181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?
ஆளும் திமுக அரசின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் 181 நாட்களே உள்ள நிலையில், ஆட்சிக்கு வரும் முன்னரே கொடுத்த 181வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது? என்ற கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் கையில் ஆட்சி இன்னும் 181 நாட்கள் தான் இருக்கிறது.

இந்த நிலையில் திமுகவின் 181வது வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பணிபுரியும் 12ஆயிரம் பேர் போர்க்குரல் எழுப்பி வருகின்றார்கள்.
நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி இந்த நான்கு மாதங்களில் மட்டுமே ஆட்சி அதிகாரம் முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும். அதற்கு பிறகு மார்ச் ஏப்ரல் மாதங்கள் தேர்தல் காலம் என்பதால் அது தேர்தல் கமிஷன் கையில் அதிகாரம் போய்விடும்.
இதை எல்லாம் நினைத்து பார்த்து பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்காலம் என்னாவது என அச்சத்தில் இருக்கின்றார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இன்னும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தலில் கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றார். முதல்வர் இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதால் போராட்டங்கள் நடக்கிறது.
தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.
அரசு வேலை, அரசு பள்ளியில் வேலை. ஆனால் மே மாதம் ஒருபோதும் சம்பளம் கிடையாது. போனஸ்கூட கிடையாது. ஒரு சலுகைகூட இதுவரை இல்லை. இப்படி ஒரு வேலையை 14 ஆண்டுகளாக செய்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தனியாகவும், திமுக ஆட்சியில் வழங்கிய 2,500 ரூபாய் சம்பள உயர்வு தனியாகவும் என இரண்டு பரிவர்த்தனையில் பட்டுவாடா செய்வதை மாற்றி அதை மொத்தமாக ஒரே தொகையாக 12,500 ரூபாயாக கேட்கிறோம். அதைகூட செய்ய மனமில்லை.
மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு மூன்று ஆண்டாக செயல்படுத்தவில்லை.
இது போன்ற ஒவ்வொரு கோரிக்கையாக கேட்டாலும் அதைகூட திமுக அரசு இதுவரை செய்ய முன்வர வில்லை. இப்படியே 54 மாதங்கள் ஆட்சி முடிந்துவிட்டது.
ஆனாலும் சாக்கு போக்கு சொல்லி முதல்வர் கைவிட மாட்டார், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என பலமுறை செய்தியில் தான் வருகிறது. அதை செயல்படுத்தவில்லை என்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
திமுக எதிர்கட்சியாக வைத்த கோரிக்கை இப்போது ஆளும் கட்சியாகியும் செய்யவில்லை என்பதை எல்லா கட்சிகளும் சட்டசபையிலும், மக்கள் சபையிலும் வலியுறுத்திவிட்டது.
திமுக வைத்த கோரிக்கை, திமுக 2016 மற்றும் 2021 என இரண்டு முறை தேர்தலில் கொடுத்த வாக்குறுதி இதைகூட இன்னும் செய்யாமல் இருப்பது முதல்வருக்கு தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என பொதுமக்கள் பேசும் அளவுக்கு வந்துவிட்டது.
12 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை மீட்கும் பொருட்டு திமுக அரசு முன்னேற்றத்திற்கான வழியை துரிதமாக செய்ய வேண்டும்.
181வது வாக்குறுதியை திமுக அரசு 181நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.
— அங்குசம் செய்திப் பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.