மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை தண்டனை !
சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே மணல் திருட்டு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வெம்பக்கோட்டை அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் வயது (35). இவர் அதே பகுதியில் உள்ள வைப்பாற்றில் இரவு நேரத்தில் டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை போலீசார் இவரை கைது செய்தனர்.
இதில் டிராக்டர் மணலுடன் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற விசாரணையில் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜன் இந்த வழக்கில் மணல் திருட்டில் ஈடுபட்ட முத்துராஜுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ராக்டர் மற்றும் ட்ரைலரை கைப்பற்றி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து உரிய சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
— மாரீஸ்வரன்