மற்றதை எல்லாம் ஊதிப் பெருக்கும் ஊடகங்கள்…..
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் 40 பேர் இறந்தமைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம்(பியூசிஎல்) ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது!
கூட்ட நெரிசல் சாவுகள் பெரும்பாலும் மகா கும்ப மேளாக்கள், கோயில் திருவிழாக்களிலேயே நடந்துள்ளன. அரசியல் கட்சி மாநாடுகளில் இதுபோன்று இதுவரை நடந்ததில்லை. 29-01-2025 -ல் பிரயாக்ராஜ் (அலகபாத்) சங்கமத்தில் கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தார்கள். அதேபோல் 14-01- 2011-ல் சபரிமலை பக்தர்கள் புல்மேடு கூட்ட நெரிசலில் 104 பேர் இறந்தார்கள். கடந்த 04-06-2025-ல் ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெங்களூரு சின்னச்சாமி விளையாட்டு மைதானத்தில் 11 பேர் இறந்து போனார்கள்.
சரியான திட்டமிடல், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தொண்டர் படை, ஒலிபெருக்கி வாயிலாக சூழலுக்கு ஏற்ப அறிவிப்புகள் ஆகியன இல்லாமை நன்கு வெளிப்பட்டுள்ளன. பெருங்கூட்டங்கள் நடத்தி அனுபவம் பெற்ற அரசியல் தலைவர்களா தவெக-வில் இருப்பதாக தெரியவில்லை. தனிநபர் வழிபாடு, கிளர்ச்சி மற்றும் பரவச மனப்பாங்கு முதலியன பகுத்தறிவையும் தன்மானத்தையும் பின்னுக்கு தள்ளி விடுகின்றன. “நம் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் நிறைவு செய்யும் மேய்ப்பராக இவர் இருப்பார்” எனும் வழிபாட்டுத் தன்மை- அதுவும் முண்டியடித்து மூச்சு மூட்டும் அளவுக்கு அண்டை மாநிலமான கேரளத்தில் இல்லை. காத்திருந்த கூட்டத்துக்கு குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் கட்சியினரால் செய்யப்படவில்லை.
பீதியில் தத்தமது உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒரு சேர அனைவர் மனதில் எழுவதே கூட்ட நெரிசலுக்கு முதன்மைக் காரணம். பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்றுள்ள தீயணைப்பு படை முன் கருதலோடு நிறுத்தப்படாமையும் ஒரு காரணமே. விஜயின் வாகனத்தை பாதுகாத்து வழி செய்து கொடுத்த காவல்துறை கூடியிருந்த மக்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
விஜய் காலையிலேயே (27-09-2025) வருவார் என்று சொல்லி இரவு 7 மணி வரை கூட்டம் காத்திருந்திருக்கிறது அதனால் கூட்டத்தின் மனநிலை கடும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. “நம்மை விட உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை” என்கிற மனநிலையும்- அடிப்படை பண்புகளும்- அறிவியல் மனப்பாங்கும் வளர்தெடுக்தக்கப்பட வேண்டும். இப் பொறுப்பு தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், குறிப்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் உண்டு. மற்றதை எல்லாம் ஊதிப் பெருக்கும் ஊடகங்கள் விஜயின் சரியான வருகை நேரத்தை உறுதி செய்து செய்திகளைத் தராமையும் நெரிசலுக்கு ஒரு காரணம்.
இறந்தவர்களில் பெரும்பான்மையோர் ஏழை- நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்களே.
தவெக நிர்வாகிகள் மீது மட்டும் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. அய்தராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 04-12-2024-ல் புஷ்பா 2 பட சிறப்பு திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்து போனார். அவருடைய மகனும் படுகாயமுற்றார். இந் நிகழ்வுக்காக படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 105 மற்றும் 118- ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சதி திட்டம் இருப்பதாக தவெக-வும் வழக்கு தொடர்ந்து உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மருத்துவமனைக்கு உடனே சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஆறுதல் சொல்லி உள்ளார். இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் துயர்துடைப்பு நிதியாக தலைக்கு ரூ10 இலட்சம் அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு அறிவிக்கப் பட்டுள்ளது. அருணா ஜெகதீசனின் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை குழு அறிக்கையில் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த ஒரு குற்ற நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இந்த அறிக்கைக்கும் அதே நிலை வந்து விடக்கூடாது என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாடு காவல் துறை பேரிடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இரா. முரளி, தலைவர்., து. சேகர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர், தமிழ்நாடு & புதுச்சேரி மக்கள் சிவில உரிமைக் கழகம் சார்பாக வேண்டுகிறது!








Comments are closed, but trackbacks and pingbacks are open.