விஜய் நலத் திட்ட அறிவிப்பும் – தற்போதைய தமிழக நிலையும் !
1.எல்லோருக்கும் நிரந்தர வீடு.
(தமிழகத்தில் தொகுப்பு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் முலமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. 1970 இல் வந்த குடிசை மாற்று வாரியம் குறிப்பிடத் தகுந்த திட்டமாகும். 2025-2026 ஆண்டுகளில் மட்டும் கலைஞர் கனவு வீடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட 3,500 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது)
2.வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள்.
(வீட்டிற்கு ஒன்றல்ல ஒரு நபருக்கு ஒரு மோட்டார் வாகனமுள்ள நிலையில்தான் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. மொத்த வாகன எண்ணிக்கையில் இரு சக்கர வாகனத்தின் விழுக்காடு மட்டும் 85%)
3.ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு.
(தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து காற்று மாசுபாட்டைத் தடுக்க, பொது வாகனங்களைப் பயன்படுத்தப் பல நாடுகளும் வலியுறுத்தும் சூழலில், தமிழர்கள் அதிகமாகக் கார்களை ஏற்கனவே தங்கள் சொந்த உழைப்பால் பெற்றுள்ளனர். கேரளாவும் தமிழ்நாடும்தான் இந்தியாவிலேயே அதிகமாகக் கார்களைப் பயன்படுத்தும் மாநிலங்கள்)
4.ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு.
(உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, தமிழ்வழிக் கல்வியில் முன்னுரிமை என்று பல திட்டங்கள் உள்ளன. அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய், மடிக்கணினி, கட்டணமில்லாப் பேருந்து வசதி என்று என்றைக்கோ இந்தத் திட்டத்தை அரசு சாத்தியப்படுத்தி விட்டது. முனைவர் ஆய்வுப் படிப்புகளிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம்)
5.வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம்.
(வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் இன்று வேலைகளுக்குச் செல்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள். இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.கர்நாடகாவும் தமிழ்நாடும்தான் தனிநபர் வருமானத்தில் முன்னிலையில் உள்ள மாநிலங்கள்)
6.அதற்கான வேலைவாய்ப்பு.
(மத்திய அரசின் வேலைவாய்ப்புகளையும் போட்டித் தேர்வுகள் மூலமாக எதிர்கொள்ளத் தமிழக அரசு பல பயிற்சி மையங்களை அமைத்து இதையும் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தாண்டு அகில இந்திய அளவில் குடிமைப் பணி தேர்வுக்குத் தமிழர்கள் அதிகமாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு)
7.அதற்குத் தகுந்தபடி கல்வியில் சீர்திருத்தம்.
(இந்தியாவுக்கு வழிகாட்டும் அளவில் உலகத்தரம் வாய்ந்த கல்வித்திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.)
8.அரசு மருத்துவமனையை நம்பி செல்லும் வகையில் வசதி.
(மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளும் சிறு சிறு கிராமங்களில் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களும் அதிகம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அரசு மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்படும் மாநிலமும் தமிழ்நாடுதான்)
9.பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாடு.
(எத்தனை பருவங்கள் உள்ளன? காலநிலை, வானிலை குறித்தெல்லாம் விஜய் முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம் என்பதால் பருவமழை பாதிப்புகள் அதிகம்)
10.மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டுப் பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
(அரசு ஊழியர்கள் வேறு, ஆசிரியர்கள் வேறா? வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்கத் தமிழக அரசு பல திட்டக் குழுக்களைக் கொண்டுள்ளது.)
11.தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும்.
(யாரும் தொழில் வளர்சியை மறக்கவில்லை. சில ஆய்வுகளின்படி, தமிழ்நாடு, தொழில் செய்வதற்கு உகந்த சூழலைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.)
12.சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன் இருக்கும்.
(கட்சி ஒழுங்கு சரியில்லாத விஜய் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படத் தேவையில்லை)
– பாரத் தமிழ்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.