கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12) –
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் உறவுகள், மனிதர்கள், சூழல்கள் வேறுபட்டவையாக இருந்தாலும், ஒரு உண்மை மட்டும் எல்லோரிடமும் ஒரே மாதிரி இருக்கும்.
சிலர் புரிந்து கொள்வதற்காக வாழ்கிறார்கள்; சிலர் புரிந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்; ஆனால் சிலர் புரிந்துகொள்ள முயற்சிக்கவே மாட்டார்கள்.
இதில் நான் சொல்ல வருவது மூன்றாவதாக சொல்ல பட்ட மனிதர்களை பற்றி….
அப்படிப்பட்டவர்களைப் பற்றி பேசும்போது, எளிமையான ஒரு பழைய கதை நமக்கு நினைவுக்கு வரும்.
கதை: கிணற்று தவளைகள்
ஒரு சிறிய கிணற்றில் சில தவளைகள் வாழ்ந்தன. அந்த கிணறு தான் உலகம் என்று நம்பி, அதற்கப்புறம் எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தன. ஒருநாள் வெளியிலிருந்து வந்த மற்றொரு தவளை, வெளியுலகம் எவ்வளவு பெரியது, பரந்த நதிகள், மலைகள், கடல்கள் எல்லாம் இருப்பதாகச் சொன்னது.
ஆனால் கிணற்றில் இருந்த தவளைகள் அதைப் நம்பவில்லை. ஒரு தவளை மூயற்சித்து வெளியே போய் உண்மையைப் பார்த்தது மற்ற தவளைகள் பயத்தால் கிணற்றில் இருந்தபடியே “நான் அறிந்ததுதான் உலகம்” என்று நம்பிக் கொண்டிருந்தது.
இந்தக் கதை நம்மைச் சேர்வது எப்படி?
நம்மில் பலர் குறிப்பாக கூட்டு குடும்பத்தில் வாழ வருகிற பெண்கள் இந்த நிலையை நேரடியாக அனுபவிக்கிறார்கள்.
ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.
ஆனால் அங்கே சிலர் இருப்பார்கள். கிணற்றுத் தவளைகள் போல.
அவர்களின் பார்வை:
“நாம் நினைப்பதே சரி” ,
“நாம் விரும்புவது மட்டுமே நடக்க வேண்டும்”
“புதியவரின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை”
ஏன் தவளைகளாவது பயத்தில் வெளியே வரவில்லை… ஆனால் நான் கூறும் அந்த மனிதர்கள் பயத்தால் அல்ல வெளியே வர விரும்பாமல் குறுகிய உள்ளம் கொண்டவர்கள்…. உண்மை பேசினாலும், அவர்கள் ஏற்க மாட்டார்கள்.
குற்றம் இருந்தாலும் கூட, அதை அவள் மீது சுமத்தி விடுவார்கள்.

அந்த பெண்ணின் உள்ளத்தில் என்ன நடக்கிறது?
முதல் சில நாட்களில்: மனச்சோர்வு, தனிமை உணர்வு, “நான் தவறானவளா?” என்ற கேள்வி, பேசுவதற்கே பயம், உள் அழுகை…
ஆனால் காலம் கற்றுக்கொடுக்கும். ஒருநாள் அவள் உணர்கிறாள்: அவர்கள் கிணற்றுக்குள் வாழ்கிறார்கள். நான் வெளியுலகைப் பார்க்கும் திறன் கொண்டவள். அப்போது அவள் விளக்க முயல்வதை நிறுத்துகிறாள், அவர்களின் வார்த்தைகள் மனத்தில் பாதிக்க அனுமதிப்பதில்லை.
தன்னுடைய மதிப்பை மீண்டும் கைக்கொள்கிறாள். அமைதியாக சிரிக்கத் தொடங்குகிறாள். அந்த அமைதி தோல்வியின் அடையாளமில்லை அது வெற்றியின் உயர்ந்த வடிவம்.
ஆனால் கிணற்றுத் தவளைகள் நினைப்பது என்ன? “அவளை நாங்கள் காயப்படுத்திவிட்டோம். அவள் மௌனமாக இருப்பது அதற்காகத்தான்” என்று நினைப்பார்கள்.
ஆனால் உண்மை? அவள் காயப்படவில்லை. அவள் வளர்ந்துவிட்டாள். அவள் கிணற்றைக் கடந்து வெளிச்சத்தை அடைந்துவிட்டாள்.
இந்தக் கட்டுரை யாருக்கு???
குடும்பத்தில், உறவுகளில், பணியில், மௌனமாக துன்பத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு.
உங்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்று: உங்கள் உண்மை, உங்கள் உள்ளத்தில் தெளிவாக இருக்கிறது என்றால், அதை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை.
உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களுக்காக உங்கள் மனதை உடைக்காதீர்கள். அவர்கள் கிணற்றில் இருந்தால் அவர்களை அங்கேயே இருக்க விடுங்கள். நீங்கள் உங்கள் மன அமைதியை காப்பாற்றுங்கள். உங்கள் மதிப்பை புரிந்துகொள்ளுங்கள், உங்கள் சிரிப்பை இழக்காதீர்கள்.
முடிவில்கிணற்றுத் தவளைகள் உலகத்தை அவர்களின் அளவுக்குள் பார்த்து வாழ்கிறார்கள்.
நீங்கள் அந்தக் கிணற்றைத் தாண்டி, வெளியுலகை பார்க்கும் திறன் கொண்டவர்.
அது உங்கள் வலிமை.
அது உங்கள் உயர்வு.
அதை யாராலும் குறைக்க முடியாது.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.