இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (28), கார்த்திக் (19) ஆகியோர் பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். கடுமையாக காயமடைந்த கார்த்திக் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார்த்திக்கின் உடல் கொட்டமடக்கிபட்டிக்கு கொண்டுவரப்பட்டபோது, மணிகண்டன் மற்றும் கார்த்திக் உறவினர்கள் இருவரின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, செவல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், கார்த்திக் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து விபத்து போல கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த சாலை மறியல் காரணமாக செவல்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி செல்லும் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்டது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.