உள்ளுரில் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் முன்னாள் அமைச்சர் !
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு, ஆலோசனை, உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி பிரச்சனை என்று அதிமுக செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவர் கூலாக அரசியல் செய்து வருகிறார்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகியாகவும் கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோதே மாநிலம் முழுவதும் பணியை முன் எடுத்தாலும் உள்ளூர் அரசியலை தனி கவனத்தோடு கையாண்டு வந்தார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போதெல்லாம் எமோஷனலாக பேசியும், மக்களுக்கு பொங்கல் சீர், ஊரடங்கு நிவாரணம் என்று வழங்கி உள்ளூரில் தனது செல்வாக்கை குறையாமல் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சர் பதவியை இழந்தாலும், எம்எல்ஏவாக வெற்றி பெற்று தற்போது மாவட்ட அரசியலில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று ஆகஸ்ட் 13 காலை சி.விஜயபாஸ்கர் தனது இலுப்பூர் இல்லத்தில் இருந்து சைக்கிள் பயணம் செய்தார்.
மேலும் செல்லும் வழியில் பார்க்கும் மக்களுக்கெல்லாம் வணக்கம் வைத்துக் கொண்டும். சில இடங்களில் சைக்கிளை நிறுத்தி மக்களுடன் பேசிக்கொண்டும் சென்றார். அப்போது மருத்துவ சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த தாய், மகனை பார்த்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். இப்படி லோக்கல் பாலிடிக்ஸில் தன்னை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், வளர்த்துக் கொள்வதற்காகவும் தொடர் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் விஜயபாஸ்கர் என்று புதுக்கோட்டை மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் பலரே வீட்டை விட்டு வெளியே வருவது கிடையாது.