1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பிரம்மாண்டமான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்து!
மதுரை சித்திரை திருவிழாவில் 10 ஆம் நாள் நிகழ்வாக மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது, இத்திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்காக பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் 27 ஆவது ஆண்டாக திருக்கல்யாண விருந்து வழங்கி வருகின்றனர்.
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்து தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது, இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து மாலை 5 முதல் இரவு 10 மணி வரைக்கும், நாளை திருக்கல்யாண விருந்து காலை 7 முதல் மாலை 4 மணி வரைக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உணவுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வடை, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், தக்காளி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் வழங்கப்பட உள்ளது. காய்கறிகள் பரவை, மாட்டுத்தாவணி மார்க்கெட்களில் இருந்தும், அரிசியை டிரஸ்ட் உறுப்பினர்கள், பக்தர்களும் கொடுக்கின்றனர்.
கீழமாசி வீதி வியாபாரிகள், மளிகைப் பொருட்கள், எண்ணெய் கொடுக்கின்றனர். மேலும், பொதுமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை வழங்கி வருகிறார்கள்.
இன்றும், நாளையும் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு திருக்கல்யாண விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, 7,000 கிலோ அரிசி, 12,000 கிலோ காய்கறிகள் மற்றும் 5,000 கிலோ மளிகை பொருட்களைக் கொண்டு திருக்கல்யாண விருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
400 க்கும் ஏற்பட்ட சமையல் கலைஞர்கள் திருக்கல்யாண விருந்து தயாரித்து வருகிறார்கள், 3,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே முன்வந்து காய்கறிகளை வெட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.