜய் அரசியலே பேச மறுக்கிறார், விஜய் சினிமா வசனம் மாதிரி பேசுகிறார், விஜய் பஞ்ச் வசனம் பேசுகிறார், விஜய் பத்து நிமிடம் தான் பேசுகிறார், ஒன்பது நிமிடம் தான் பேசுகிறார் என நம்மிடமே திரும்பி வருகிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? நான் எப்படிப் பேசினால் உங்களுக்கு என்ன? பேசுவதில் இருக்கும் விஷயம் என்னவென்று பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பின்னர் அது அரசியல் இல்லாமல் வேறு எதுதான் அரசியல்? உங்களைப் போலத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, இழிவாகப் பேசுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியல் நமக்கு வராது. உங்களை விட எனக்கு அது நன்றாகவே வரும். வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
காஞ்சிபுரத்தில் பேசியபோது, உங்களால் அமைக்கப்படப் போகும் ஆட்சியில், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று சிலவற்றைக் கூறினோம். அதையெல்லாம் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான விளக்கத்தை இப்போது கூறுகிறேன். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை ‘இலவசம்’ என்று சொல்லி இழிவுப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் பணத்தில் மக்களுக்குச் செய்வதை எப்படி இலவசம் என்று சொல்வீர்கள்? அப்படியே செய்துவிட்டாலும், ஓசியில் போற என்று சொல்லி இழிவுப்படுத்துகிறீர்கள். இவற்றையெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைத்தீர்களா? மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் வந்து நிற்பான். இந்த விஜய் கேள்வி கேட்பான். இந்த விஜய் எப்பொழுதுமே மக்கள் பக்கம் தான். அதே போல் மக்களும் என் பக்கம் தான்.
என் மக்கள் மானத்தோடு, மரியாதையோடு, கௌரவத்தோடு வாழ வேண்டும். என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது. அப்படி அவர்கள் கௌரவத்தோடு வாழ வேண்டும் என்றால், அவர்களுக்கான வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றால் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர வேண்டும். வாழ்வாதாரம் உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் உயர்ந்தால் தான் வசதி வாய்ப்புகள் உயரும். இதெல்லாம் உயர்ந்தாலே தானாகவே அவர்களுடைய வாழ்க்கைத் தரம், அவர்களுடைய மரியாதை, அவர்களுக்கான கௌரவம் எல்லாமே உயரும். இதற்கான வழிகளையும் சூழல்களையும் அந்த அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் தான் அந்த அரசு ஒரு நல்ல அரசு.
இவற்றைத்தான் அன்று சொன்னோம். சொன்னால் மட்டும் போதுமா எப்படி செயல்படுத்துவிங்க என்று உடனடியாக கேள்வி வருகிறது. வாய் வார்த்தையாக மட்டும் சொல்வதற்கு நாங்கள் என்ன திமுகவா… தவெக..
எல்லாருக்கும் நிரந்தரமான ஒரு வீடு இருக்க வேண்டும் என்று கூறினோம். ‘எங்கள் ஆட்சியிலேயே நாங்கள் எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டோமே’ என்கிறார்கள். வாடகைக்கு இருப்பவர்களே இங்கு யாரும் இல்லையா? எல்லோருக்கும் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துவிட்டார்களா? அடுத்து, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என கூறினோம். அதற்கும் உடனே ‘எங்கள் ஆட்சியிலேயே எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டார்களே’ எனச் சொல்கிறார்கள். அது உண்மை என்றால் பள்ளி அளவிலேயே இடைநிற்றல் (dropouts) அதிகமானது யாருடைய ஆட்சியில்? மாணவர்கள், பிள்ளைகள் யாரும் பள்ளியில் சேரவில்லை என்று கூறி, 207 அரசுப் பள்ளிகளை மூடியது யாருடைய ஆட்சியில்?.
இதில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று நாடகம் வேறு. அடுத்து, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான வருமானம் வர வேண்டும். வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று கூறினால், ‘நாங்கள் கொடுக்காத வருமானமா, நாங்கள் கொடுக்காத வேலையா’ என்கிறார்கள். பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தீர்களே, எத்தனை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பினீர்கள்? குறைந்தபட்சம் ஒரு லட்சம் காலிப் பணியிடங்களையாவது நிரப்பினீர்களா? இதெல்லாம் கூறிவிட்டு மக்களை ஏமாற்றுவது யாருடைய ஆட்சியில்? அடுத்து மிக முக்கியமாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தான் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது? அவர்கள் சொல்வது உண்மையா? அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? மக்கள் நீங்களே சொல்லுங்கள். நமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் சமரசமே இருக்காது. அதனால்தான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறோம், தைரியமாக இருங்கள் மக்களே.
என்னென்ன செய்யப் போகிறோம் என்று காஞ்சிபுரத்தில் சொன்னது போலச் சொன்னால், எல்லாவற்றையும் தவறாகத் திரித்துப் பேசிக்கொண்டும், அவதூறு பரப்பிக்கொண்டும் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களும், மேடம் ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையைக் கூறி திமுகவை காலி செய்தார்கள் அல்லவா. ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள், திட்டுகிறார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டு. இப்போதுதானே புரிகிறது, அவர்கள் இரண்டு பேரும் கூறியதை இப்போது நானும் திரும்பச் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி. என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் இந்தச் சத்தத்தை ஒரு நாளும் உங்களால் முடக்க முடியாது. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும்.
அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் நம்முடன் இணைந்தது நமக்கு ஒரு மிகப்பெரிய பலம். செங்கோட்டையன் அண்ணன் அவர்கள் மாதிரி இன்னும் நிறைய பேர் நம்முடன் இணைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே உரிய அங்கீகாரத்தைக் கொடுப்போம். இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். சமீபத்தில் ஒரு இடத்தில் நம் முதலமைச்சர் அவர்கள், ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்குறேன்’ என பேசினார். நான் ஏதாவது பேசினால் சினிமா வசனம், அவர் பேசினால் அது சினிமா வசனம் இல்லை. அந்த வரி வ்சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டடது . உங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது? அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். சட்டம் ஒழுங்கில் நாடே சீரழிந்து இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்கிறது. பொய் வாக்குறுதிகளாகக் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தீர்களே என எதில் உங்களது குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒன்று, தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் நீங்களும் சரி, ஒன்றியத்தில் ஆட்சி செய்பவர்களும் சரி, நீங்கள் இரண்டு பேரும் முதலில் என்னுடைய குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் மக்களுடைய குணாதிசயத்தை தான் என்னுடைய குணாதிசயம் என கூறினேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த குணாதிசயமே வேறு மாதிரி இருக்கப்போகிறது. அதனை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்றால், மக்களே உங்களுக்குப் புரிய வைப்பார்கள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம். நண்ப, நண்பிகள் எல்லாம் நல்லபடியாக நடந்தது. பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்று விடுங்கள். எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள் தான் எனக்கு முக்கியம். தயவுசெய்து பாதுகாப்பாகச் சென்று வாருங்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.