இனி, திருச்சி – சத்திரம் பேருந்து நிலையத்தின் கதி என்ன ? ஆட்சியர் சொன்ன விளக்கம் !
இனி, திருச்சி – சத்திரம் பேருந்து நிலையத்தின் கதி என்ன ? ஆட்சியர் சொன்ன விளக்கம் !
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வந்த அனைத்து பேருந்துகளும் ஜூலை 16 ஆம் தேதி முதலாக, ( பஞ்சப்பூர் ) முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து செயல்படும் என்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் : எந்த பேருந்து ? எந்த வழித்தடம் ? வந்தாச்சு அப்டேட் ! –
திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகளின் வழித்தடங்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை மத்திய பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்ட நகர பேருந்துகள் அனைத்தும் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட்டாலும்; அவை எப்போதும் போல மத்திய பேருந்து நிலையம் வந்து செல்லும் என்பது பயணிகளுக்கு மகிழ்வான அறிவிப்பு தான்.
மேலும், கரூர் மார்க்கமாக, கோவை, திருப்பூர் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல சத்திரம் பேருந்து நிலையம் வந்து செல்லும் என்று அறிவித்துள்ள நிலையில்; ஏற்கெனவே சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கிவரும்
1.பெரம்பலூர், கடலூர், நெய்வேலி,
2.அரியலூர், ஜெயங்கொண்டம்,
3.துறையூர் ஆகிய மூன்று புறநகர் வழித்தடங்கள் குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, மத்திய பேருந்து நிலையத்தை போல, சத்திரம் பேருந்து நிலைமும் இயங்காது அவையும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு மாறிவிடும் என்பதாக வதந்தீ பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த சமயத்தில், சத்திரம் பேருந்து நிலையத்தை பொருத்தமட்டில், தற்போதைய நிலையிலேயே தொடர்ந்து இயங்கும் என்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் வெளியான அறிவிப்பில், சத்திரம் பேருந்து நிலையம் பற்றி எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் புறநகர் பேருந்துகளின் வழித்தடம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சரவணனிடம் பேசினோம். “தற்போதைய நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து இயங்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்பதாக தெரிவிக்கிறார்.
ஆக, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வரும்
1.பெரம்பலூர், கடலூர், நெய்வேலி,
2.அரியலூர், ஜெயங்கொண்டம்,
3.துறையூர் ஆகிய புறநகர் வழித்தடங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதும்; பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும் கரூர் , கோவை, திருப்பூர் மார்க்க புறநகர் பேருந்துகள் வழக்கம்போல சத்திரம் பேருந்து நிலையம் வழியாகவே இயக்கப்படும் என்ற அறிவிப்பும் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து இதுநாள் வரையிலும் நிலவி வந்த குழப்பங்களும் முடிவுக்கு வந்திருக்கிறது.
அங்குசம் செய்திப் பிரிவு