14 வருஷமா பகுதிநேர ஆசிரியர்கள்தான் … மாச சம்பளம் வெறும் 12,500 … எங்களுக்கு எப்போது விடிவு காலம் ?
பள்ளிக்கல்வித்துறையில் 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து கடந்த ஜனவரி 27 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதுபோலவே, திமுக தேர்தல் வாக்குறுதி 181 – இல் சொன்னபடி கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆசிரியர்கள் தரப்பில் முன் வைத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில், ”ஏற்கெனவே ஒதுக்கிய நிதியில் இருந்து காலமுறை சம்பளத்தோடு தொடர் பணி நீட்டிப்புடன் பணிபுரிந்துவந்த பட்டதாரி, முதுகலை, தொழிற்கல்வி, கணினி ஆசிரியர்கள் உள்பட பணியாளர்கள் என 47 ஆயிரம் பேர் இதனால் பலன் அடைந்து உள்ளார்கள். இதற்காக அரசுக்கு கூடுதலாக நிதி செலவு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்பு மூலமாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை பாடங்களில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிசெய்கின்ற 12 ஆயிரம் பேர், தங்களின் 14 ஆண்டுகால தற்காலிக பணியிடங்களையும் நிரந்தரம் செய்யவேண்டும் என கோரிக்கையை அரசிடம் முன்வைக்கிறோம்.
குறிப்பாக, அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக இதோடு 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்றோம். எங்களுக்கு தற்போதும் 12,500 ரூபாய் தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. இதில் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு என எந்த சலுகையுமே கிடையாது என்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். எனவே, இனியாவது அடிப்படை சம்பளம், அகவிலைப்படியுடன் கூடிய காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே இனி எஞ்சியுள்ள காலத்தில் எங்களின் குடும்பத்தை நல்லபடியாக பாத்துக்கொள்ள முடியும். எதிர்வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிலும் குறிப்பாக, திமுகவின் 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடியப்போகிறது. ஆனாலும், இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
47,000 தற்காலிக ஆசிரியா்களின் பணியிடங்களை நிரந்தரம் செய்து தற்போது ஆணையிட்டதை போல், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களையும் நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும்.” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.