வக்ஃபு விவகாரம் : முத்தவல்லிகளுக்கு வக்ஃபு வாரிய தலைவர் விடுத்த வேண்டுகோள் !
திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யும் முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதிலுமுள்ள வக்ஃபு சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில், சில கிரிமினல் கும்பல்கள் இயங்கி வருவதை இந்த படுகொலை சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் எம்.பி.யுமான நவாஸ்கனி வக்ஃபு முத்தவல்லிகளுக்கு சில விசயங்களை சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த கடிதத்தில், ”மதிப்புமிக்க முத்தவல்லிகளுக்கு வக்பு வாரிய தலைவரின் பொறுப்பு மிக்க கடிதம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கீழ் இயங்கும் வக்ஃபு நிறுவனங்களின் பேரன்புமிக்க முத்தவல்லிகளே. வல்ல இறைவனின் சொத்துக்களை பாதுகாக்கும் அமானிதமான பொறுப்பில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த பொறுப்பை உணர்ந்தவர்களாக நாம் இந்த பொறுப்பில் இருக்கும் காலத்தில், எந்த நோக்கத்திற்காக நம்முடைய முன்னோர்கள் இந்த சொத்துக்களை வக்ஃபு செய்தார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம், இந்த சமுதாய நலனுக்காக, இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக நம்மாளான முயற்சிகளை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் காலியாக, பயன்படுத்தப்படாமல் உள்ள வக்ஃபு சொத்துக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கத்திலும், அத்தகைய சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாக்கும் நோக்கத்திலும் அதனை சமூக நலனுக்காக பயன்படுத்த நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
உங்களுடைய வஃக்புக்கு சொந்தமான காலியாக பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சமூக மக்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்ஃபு வாரியம் அனைத்து அனுமதிகளையும் சட்ட விதிகளுக்குட்பட்டு வழங்க தயாராக இருக்கிறது.
உங்களுடைய பகுதிகளில் எந்தெந்த இடங்களில் எத்தகைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற விபரங்களையும், உங்களுடைய ஆலோசனைகளையும் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் வரவேற்கிறது.
காலியான இடமிருந்து அதில் வளர்ச்சிப் பணி மேற்கொள்ள பொருளாதார வசதி இல்லாத வக்ஃபுகள் Joint Development கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சமுதாய அக்கறைமிக்க புரவலர்களோடு இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு வக்ஃபு வாரியம் உங்களுக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, குத்தகை விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க தயாராக உள்ளது.
அதன் மூலம் அந்தந்த வக்ஃபுகளுக்கு கிடைக்கும் வாடகை வருவாய் சமுதாயம் முன்னேற்றத்திற்காக, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக உங்களால் பயன்படுத்த முடியும்.
இன்று சமுதாயத்திற்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றது. நம்மிடம் இருக்கும் வக்ஃபு சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தி அத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் நானும், வக்ஃபு வாரிய உறுப்பினர்களும் ஒரே கருத்தோடு தயாராக இருக்கின்றோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள வக்ஃபு நிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள், உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு சமுதாய மக்கள் சிறப்பான பலனடைய விரைவான முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பயன்படுத்தப்படாமல் உள்ள நம்முடைய வக்ஃபு சொத்துக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் அவை ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
காலம் காலமாக பின்தங்கி இருக்கும் சமூக மக்களை முன்னேற்ற படுத்த வேண்டும் என்பதை வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், அதற்கான செயல்களில் இறங்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். வல்ல இறைவனின் துணையோடு அமானிதமான இந்த பொறுப்பில் அனைவரும் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.